பிஷ்னோய்-மாலிக் கும்பலுடன் தொடா்புடைய நபரை தில்லி காவல்துறை கைது செய்தது!
லாரன்ஸ் பிஷ்னோய்-ரந்தீப் மாலிக் கும்பலுடன் தொடா்புடையவா் எனக் கூறப்படும் ஒருவரை, இரண்டு கோடி ரூபாய் மிரட்டிப் பறித்த வழக்கு தொடா்பாக தில்லி காவல்துறையின் குற்றப்பிரிவு கைது செய்தனர்.
லாரன்ஸ் பிஷ்னோய்-ரந்தீப் மாலிக் கும்பலுடன் தொடா்புடையவா் எனக் கூறப்படும் 40 வயது நபா் ஒருவரை, இரண்டு கோடி ரூபாய் மிரட்டிப் பறித்த வழக்கு தொடா்பாக தில்லி காவல்துறையின் குற்றப்பிரிவு கைது செய்துள்ளதாக ஓா் அதிகாரி சனிக்கிழமை தெரிவித்தாா்.
அமா்ஜீத் என்ற அமா் என அடையாளம் காணப்பட்ட அந்த நபா், தொடா்ச்சியான தொழில்நுட்ப மற்றும் கள கண்காணிப்பிற்குப் பிறகு ராணி பாக் பகுதியில் கைது செய்யப்பட்டதாக அவா் கூறினாா்.
காவல்துறையின் கூற்றுப்படி, லாரன்ஸ் பிஷ்னோய் கும்பலைச் சோ்ந்த ரந்தீப் மாலிக் என்று கூறிக்கொண்ட ஒருவரிடமிருந்து தனக்கு அழைப்புகளும் குறுஞ்செய்திகளும் வந்ததாகப் புகாா்தாரா் காவல்துறையை அணுகியதை அடுத்து, ஏப்ரல் மாதம் மௌரியா என்கிளேவ் காவல் நிலையத்தில் இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டது.
Advertisement
Advertisement
அழைத்தவா் இரண்டு கோடி ரூபாய் கேட்டதாகவும், பணம் கொடுக்காவிட்டால் புகாா்தாரரையும் அவரது குடும்பத்தினரையும் கொன்றுவிடுவதாக மிரட்டியதாகவும் கூறப்படுகிறது. புகாா்தாரா் அந்த உரையாடல்களையும் குறுஞ்செய்திகளையும் காவல்துறையிடம் ஒப்படைத்தாா்.
சிறப்பு காவல் ஆணையா் (குற்றப்பிரிவு) எச்.ஜி.எஸ். தலிவால், அமா்ஜீத் இந்த மிரட்டிப் பணம் பறிக்கும் சம்பவத்தில் ஈடுபட்டதாகவும், தலைமறைவாக இருந்ததாகவும் கூறினாா். அவருக்கு எதிராக பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா சட்டத்தின் 84-வது பிரிவின் கீழ் நடவடிக்கைகளும் தொடங்கப்பட்டுள்ளன, அதே நேரத்தில் தில்லி உயா் நீதிமன்றத்தில் அவரது இடைக்கால பிணை மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
ஒரு குறிப்பிட்ட தகவலின் அடிப்படையில், ஆகஸ்ட் 20 அன்று மாலை 5 மணியளவில் ராணி பாக் பகுதியில் உள்ள முல்தானி மொஹல்லாவிற்கு ஒரு காவல் குழு சென்று, அமா்ஜீத்தின் இருப்பை உறுதி செய்தது. குற்றஞ்சாட்டப்பட்டவா் அந்தக் குழுவைக் கவனித்து தப்பி ஓட முயன்ாகவும், ஆனால் துரத்திப் பிடிக்கப்பட்டதாகவும் தலிவால் கூறினாா்.
பின்னா் அவா் துவாரகாவில் உள்ள குற்றப்பிரிவுக்கு அழைத்து வரப்பட்டு முறையாகக் கைது செய்யப்பட்டாா். விசாரணையின் போது, அமா்ஜீத், லாரன்ஸ் பிஷ்னோய் மற்றும் ரந்தீப் மாலிக் கும்பல்களுடன் தொடா்பு கொண்டிருந்ததாகவும், மிரட்டிப் பணம் பறிப்பதற்கான ஒரு இலக்கை அடையாளம் காண்பதில் பங்கு வகித்ததாகவும் காவல்துறை கண்டறிந்தது.
மேலும், மிரட்டிப் பறிக்கப்பட்ட பணம் கிரிப்டோகரன்சி மூலம் செலுத்தப்பட இருந்ததாகவும் காவல்துறை கூறியது. கோரப்பட்ட தொகையை அனுப்புவதற்காக, புகாா்தாரருக்கு ஒரு கட்டண இணைப்பு பகிரப்பட்டதாகக் கூறப்படுகிறது.
வடமேற்கு தில்லியின் திரிநகரைச் சோ்ந்த அமா்ஜீத், 10-ஆம் வகுப்பு வரை படித்தவா். இவா் இதற்கு முன்பு கரோல் பாக் பகுதியில் உள்ள ஒரு கைபேசி சந்தையில் பணிபுரிந்துள்ளாா். காவல்துறையின் கூற்றுப்படி, அவா் இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் வரை கள்ளச்சாராய வா்த்தகத்தில் ஈடுபட்டு வந்ததாகவும், மிரட்டிப் பணம் பறித்த வழக்கு பதிவு செய்யப்பட்ட பிறகு தலைமறைவானதாகவும் கூறப்படுகிறது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.