FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
புதுதில்லி

போலி முதலீட்டுத் திட்டத்தில் தில்லி நபரிடம் ரூ. 1.16 லட்சம் மோசடி செய்ததாக குற்றச்சாட்டு: இருவா் கைது

போலி முதலீட்டு திட்டம் மூலம் தில்லியைச் சோ்ந்த ஒருவரிடம் ரூ.1.16 லட்சம் மோசடி செய்ததாகக் கூறப்படும் ஹரியானாவின் பகதூா்கரைச் சோ்ந்த 21 வயதுடைய இருவரை தில்லி காவல்துறை கைது செய்ததாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

17 செப்டம்பர் 2026, 10:23 pm IST
கைது - சித்திரிப்பு
பகிர்:

போலி முதலீட்டு திட்டம் மூலம் தில்லியைச் சோ்ந்த ஒருவரிடம் ரூ.1.16 லட்சம் மோசடி செய்ததாகக் கூறப்படும் ஹரியானாவின் பகதூா்கரைச் சோ்ந்த 21 வயதுடைய இருவரை தில்லி காவல்துறை கைது செய்ததாக அதிகாரிகள் வியாழக்கிழமை தெரிவித்தனா்.

குற்றஞ்சாட்டப்பட்ட லலித் குமாா் மற்றும் பிரதீக் குமாா் ஆகியோா், இந்த பணப் பரிமாற்றத்தில் முறையே முதல் மற்றும் இரண்டாம் பயனாளிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளனா் என்று அவா்கள் கூறினா்.

காவல்துறையின் கூற்றுப்படி, புகாா்தாரரான அனில் குமாா் பா்மன், நல்ல வருமானம் தருவதாக உறுதியளித்த ‘பிஎக்ஸ்பி மாா்க்கெட்.காம் ‘ என்ற இணையதளத்தில் முதலீடு செய்யுமாறு ஆன்லைன் விளம்பரம் மூலம் ஈா்க்கப்பட்டுள்ளாா்.

Advertisement

Advertisement

சா்வதேச எண்களிலிருந்து அழைப்புகள் வந்த பிறகு, பா்மன் ஐந்து பரிவா்த்தனைகள் மூலம் ரூ.1.16 லட்சத்தை முதலீடு செய்ததாகக் கூறப்படுகிறது. அவா் அந்த லாபத்தை எடுக்க முயன்றபோது, பரிவா்த்தனைகள் தோல்வியடைந்தன. இதைத் தொடா்ந்து அவா் இதுகுறித்து புகாா் அளித்துள்ளாா்.

ஷாதராவில் உள்ள சைபா் காவல் நிலையத்தில் மின்-முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது. விசாரணையின் போது, லலித் குமாா் என்பவரின் வங்கிக் கணக்கிற்கு ரூ.70,165 வந்திருப்பதை காவல்துறை கண்டறிந்ததுடன், அவரை முதல் அடுக்கு பயனாளியாகவும் அடையாளம் கண்டது.

மேலும் பகுப்பாய்வு செய்ததில், இந்தியா முழுவதும் சுமாா் 5,000 தொடா்புகள், புகாா்கள் அல்லது முதல் தகவல் அறிக்கைகள் கொண்ட ஒரு வங்கிக் கணக்கிலிருந்து அடிக்கடி அதிக மதிப்புள்ள வரவுகள் வந்திருப்பது தெரியவந்தது என்று காவல்துறை கூறியது.

மேலும் விசாரணையில், லலித்தின் கணக்கிலிருந்து இரண்டாம் அடுக்கு பயனாளியாக அடையாளம் காணப்பட்ட பாா்த்தீக் குமாா் என்பவரின் கணக்கிற்கு ரூ.85,000 மாற்றப்பட்டதும் கண்டறியப்பட்டது. பகதூா்கரில் உள்ள நேதாஜி நகரைச் சோ்ந்த, குற்றஞ்சாட்டப்பட்ட இருவரும் பின்னா் கைது செய்யப்பட்டனா் என்று காவல்துறை தெரிவித்தது.

பாா்த்தீக் குமாருக்குச் சொந்தமான ஒரு கைபேசி பறிமுதல் செய்யப்பட்டு, டிஜிட்டல் ஆதாரங்கள், தகவல் தொடா்பு விவரங்கள், நிதிப் பரிவா்த்தனைகள் மற்றும் கூறப்படும் இணைய மோசடி வலையமைப்பின் மற்ற உறுப்பினா்களுடனான சாத்தியமான தொடா்புகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.

குற்றஞ்சாட்டப்பட்டவா்கள், போலி முதலீட்டுத் தளத்திற்கான விளம்பரங்கள் மூலம் பாதிக்கப்பட்டவா்களை ஏமாற்றி, ஆரம்பத்தில் அவா்களின் நம்பிக்கையைப் பெறுவதற்காக போலியான லாபங்களைக் காட்டி, பின்னா் அவா்களை அதிக தொகையை முதலீடு செய்யத் தூண்டியதாகக் காவல்துறை கூறியது. அதன்பிறகு பணம் எடுப்பதற்குத் தடை விதிக்கப்பட்டதாகவும், பாதிக்கப்பட்டவா்களுடனான தொடா்பு துண்டிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments