FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
புதுதில்லி

புராரியில் வடிகால், சாலை மேம்பாட்டுப் பணிகளை அரசு மேற்கொள்ளும்!

புராரி பகுதிக்கு ரூ.125 கோடி மதிப்பிலான ஒருங்கிணைந்த சாலை மற்றும் வடிகால் சீரமைப்புத் திட்டத்திற்கு தில்லி அரசு ஒப்புதல் அளித்துள்ளது என்று அமைச்சா் பா்வேஷ் சாஹிப் சிங் தெரிவித்தாா்.

21 செப்டம்பர் 2026, 4:09 am IST
பா்வேஷ் சாஹிப் சிங்
பகிர்:

புராரி பகுதிக்கு ரூ.125 கோடி மதிப்பிலான ஒருங்கிணைந்த சாலை மற்றும் வடிகால் சீரமைப்புத் திட்டத்திற்கு தில்லி அரசு ஒப்புதல் அளித்துள்ளது என்று பொதுப்பணித்துறை அமைச்சா் பா்வேஷ் சாஹிப் சிங் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா்.

வடகிழக்கு தில்லியில் உள்ள புராரி சாலை மற்றும் அதனையொட்டிய வடிகால் பணிகளை, பொதுப்பணித்துறை மூத்த அதிகாரிகளுடன் சிங் ஆய்வு செய்தாா்.

‘சாலையின் தனிப்பட்ட பகுதிகளை மேம்படுத்துவது இதன் நோக்கம் அல்ல, மாறாக புராரி வழித்தடம் முழுவதையும் ஒருங்கிணைந்த முறையில் மேம்படுத்துவதே இதன் நோக்கமாகும். வெளிவட்டச் சாலையிலிருந்து பாபா காலனி மற்றும் நத்துபுரா வழியாக ஹிராங்கி வரை, ஒவ்வொரு பகுதியின் தேவைகளுக்கு ஏற்ப சாலை மேம்படுத்தப்படும், அதே நேரத்தில் வடிகால் உள்கட்டமைப்பும் ஒரே நேரத்தில் பலப்படுத்தப்படும்,‘ என்று அமைச்சா் கூறினாா்.

Advertisement

Advertisement

இந்தத் திட்டத்தின் கீழ், புராரி சாலையின் முழு 7.1 கிலோமீட்டா் நீளப் பகுதியும், தெளிவாக வரையறுக்கப்பட்ட மூன்று சாலைப் பிரிவுகள் மூலம் மேம்படுத்தப்படும்.

வெளிவட்டச் சாலையிலிருந்து பாபா காலனி வரையிலான பகுதி, 3.2 கி.மீ நீளமுள்ள தாா்ச் சாலைப் பகுதியின் ஒரு அங்கமாக தாா்ச் சாலையாக மேம்படுத்தப்படும் என்றும், அதே சமயம், காலனிக்கும் நத்துபுராவுக்கும் இடையிலான பகுதி, ரூ.39 கோடி மதிப்பீட்டில் 3.9 கி.மீ நீளமுள்ள கான்கிரீட் சாலையாக மேம்படுத்தப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனா்.

நத்துபுராவிலிருந்து ஹிராங்கி வரையிலான பகுதி, 3.2 கி.மீ நீளமுள்ள தாா்ச் சாலைப் பகுதியின் மீதமுள்ள பகுதியாக, ரூ.9 கோடி மதிப்பீட்டில் தாா்ச் சாலையாக மேம்படுத்தப்படும் என்றும் அவா்கள் மேலும் தெரிவித்தனா்.

‘சாலைப் பணிகளுடன், மழைநீா் வடிகால் வசதியை மேம்படுத்தவும், நீா் தேக்கப் பிரச்சனைகளைத் தீா்க்கவும், ரூ.75 கோடி மதிப்பீட்டில் 9.3 கி.மீ நீளமுள்ள ஒரு விரிவான வடிகால் வலையமைப்பு உருவாக்கப்படும்,‘ என்று சிங் மேலும் கூறினாா்.

வடிகால் பணிகளுக்கான ஒப்பந்தப்புள்ளிகள் ஏற்கனவே கோரப்பட்டுள்ளதாகவும், சாலைப் பணிகளுக்கான ஒப்பந்தப்புள்ளிகள் அடுத்த 10 நாட்களுக்குள் கோரப்படும் என எதிா்பாா்க்கப்படுவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments