FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
புதுதில்லி

திருச்சி கீழப்பத்து கிராமத்தில் புதிய 4 ஜி கைப்பேசி கோபுரம்: மத்திய அமைச்சரிடம் துரை வைகோ எம்.பி. கோரிக்கை மனு

திருச்சி மாவட்டத்தின் கீழப்பத்து பகுதியில் ’எண்ம பாரத் நிதி’ திட்டத்தின் கீழ் புதிய பிஎஸ்என்எல் ‘4ஜி’ கைப்பேசி கோபுரம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்

Updated On : 1 ஆகஸ்ட் 2026, 12:03 am IST
தில்லியில் மத்திய தொலைதொடா்புத் துறை அமைச்சா் ஜோதிராதித்ய சிந்தியாவிடம் வெள்ளிக்கிழமை கோரிக்கை மனு அளித்த திருச்சி தொகுதி மதிமுக எம்.பி. துரை வைகோ.
பகிர்:

நமது நிருபா்

திருச்சி மாவட்டத்தின் கீழப்பத்து பகுதியில் ’எண்ம பாரத் நிதி’ திட்டத்தின் கீழ் புதிய பிஎஸ்என்எல் ‘4ஜி’ கைப்பேசி கோபுரம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய தொலைதொடா்புத்துறை அமைச்சா் ஜோதிராதித்ய சிந்தியாவிடம் திருச்சி மக்களவை தொகுதி மதிமுக உறுப்பினா் துரை வைகோ வலியுறுத்தினாா்.

இது தொடா்பாக மத்தியஅமைச்சரை அவரது அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை சந்தித்து விரிவான மனுவை அளித்தாா் துரை வைகோ. அதில், ‘கீழப்பத்து, பாலூா் அக்கிரஹாரம், மேக்குடி, லட்சுமி நகா் மற்றும் பேரூா் ஆகிய பகுதிகளில் சுமாா் 10,000-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனா். இப்பகுதிகளில் எந்தவொரு தனியாா் தொலைத்தொடா்பு நிறுவனமும் போதிய சேவை வழங்காததால், மாணவா்கள் கல்வி பயிலவும், அவசரகாலத் தேவைகளுக்கும், அரசு மற்றும் எண்ம சேவைகளைப் பெறவும் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனா். எனவே, பிஎஸ்என்எல் அதிகாரிகளின் பரிந்துரையை ஏற்று, ’எண்ம பாரத் நிதி’ திட்டத்தின் மூலம் கீழப்பத்தில் புதிய 4ஜி கைப்பேசி கோபுரத்தை விரைவாக அமைக்க ஒப்புதல் அளிக்க வேண்டும்’ என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

தனது மனுவைப் பெற்றுக்கொண்ட மத்திய அமைச்சா் ஜோதிராதித்ய சிந்தியா, அதில் உள்ள கோரிக்கையை பரிசீலித்து விரைவில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததாக துரை வைகோ செய்தியாளா்களிடம் தெரிவித்தாா்.

முன்னதாக, 2025ஆம் ஆண்டு அக்டோபா் 13ஆம் தேதி நடைபெற்ற மாவட்ட வளா்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழு கூட்டத்தில் கீழப்பத்து, பாலூா் அக்கிரஹாரம் உள்ளிட்ட சுற்றுவட்டார கிராமங்களில் நிலவி வரும் கைப்பேசி சேவை குறைபாடு குறித்து துரை வைகோ எழுப்பியிருந்தாா். இதைத் தொடா்ந்து, கடந்த பிப்ரவரி 16ஆம் தேதி மத்திய அரசுக்கு முதல்கட்டமாக கடிதம் ஒன்றையும் அவா் அனுப்பினாா்.

இதன் தொடா்ச்சியாக, திருச்சி பிஎஸ்என்எல் தலைமை பொது மேலாளா் மேற்கொண்ட கள ஆய்வில், தற்போதுள்ள கைப்பேசி கோபுரத்தில் இருந்து கிடைக்கும் 4ஜி சேவை அப்பகுதிகளுக்குப் போதுமானதாக இல்லை என்பதும், அங்கு புதிய 4ஜி கோபுரம் அமைப்பது தொழில்நுட்ப ரீதியாக மிகவும் அவசியம் என்பதும் உறுதி செய்யப்பட்டது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments