கடைசி டி20: ஜோஸ் பட்லர் அரைசதம் விளாசல்; தொடரை முழுமையாக வென்ற இங்கிலாந்து!
இலங்கைக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் இங்கிலாந்து அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இலங்கைக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் இங்கிலாந்து அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இங்கிலாந்து மற்றும் இலங்கை இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டி மான்செஸ்டரில் இன்று (செப்டம்பர் 19) நடைபெற்றது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சைத் தேர்வு செய்ய, இலங்கை முதலில் விளையாடியது.
124 ரன்களுக்கு ஆட்டமிழந்த இலங்கை!
Advertisement
Advertisement
முதலில் விளையாடிய இலங்கை அணி 18.5 ஓவர்களில் இங்கிலாந்து அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 124 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
இலங்கை அணியில் அதிகபட்சமாக தொடக்க ஆட்டக்காரர் பதும் நிசங்கா 24 பந்துகளில் 36 ரன்கள் எடுத்தார். அதில் 2 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்கள் அடங்கும். அவரைத் தொடர்ந்து, கமிந்து மெண்டிஸ் 35 ரன்கள் எடுத்தார். கேப்டன் சரித் அசலங்கா 16 ரன்கள், தாசுன் ஷானகா 12 ரன்கள் மற்றும் லகிரு உதாரா 10 ரன்கள் எடுத்தனர். மற்ற வீரர்கள் அனைவரும் ஒற்றை இலக்க ரன்களில் ஆட்டமிழந்தனர்.
இங்கிலாந்து தரப்பில் சோனி பேக்கர், ஜோஃப்ரா ஆர்ச்சர் மற்றும் வில் ஜாக்ஸ் தலா இரண்டு விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். லியம் டாஸன் மற்றும் ஜேமி ஓவர்டான் தலா ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினர்.
ஜோஸ் பட்லர் அரைசதம்; தொடரை முழுமையாக வென்ற இங்கிலாந்து!
125 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய இங்கிலாந்து அணி 9.4 ஓவர்களில் இலக்கை எட்டி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இங்கிலாந்து அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக ஜோஸ் பட்லர் மற்றும் டொனால்டு களமிறங்கினர். டொனால்டு 13 ரன்களில் ஆட்டமிழந்தார். இதனையடுத்து, ஜோஸ் பட்லர் மற்றும் கேப்டன் ஹாரி ப்ரூக் ஜோடி சேர்ந்தனர். அதிரடியாக விளையாடிய ஜோஸ் பட்லர் அரைசதம் விளாசி அசத்தினார். அவர் 32 பந்துகளில் 62 ரன்கள் எடுத்து கடைசி வரை களத்தில் இருந்தார். அதில் 7 பவுண்டரிகள் மற்றும் இரண்டு சிக்ஸர்கள் அடங்கும். கேப்டன் ஹாரி ப்ரூக் 21 பந்துகளில் 33 ரன்கள் எடுத்தார். அதில் 3 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் அடங்கும்.
இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை இங்கிலாந்து அணி 3-0 என்ற கணக்கில் முழுமையாகக் கைப்பற்றியது.
ஆட்ட நாயகனாக சோனி பேக்கரும், தொடர் நாயகனாக ஹாரி ப்ரூக்கும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
England achieved a magnificent victory by eight wickets in the third T20 match against Sri Lanka.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.