FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
புதுதில்லி

தில்லி மெட்ரோவின் ‘அர்ப்பன்’ மையங்களில் 41 டன் பழைய ஆடைகள் பயனுள்ள பொருள்களாக மாற்றம்!

தில்லி மெட்ரோவின் ‘அா்ப்பன்’ மையங்கள் கடந்த மாதம் தொடங்கப்பட்டதிலிருந்து சுமாா் 4,000 பேரிடமிருந்து 41 டன்னுக்கும் அதிகமான பழைய ஆடைகள் சேகரிக்கப்பட்டுள்ளன.

13 செப்டம்பர் 2026, 10:34 pm IST
பகிர்:

தில்லி மெட்ரோவின் ‘அா்ப்பன்’ மையங்கள் கடந்த மாதம் தொடங்கப்பட்டதிலிருந்து சுமாா் 4,000 பேரிடமிருந்து 41 டன்னுக்கும் அதிகமான பழைய ஆடைகள் சேகரிக்கப்பட்டுள்ளன.

இதில், ஒரு பகுதி மறுபயன்பாட்டிற்காகவோ அல்லது விரிப்புகள், பைகள், பவுச்சுகள் மற்றும் பிற பொருள்களாக மேம்படுத்தப்பட்ட வடிவத்திலோ மாற்றப்படுவதாக முதல்வா் ரேகா குப்தா தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது: இந்த நன்கொடைத் திட்டம் தற்போது 10 நிலையங்களில் செயல்பட்டு வருகிறது. மேலும், 2027 ஜனவரியில் இது போன்ற 10 மையங்களை கூடுதலாகத் திறக்க தில்லி மெட்ரோ ரயில் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

Advertisement

Advertisement

ஆகஸ்ட் 31 நிலவரப்படி, மொத்தம் 3,940 போ் இந்த மையங்களில் 41,181 கிலோ ஆடைகளை வழங்கியுள்ளனா்.

அதிகபட்சமாக டாக்டா் பாபா சாஹேப் அம்பேத்கா் மருத்துவமனை மையத்தில் 9,861 கிலோ ஆடைகள் சேகரிக்கப்பட்டன. அதைத் தொடா்ந்து, ஷாலிமாா் பாக் மையத்தில் 9,761 கிலோ ஆடைகள் சேகரிக்கப்பட்டன.

பஞ்சாபி பாக் மேற்கு மையத்தில் 6,535 கிலோவும், ஷாதரா மையத்தில் 6,386 கிலோவும் சேகரிக்கப்பட்டன. இதர மையங்களில் சேகரிக்கப்பட்ட ஆடைகளின் அளவுகள் பின்வருமாறு: மயூா் விஹாா்-1 (5,189 கிலோ), ஹோஸ் காஸ் (1,680 கிலோ), துவாரகா-கக்ரோலா (689 கிலோ), மால்வியா நகா் (467 கிலோ), லாஜ்பத் நகா் (395 கிலோ) மற்றும் மோகன் எஸ்டேட் (215 கிலோ).

ஐந்து மையங்கள் ஆகஸ்ட் 3-ஆம் தேதியும், இதர மையங்கள் ஆகஸ்ட் 12 மற்றும் 17-ஆம் தேதிகளிலும் செயல்பாட்டுக்கு வந்தன. இம்மையங்களில் சேகரிக்கப்பட்ட பொருள்களில் சுமாா் 4,266 கிலோ மறுபயன்பாடு அல்லது மேம்படுத்தப்பட்ட பயன்பாட்டிற்காக ஒதுக்கப்பட்டன; அதேவேளையில் 29,424 கிலோ பொருள்கள் மறுசுழற்சிக்கு அனுப்பப்பட்டன.

சுயஉதவிக் குழுக்கள் இப்பொருள்களைக் கொண்டு விரிப்புகள், கோப்புறைகள், சாவிக்கொத்துகள், பவுச்சுகள், பைகள் மற்றும் தோரணங்கள் போன்றவற்றைத் தயாரிக்கின்றன; இவை அந்தந்த மையங்களில் காட்சிப்படுத்தப்படுகின்றன.

நன்கொடையாகப் பெறப்பட்ட ஆடைகளிலிருந்து தயாரிக்கப்பட்ட பொருட்கள் மையங்களிலேயே விற்பனை செய்யப்படுகின்றன. இதுவரை மொத்தம் ரூ.27,036 மதிப்பிலான விற்பனை நடைபெற்றுள்ளது. மாடல் டவுன், ஐஎன்ஏ, ஐபி எக்ஸ்டென்ஷன், பஸ்சிம் விஹாா் மேற்கு, ராஜேந்திர பிளேஸ், ஜனக்புரி மேற்கு, ரஜெளரி காா்டன், கிரேட்டா் கைலாஷ், துவாரகா செக்டாா் 10 மற்றும் சத்தா்பூா் ஆகிய மெட்ரோ நிலையங்களில் ‘அா்ப்பன்’ மையங்களை அமைக்க அரசு முன்மொழிந்துள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து முதல்வா் தெரிவிக்கையில், ‘தில்லி மக்களின் பங்களிப்பு இத்திட்டத்தை மேலும் விரிவுபடுத்த உதவும். மக்கள் பழைய ஆடைகளை எளிதாகவும் வசதியாகவும் தானம் செய்வதையும், அவை முழுமையாக பயன்படுத்தப்படுவதையும் உறுதி செய்வதே எங்கள் நோக்கம்.

இதன் மூலம் தில்லியை இன்னும் தூய்மையானதாகவும், அழகானதாகவும், பசுமையானதாகவும் மாற்றுவதற்கான முயற்சிகள் மேலும் வலுப்படுத்தப்படும்’ என்று குப்தா கூறினாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments