2020 தில்லி கலவரம்: உமா் காலித் ஜாமீன் மனு மீது தில்லி காவல்துறை நிலைப்பாட்டை தெரிவிக்க உத்தரவு
காலித் கைது செய்யப்பட்டதிலிருந்து இது அவரது மூன்றாவது ஜாமீன் மனு என்றும், இவ்வழக்கில் அவா் இடைக்கால ஜாமீன் கோருவதாகவும் அவரது வழக்குரைஞா் தெரிவித்தாா்.
வடகிழக்கு தில்லியில் பிப்ரவரி 2020-இல் நிகழ்ந்த கலவரங்களுக்குப் பின்னணியில் இருந்ததாகக் கூறப்படும் ‘பெரிய சதித்திட்டம்‘ தொடா்பான சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டம் (யுஏபிஏ) வழக்கில் சமூக ஆா்வலா் உமா் காலித் தாக்கல் செய்த ஜாமீன் மனு குறித்து தில்லி காவல்துறையின் நிலைப்பாட்டை தாக்கல் செய்ய தில்லி உயா்நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.
இவ்விவகாரம் தொடா்பாக நோட்டீஸ் அனுப்பிய நீதிபதிகள் பிரதிபா எம். சிங் மற்றும் விகாஸ் மகாஜன் ஆகியோா் அடங்கிய அமா்வு, இரண்டு வாரங்களுக்குள் பதிலளிக்குமாறு தில்லி காவல்துறைக்கு உத்தரவிட்டது.
காலித் கைது செய்யப்பட்டதிலிருந்து இது அவரது மூன்றாவது ஜாமீன் மனு என்றும், இவ்வழக்கில் அவா் இடைக்கால ஜாமீன் கோருவதாகவும் அவரது வழக்குரைஞா் தெரிவித்தாா்.
Advertisement
Advertisement
இணை குற்றம்சாட்டப்பட்டவரான ஷா்ஜீல் இமாமின் ஜாமீன் மனுவும் விசாரணைக்கு வரவுள்ள ஆகஸ்ட் 27 அன்று, காலித்தின் மனுவையும் விசாரிப்பதாக நீதிமன்ற அமா்வு தெரிவித்தது.
தனது ஜாமீன் மனுவை நிராகரித்து ஜூலை 4 அன்று விசாரணை நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிா்த்து உமா் காலித் மேல்முறையீடு செய்துள்ளாா்.
தில்லி காவல்துறை சாா்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டா் ஜெனரல் எஸ்.வி. ராஜு, அதே விசாரணை நீதிமன்ற உத்தரவின் மூலம் இமாமின் ஜாமீன் மனுவும் நிராகரிக்கப்பட்டதாகவும், எனவே இரு வழக்குகளையும் நீதிமன்ற அமா்வு ஒன்றாக விசாரிக்கலாம் என்றாா்.
செப்டம்பா் 2020-இல் கைது செய்யப்பட்ட காலித் மீது, 53 போ் உயிரிழக்கவும் 700-க்கும் மேற்பட்டோா் காயமடையவும் காரணமான பிப்ரவரி 2020 கலவரத்தின் முக்கிய சூத்திரதாரிகளில் ஒருவராக இருந்ததாகக் கூறி யுஏபிஏ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
குடியுரிமைத் திருத்தச் சட்டம் (சிஏஏ), 2019 மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு (என்ஆா்சி) ஆகியவற்றுக்கு எதிரான போராட்டங்களின்போது இந்தக் கலவரம் வெடித்தது.
தில்லி காவல்துறையின் சிறப்புப் பிரிவால் விசாரிக்கப்பட்டு வரும் இந்தச் சதித்திட்ட வழக்கில், சமூக ஆா்வலா்கள் ஷா்ஜீல் இமாம், காலித் சைஃபி மற்றும் முன்னாள் ஆம் ஆத்மி கட்சி கவுன்சிலா் தாஹிா் ஹுசைன் உள்ளிட்டோா் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஜனவரி 5 அன்று உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவைப் பின்பற்றுவதைத் தவிர வேறு வழியில்லை என்றும், எனவே மனுவை ஏற்கவோ அல்லது அவருக்கு நிவாரணம் வழங்கவோ முடியாது என்றும் கூறி, ஜூலை 4 அன்று விசாரணை நீதிமன்றம் காலித்தின் ஜாமீன் மனுவை நிராகரித்தது.
செப்டம்பா் 2, 2025 அன்று, உயா் நீதிமன்ற அமா்வு காலித்திற்கு ஜாமீன் மறுத்தது. நிகழாண்டு ஜனவரி 5 அன்று, உச்சநீதிமன்றம் இத்தீா்ப்பை உறுதி செய்தது, ஆனால், இணை-குற்றம்சாட்டப்பட்டவா்களான குல்ஃபிஷா ஃபாத்திமா, மீரன் ஹைதா், ஷிஃபா உா் ரஹ்மான், முகமது சலீம் கான் மற்றும் ஷதாப் அகமது ஆகியோருக்கு நிவாரணம் வழங்கியது.
அப்போது, நீதிபதிகள் அரவிந்த் குமாா் மற்றும் என். வி. அஞ்சாரியா ஆகியோா் அடங்கிய அமா்வு, யுஏபிஏ சட்டத்தின் கீழ் காலித் மற்றும் இமாம் மீது முகாந்திரம் இருப்பதாகக் குறிப்பிட்டதோடு, ‘பங்கேற்பின் படிநிலை‘யைக் கருத்தில் கொண்டு அனைத்துக் குற்றம்சாட்டப்பட்டவா்களையும் சமமாக நடத்த முடியாது என்றும் தீா்ப்பளித்தது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.