தொடர் விடுமுறை! மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் பக்தர்கள் கூட்டம்!
தொடர் விடுமுறை காரணமாக மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது.
உலகப் புகழ்பெற்ற மதுரை மீனாட்சி - சுந்தரேஸ்வரர் கோயிலில், அண்மையில் குடமுழுக்கு நடைபெற்ற நிலையில், சுவாமி தரிசனம் செய்ய பக்தர்கள் கூட்டம் இன்று அலைமோதியது.
ஏற்கனவே பள்ளிகளுக்கு விடுமுறை மற்றும் இன்று அக்.2ஆம் தேதி அனைவருக்கும் விடுமுறை நாள் என்பதால், காலை முதலே ஏராளமானோர், நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்ய குவிந்துள்ளனர்.
உலகப் பிரசித்தி பெற்ற மீனாட்சி - சுந்தரேஸ்வரர் திருக்கோவிலில் கடந்த 17 ஆண்டுகளுக்குப் பிறகு மகா குடமுழுக்கு, கடந்த செப்டம்பர் 17ஆம் தேதி நடைபெற்றது. இதில், பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.
Advertisement
Advertisement
குடமுழுக்கு நடைபெற்று 48 நாள்களுக்கு(நவ. 3ஆம் தேதி வரை) மண்டல பூஜை நடக்கும். ஆனால் மீனாட்சி அம்மன் கோயிலில் செப். 18ம் தேதி துவங்கி இன்று அக். 2 வரை நடக்கிறது. மாதந்தோறும் திருவிழா இருப்பதால் மாத திருவிழாவை கணக்கிட்டு மண்டல பூஜை நடத்தப்படுவது இக்கோயில் வழக்கம்.
அதன்படி வரும் 11ம் தேதி நவராத்திரி உற்ஸவம் துவங்குவதை முன்னிட்டு இன்று மண்டல பூஜை நிறைவு பெறுகிறது.
மீனாட்சி - சுந்தரேஸ்வரர் திருக்கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு 48 நாள்கள் நடைபெற வேண்டிய மண்டல பூஜை 15 நாள்கள் மட்டுமே நடைபெறும் என கோவில் நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் குடமுழுக்கு நிறைவடைந்த நிலையில் நாள்தோறும் சுமார் 50,000 க்கு மேற்பட்ட பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர்.
பக்தர்களின் வரத்து அதிகமாக இருப்பதால் வரிசையில் சுமார் 4 மணி நேரத்திற்கு மேலாக நின்று தரிசனம் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது.
இன்று மீனாட்சி - சுந்தரேஸ்வரர் திருக்கோவிலில் கும்பாபிஷேகத்தின் மண்டல பூஜை நிறைவு பெறுவதாலும், தொடர்ந்து மூன்று நாள்கள் விடுமுறை தினம் என்பதாலும் மதுரை மக்கள் மட்டுமல்லாது தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் அதிக அளவில் தரிசனம் செய்ய வருவார்கள் என்பதால் நான்கு கோபுர நுழைவாயிலிலும் பக்தர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டும் நான்கு கோபுர நுழைவாயில் மட்டுமல்லாது கோவில் வளாகத்துக்குள்ளும் காவல்துறை சார்பில் பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.
தொடர்ந்து மூன்று நாள்கள் பக்தர்களின் வருகை எண்ணிக்கை அதிகரிப்பதால் மேற்கு மற்றும் கிழக்கு கோபுர நுழைவாயில் மூலம் பக்தர்களை தரிசனத்திற்கு அனுப்பி தெற்கு மற்றும் வடக்கு கோபுர நுழைவாயில் வழியாக வெளியே அனுப்பி வருகின்றனர்.
மண்டல பூஜையின் வழக்கமான நாள்களில் சுமார் 40 ஆயிரம் முதல் 50 ஆயிரம் பக்தர்கள் வருகை தந்த நிலையில், மண்டல பூஜை நிறைவு பெறும் இன்றும், தொடர் விடுமுறை நாள்களில் சுமார் ஒரு லட்சம் பக்தர்கள் தரிசனத்திற்கு வருகை தர வாய்ப்புள்ளது. மேலும் பக்தர்கள் தரிசனம் செய்ய குறைந்தது 5 மணி நேரத்திற்கு மேலாக வாய்ப்பு உள்ளது என கோவில் நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.