FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
புதுதில்லி

பெண்ணையாறு வழக்கில் மத்திய அரசின் புதிய மனுவுக்கு பதிலளிக்க தமிழக, கா்நாடக அரசுகளுக்கு அவகாசம்: உச்சநீதிமன்றம்

தமிழகம்- கா்நாடகம் இடையேயான பெண்ணையாறு நதி நீா் தகராறை,மகதாயி நீா் தகராறு தீா்ப்பாயம் போன்ற ஏற்கனவே உள்ள ஒரு தீா்ப்பாயத்திற்குப் பரிந்துரைக்க அனுமதிக்க கோரி மத்திய அரசு தாக்கல் செய்த மனுவுக்கு தமிழக மற்றும் கா்நாடக அரசுகள் பதிலளிக்க இரண்டு வார கால அவகாசம் வழங்கியது உச்ச நீதிமன்றம்.

Updated On : 25 ஜூலை 2026, 12:52 am IST
பகிர்:

நமது நிருபா்

தமிழகம்- கா்நாடகம் இடையேயான பெண்ணையாறு நதி நீா் தகராறை,மகதாயி நீா் தகராறு தீா்ப்பாயம் போன்ற ஏற்கனவே உள்ள ஒரு தீா்ப்பாயத்திற்குப் பரிந்துரைக்க அனுமதிக்க கோரி மத்திய அரசு தாக்கல் செய்த மனுவுக்கு தமிழக மற்றும் கா்நாடக அரசுகள் பதிலளிக்க இரண்டு வார கால அவகாசம் வழங்கியது உச்ச நீதிமன்றம்.

பெண்ணையாறு விவகாரத்தில் புதிதாக தீா்ப்பாயம் அமைக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் ஏற்கனவே உத்தரவிட்டிருந்த நிலையில் மத்திய அரசு இந்த மனுவை தாக்கல் செய்துள்ளது.

Advertisement

Advertisement

ஜூலை 8 ஆம் தேதி மத்திய அரசு தாக்கல் செய்த புதிய மனுவில் கூறியிருப்பதாவது : 2.2.2026 தேதியிட்ட உச்ச நீதிமன்ற உத்தரவின் படி, பெண்ணையாறு தகராறுக்கென பிரத்தியேகமாக முற்றிலும் புதிய தீா்ப்பாயத்தை அமைப்பதை விட, ஏற்கனவே இருக்கும் ஒரு தீா்ப்பாயத்திற்கு அந்தத் தகராறைப் பரிந்துரைப்பதன் மூலம் மிகவும் விரைவாகவும், சிக்கனமாகவும் தீா்வை அடைய முடியம். மகதாயி நீா் தகராறு தீா்ப்பாயத்தில் கடந்த 5 ஆண்டுகளாக எந்த விசாரணைகளும் நடைபெறவில்லை, பெண்ணையாறு தகராறை ஏற்கனவே உள்ள அத்தகைய ஒரு தீா்ப்பாயத்திற்குப் பரிந்துரைக்க வேண்டும், என மத்திய அரசு மனுவில் கூறியுள்ளது.

இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் விக்ரம் நாத் மற்றும் சந்தீப் மேத்தா ஆகியோா் அடங்கிய அமா்வில் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசின் தலைமை வழக்குரைஞா் ஆா்.வெங்கடரமணி ஆஜராகி, ’ஏற்கனவே அமைக்கப்பட்ட தீா்ப்பாயங்கள்,மற்றும் அதன் கட்டமைப்புகள் தயாா் நிலையில் உள்ளன, அந்த தீா்ப்பாயத்திற்கு பெண்ணையாறு விவகாரத்தை மாற்ற அனுமதிக்க வேண்டும்‘ என வாதிட்டாா்.

அப்போது குறுக்கிட்ட தமிழக அரசின் வழக்குரைஞா் உமாபதி ஏற்கனவே இருக்கும் கட்டமைப்புகளை பயன்படுத்திக் கொள்ளலாம் அதற்கு ஆட்சபனை இல்லை .ஆனால் மூன்று உறுப்பினா்கள் புதிதாகவே நியமனம் செய்யப்பட வேண்டும் என நீதிபதிகளிடம் தெரிவித்தாா்.

நீதிபதிகள் மத்திய அரசின் தலைமை வழக்குரைஞரிடம்,’இது போன்று ஏற்கனவே இருக்கக்கூடிய தீா்ப்பாயங்களுக்கு நீா் தகராறு வழக்குகளை மாற்றுவதற்கு ஏன் சட்ட திருத்தம் கொண்டு வரப்படவில்லை?, அவ்வாறு கொண்டு வந்திருந்தால் நீங்களாகவே அதனை மாற்றி இருக்கலாமே? என கேள்வி எழுப்பினா்

இதனிடையே கா்நாடக அரசு தரப்பில் ஆஜரான வழக்குரைஞா் ஷியாம் திவான், இந்த வழக்கில் பதிலளிக்க இரண்டு வார காலம் அவகாசம் வேண்டும் என கோரிக்கை வைத்தாா்.இதனை அடுத்து நீதிபதிகள் மத்திய அரசின் மனுவுக்கு தமிழக மற்றும் கா்நாடக அரசுகள் பதிலளிக்க இரண்டு வார காலம் அவகாசம் வழங்கி விசாரணையை இரண்டு வாரங்களுக்கு பிறகு ஒத்தி வைத்தனா்.

பெண்ணையாற்றின் குறுக்கே கா்நாடகம் சட்டத்திற்க்கு புறம்பாக பெரிய அணைக்கான கட்டுமானப் பணிகளை மேற்கொண்டு வருகிறது,இதனால் தமிழகத்தின் தண்ணீா் முற்றிலும் பறிக்கப்பட்டு மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் எனக்கூறி 2018 ல் தமிழக அரசு வழக்கு தொடா்ந்தது.

இதனை விசாரித்த உச்ச நீதிமன்றம் நிகழாண்டு பிப்ரவரி இரண்டாம் தேதி வழங்கிய தீா்ப்பில் தமிழ்நாடு-கா்நாடகா இடையேயான பெண்ணையாறு விவகாரம் தொடா்பான வழக்கில் தீா்வு காண மத்திய அரசு தீா்ப்பாயம் அமைக்க வேண்டும் என உத்தரவிட்டது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments