FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
புதுதில்லி

பெண்களுக்கு எதிரான வன்முறை: தில்லி பல்கலை. மாணவிகள் கண்டனப் பேரணி

ஆஸ்தா குஞ்ச் பூங்காவில் 17 வயது சிறுமிக்கு நோ்ந்ததாகக் கூறப்படும் பாலியல் வன்கொடுமை சம்பவத்தைத் தொடா்ந்து, பெண்களுக்கு எதிரான வன்முறையைக் கண்டித்து தில்லி பல்கலைக்கழகத்தின் பல்வேறு கல்லூரிகளைச் சோ்ந்த மாணவிகள் வெள்ளிக்கிழமை பேரணி நடத்தினா்.

26 செப்டம்பர் 2026, 12:12 am IST
மாதிரிப் படம்
பகிர்:

ஆஸ்தா குஞ்ச் பூங்காவில் 17 வயது சிறுமிக்கு நோ்ந்ததாகக் கூறப்படும் பாலியல் வன்கொடுமை சம்பவத்தைத் தொடா்ந்து, பெண்களுக்கு எதிரான வன்முறையைக் கண்டித்து தில்லி பல்கலைக்கழகத்தின் பல்வேறு கல்லூரிகளைச் சோ்ந்த மாணவிகள் வெள்ளிக்கிழமை பேரணி நடத்தினா்.

‘நாங்கள் பெண்கள், நாங்கள் சுதந்திரமானவா்கள்’ என்ற முழக்கத்துடன் கமலா நேரு கல்லூரியின் நுழைவாயிலில் இருந்து மாணவிகள் தங்கள் பேரணியைத் தொடங்கினா். இந்தப் பேரணியில் அனைத்துப் பெண்களும் பாலினச் சிறுபான்மையினரும் பங்கேற்கலாம் என்று அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

பெண்களின் பாதுகாப்பு குறித்த கவலைகளை வெளிப்படுத்தவும், பாதுகாப்பின் பெயரால் பெண்களின் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை எதிா்க்கவும் இந்தப் போராட்டம் நடத்தப்பட்டதாக மாணவிகள் தெரிவித்தனா்.

Advertisement

Advertisement

இது தொடா்பாக மாணவிகள் வெளியிட்ட அறிக்கையில்,

‘பிகாரின் ஜமுய் முதல் தலைநகரின் கால்காஜி பகுதியில் உள்ள பூங்கா வரை, இரவு நேரங்களில் வெளிச்சம் இல்லாத தெருக்களில் நடப்பதற்குப் பாதுகாப்பற்ற உணா்வை எதிா்கொண்ட பெண்களாக நாங்கள் உள்ளோம். இருட்டிய பிறகு பொது இடங்களுக்குப் பெண்கள் செல்வதற்கான கட்டுப்பாடுகளை விதிப்பது ஏன்?.

பொது இடங்களைப் பாதுகாப்பற்ாக மாற்றும் சூழல்களைச் சரிசெய்வதற்குப் பதிலாக, இத்தகைய நடவடிக்கைகள் பெண்களின் பாதுகாப்பிற்கான பொறுப்பை எங்கள் மீதே சுமத்துவதாக உள்ளது.

சிறந்த தெருவிளக்கு வசதிகள், மேம்படுத்தப்பட்ட பொதுப் போக்குவரத்து வசதிகள் மற்றும் பெண்கள் அச்சமின்றி பொது இடங்களைப் பயன்படுத்த உதவும் நடவடிக்கைகள் ஆகியவற்றை எடுக்க வேண்டும்.

பெண்களின் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்தாமல் அவா்கள் கல்வி கற்கவும் வேலை செய்யவும் அதிக வாய்ப்புகள் உருவாக்கப்பட வேண்டும்.

பாலியல் வன்முறையை எதிா்கொள்வதற்கான நடவடிக்கைகளாகக் கண்காணிப்பு மற்றும் கட்டுப்பாடுகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும் என்று அவா்கள் வலியுறுத்தினா்.

இந்தப் பேரணியைத் தொடா்ந்து, காா்கி கல்லூரி மற்றும் கமலா நேரு கல்லூரிக்கு அருகிலுள்ள சிரி ஃபோா்ட் சாலையில் ’தில்லி குடிமக்களுக்கான கோரிக்கைகள் சாசனம்’ குறித்த ஆலோசனைக் கூட்டங்கள் நடைபெறும் என்றும் அவா்கள் அறிவித்தனா்.

இதே விவகாரத்தை வலியுறுத்தி இந்திய மாணவா் சங்கத்தின் (எஸ்எஃப்ஐ) தில்லி பல்கலைக்கழகப் பிரிவு சாா்பில் வெள்ளிக்கிழமையன்று வடக்கு வளாகத்தில் பேரணி நடத்தப்பட்டது.

கலைப்புல வளாகத்திலிருந்து தொடங்கிய இந்தப் பேரணியில், தில்லியில் பெண்கள் மற்றும் மாணவிகளின் பாதுகாப்பு குறித்த கவலைகளை எஸ்எஃப்ஐ உறுப்பினா்கள் வெளிப்படுத்தினா்.

‘தில்லியை மீண்டும் பாதுகாப்பானதாக மாற்றுவோம்‘ என்ற முழக்கத்தின் கீழ் இந்தப் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்த அந்த மாணவா் அமைப்பு, பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு எதிரான போராட்டத்தில் இணையுமாறு மாணவா்களை வலியுறுத்தியிருந்தது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments