பாம்பன் மீனவர்கள் வேலைநிறுத்தம் வாபஸ்: ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் கடலுக்குச் சென்றனர்
டீசல் விலை உயர்வைக் கண்டித்தும், மானிய டீசலை கூடுதலாக வழங்க வலியுறுத்தியும் நடத்திய வேலைநிறுத்தப் போராட்டத்தை வாபஸ் பெற்ற பாம்பன் விசைப் படகு மீனவர்கள்,
டீசல் விலை உயர்வைக் கண்டித்தும், மானிய டீசலை கூடுதலாக வழங்க வலியுறுத்தியும் நடத்திய வேலைநிறுத்தப் போராட்டத்தை வாபஸ் பெற்ற பாம்பன் விசைப் படகு மீனவர்கள், வியாழக்கிழமை கடலுக்குச் சென்றனர்.
ராமநாதபுரம் மாவட்டம், பாம்பன் பகுதியில் மீன்பிடித் தொழிலில் 100-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் ஈடுபடுத்தப்படுகின்றன. இதில், ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்குச் சென்று வருகின்றனர்.
தொடர்ந்து டீசல் விலை உயர்வு காரணமாக, மீனவர்களுக்கு கூடுதலாக ரூ.5 ஆயிரம் முதல் ரூ. 8 ஆயிரம் வரை செலவு ஏற்படுகிறது என்றும், மீன்களுக்கும் உரிய விலை கிடைப்பதில்லை என்பதால், மீனவர்கள் நஷ்டத்தை சந்தித்து வருகின்றனராம்.
எனவே, மத்திய-மாநில அரசுகள் டீசல் விலையை குறைக்க வேண்டும். மீனவர்களுக்கு மானிய டீசலை கூடுதலாக வழங்கவேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி, கடந்த ஞாயிற்றுகிழமை முதல் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
இந்நிலையில், கடந்த 4 நாள்களாக வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்ததால், மீனவர்கள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகினர். எனவே, புதன்கிழமை இரவு வேலைநிறுத்தப் போராட்டத்தை வாபஸ் பெற்ற மீனவர்கள், வியாழக்கிழமை காலை விசைப் படகுகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கடலுக்குச் சென்றனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.