பயிற்சி ஆட்டத்தில் வங்கதேசத்தை வீழ்த்தி ஆஸ்திரேலியா இன்னிங்ஸ் வெற்றி!
வங்கதேசத்துக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் கிரிக்கெட் ஆஸ்திரேலியா அணி இன்னிங்ஸ் மற்றும் 38 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
வங்கதேசத்துக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் கிரிக்கெட் ஆஸ்திரேலியா அணி இன்னிங்ஸ் மற்றும் 38 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
வங்கதேச அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான இந்த தொடர் வருகிற ஆகஸ்ட் 13 ஆம் தேதி முதல் தொடங்குகிறது. பிரதான போட்டிகளுக்கு முன்பாக இரு அணிகளும் தங்களுக்குள் பயிற்சி ஆட்டத்தில் விளையாடின.
இந்தப் பயிற்சி ஆட்டத்தில் முதலில் விளையாடிய வங்கதேச அணி முதல் இன்னிங்ஸில் 263 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அந்த அணியில் அதிகபட்சமாக மெஹிதி ஹாசன் மிராஸ் சதம் விளாசி அசத்தினார். அவர் 141 பந்துகளில் 109 ரன்கள் எடுத்து கடைசி வரை களத்தில் இருந்தார். அவரைத் தொடர்ந்து, கேப்டன் நஜ்முல் ஹொசைன் ஷாண்டோ 37 ரன்கள், ஷாத்மன் இஸ்லாம் 31 ரன்கள் எடுத்தனர்.
Advertisement
Advertisement
ஆஸ்திரேலியா தரப்பில் கோரே ரோச்சிஸியோலி 6 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். ஹன்னோ ஜேக்கோப்ஸ், கேம்பெல் தாம்சன், சேவியர் குரோன் மற்றும் ஜெர்சிஸ் வாடியா தலா ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினர்.
முதல் இன்னிங்ஸில் வங்கதேசம் 263 ரன்களுக்கு ஆட்டமிழக்க, ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 355 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது. அந்த அணியில் டீக் வில்லி அதிகபட்சமாக 130 ரன்கள் எடுத்தார். அவரைத் தொடர்ந்து, ஜேக் டோரன் 76 ரன்கள், கேப்டன் கர்டிஸ் பேட்டர்சன் 53 ரன்கள் எடுத்தனர்.
வங்கதேசம் தரப்பில் ஹாசன் மஹ்முத் 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். டஸ்கின் அகமது மற்றும் மெஹிதி ஹாசன் மிராஸ் தலா இரண்டு விக்கெட்டுகளையும், காலெத் அகமது, எபோடாட் ஹொசைன் தலா ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினர்.
ஆஸ்திரேலியாவைக் காட்டிலும் 92 ரன்கள் பின் தங்கிய நிலையில் இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கிய வங்கதேசம், ஆஸ்திரேலிய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 54 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதன் மூலம், இன்னிங்ஸ் மற்றும் 38 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணி அபார வெற்றி பெற்றது.
இரண்டாவது இன்னிங்ஸில் தன்சித் ஹாசன் தமிம் மட்டுமே இரட்டை இலக்கத்தில் ரன்கள் குவித்தார். அவர் 22 ரன்கள் எடுத்தார். மற்ற வீரர்கள் அனைவரும் ஒற்றை இலக்க ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினர்.
இரண்டாவது இன்னிங்ஸில் அபார பந்துவீச்சை வெளிப்படுத்திய கேம்பெல் தாம்சன் 8 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். கோரே ரோச்சிஸியோலி இரண்டு விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
The Cricket Australia team achieved a resounding victory by an innings and 38 runs in the warm-up match against Bangladesh.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.