அரசுப் பள்ளிகளைத் தொடர்ந்து மூடினால் போராட்டம்: அன்புமணி
அரசுப் பள்ளிகளைத் தொடர்ந்து மூடினால் மக்களைத் திரட்டி பெரிய அளவில் போராட்டம் நடத்துவோம் என்று பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் எச்சரித்துள்ளார்.
அரசுப் பள்ளிகளைத் தொடர்ந்து மூடினால் மக்களைத் திரட்டி பெரிய அளவில் போராட்டம் நடத்துவோம் என்று பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் எச்சரித்துள்ளார்.
இது தொடர்பாக வியாழக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:
தமிழகத்தில் நிதி நெருக்கடி மற்றும் போதிய அளவில் மாணவர்கள் சேர்க்கை இல்லாததைக் காரணம் காட்டி 3 ஆயிரம் பள்ளிகளை மூட தமிழக அரசு முடிவு செய்திருக்கிறது. கல்விக்கு அதிக நிதி ஒதுக்குவதாகத் தொடர்ந்து பெருமை பேசி வரும் அதிமுக அரசு, நிதி நெருக்கடியைக் காரணம் காட்டி பள்ளிக் கூடங்களை மூடுவது மிகப்பெரிய அவமானமாகும்.
மாணவர்கள் எண்ணிக்கை குறைந்து விட்டதாகக் கூறி பள்ளிக்கூடங்களை மூடுவதை எவ்வகையிலும் ஏற்றுக் கொள்ள முடியாது. தமிழகத்தில் ஒவ்வோர் ஆண்டும் பள்ளிக்கூடங்களில் சேரும் மாணவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
ஆனால், அரசுப் பள்ளிகளிலும், அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை மட்டும் குறைந்து வருகிறது. தமிழகம் முழுவதும் உள்ள அரசுப் பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டை விட, இந்த ஆண்டு 30 ஆயிரம் பேருக்கும் மேல் குறைந்துள்ளது. அதேநேரத்தில் தனியார் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருகிறது. தனியார் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரித்து அரசுப் பள்ளிகளில் குறைந்தால் அதற்கான காரணங்கள் என்னென்ன? என்பதைக் கண்டறிந்து, அவற்றைச் சரி செய்வது தான் மக்கள் நல அரசின் கடமை ஆகும்.
மாணவர்கள் எண்ணிக்கை குறைவாக இருப்பதைக் காரணம் காட்டி பள்ளிகளை மூடுவதற்குப் பதிலாக பள்ளிகளில் கட்டமைப்பு வசதிகளையும், கல்வித்தரத்தையும் மேம்படுத்தி அவற்றைத் தொடர்ந்து நடத்த அரசு முன்வர வேண்டும். இதற்கான அறிவிப்பை அரசு உடனடியாக வெளியிட வேண்டும். இல்லாவிட்டால் மக்களைத் திரட்டி மிகப்பெரிய அளவிலான போராட்டத்தை பாமக நடத்தும்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.