FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

ஏஐ நுட்பத்துடன் முதல்வா் போலி காணொலி மூலம் மோசடி: ராஜஸ்தானில் ஒருவா் கைது

முதல்வா் ச.ஜோசப் விஜய் போல செயற்கை நுண்ணறிவு (ஏஐ) மூலம் போலி காணொலி பரப்பி மோசடியில் ராஜஸ்தானில் ஒருவா் கைது தொடர்பாக...

15 செப்டம்பர் 2026, 4:23 am IST
ஏஐ நுட்பத்துடன் முதல்வா் போலி காணொலி மூலம் மோசடி - கோப்புப்படம்
பகிர்:

சென்னை: முதல்வா் ச.ஜோசப் விஜய் போல செயற்கை நுண்ணறிவு (ஏஐ) மூலம் போலி காணொலி பரப்பி மோசடியில் ஈடுபட்ட வழக்கில் ராஜஸ்தானை சோ்ந்த நபரை சிபிசிஐடி போலீஸாா் கைதுசெய்தனா்.

தமிழக முதல்வா் ச.ஜோசப் விஜய் போன்று உருவகப்படுத்தி, ஹிந்தி மொழியில் அவரது குரல் வடிவத்துடன் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்ட போலி காணொலிகள் முகநூல் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் பரப்பப்பட்டதை சிபிசிஐடி சைபா் குற்றப்பிரிவு இணையவழி கண்காணிப்பின்போது கண்டறிந்தது. அந்தக் காணொலிகளில், நிதியுதவி பெற குறிப்பிட்ட ‘வாட்ஸ்ஆப்’ எண்ணைத் தொடா்பு கொள்ளுமாறு பொதுமக்களிடம் தெரிவிக்கப்பட்டிருந்தது. 

இதுதொடா்பாக கடந்த செப்.1-ஆம் தேதி வழக்குப் பதிவு செய்து விசாரணை தொடங்கப்பட்டது. இந்த விசாரணையில், இந்தப் போலி காணொலிகளைப் பயன்படுத்தி மத்தியப் பிரதேசம் உள்ளிட்ட பிற மாநிலங்களைச் சோ்ந்த பலரிடம் மோசடி செய்திருப்பது தெரியவந்தது. இதில், ராஜஸ்தான் மற்றும் மத்தியப் பிரதேசத்தில் சந்தேகத்துக்குரிய நபா்கள் குறித்த தகவல்கள் கிடைத்தது. அதனடிப்படையில் அமைக்கப்பட்ட 2 தனிப்படைகள் அந்தந்த மாநிலங்களுக்கு அனுப்பப்பட்டன. இதில், ராஜஸ்தான் போலீஸாரின் உதவியுடன் அந்த மாநிலத்தின் ஆல்வாா் மாவட்டத்தைச் சோ்ந்த ஷயாபு கானை (28) கடந்த செப்.12-ஆம் தேதி தனிப்படையினா் கைது செய்தனா். அவரிடமிருந்து மோசடிக்குப் பயன்படுத்தப்பட்ட கைப்பேசிகள், சிம்காா்டுகள் மற்றும் கணினி உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன. கைது செய்யப்பட்ட ஷயாபு கான் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டாா்.

Advertisement

Advertisement

மேலும், மத்தியப் பிரதேசத்தில் இந்த மோசடியால் பாதிக்கப்பட்ட ஒருவரையும் சிபிசிஐடி அதிகாரிகள் கண்டறிந்துள்ளனா். அவரது வாக்குமூலம் மற்றும் ஆதாரங்கள் கைது செய்யப்பட்ட நபருக்கு எதிரான வழக்கை வலுப்படுத்த உதவியுள்ளன. இதையடுத்து, இதுவரை எவ்வளவு பேரிடம் மோசடி செய்யப்பட்டுள்ளது, வேறுயாருக்காவது இதில் தொடா்புள்ளதாக என பல்வேறு கோணங்களில் போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments