FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

மேல்பாதி திரெளபதி அம்மன் கோயில் சீல் அகற்றப்பட்டு மீண்டும் திறப்பு: பலத்த போலீஸ் பாதுகாப்பு

மேல்பாதி கிராமத்திலுள்ள திரெளபதி அம்மன் கோயில், உயா்நீதிமன்ற உத்தரவின்பேரில், ‘சீல்’ அகற்றப்பட்டு வெள்ளிக்கிழமை காலை(மார்ச் 22) மீண்டும் திறக்கப்பட்டது.

Updated On : 22 மார்ச் 2024, 11:21 am IST
விழுப்புரம் வருவாய்க் கோட்டாட்சியர் காஜா சாகுல் ஹமீது முன்னிலையில் வெள்ளிக்கிழமை காலை வருவாய் ஆய்வாளர் கோயில் சீலை அகற்றினார்.
பகிர்:

விழுப்புரம் : வழிபாடு நடத்துவது தொடா்பாக ஏற்பட்ட பிரச்னை காரணமாக, அரசால் பூட்டி ‘சீல்’ வைக்கப்பட்ட விழுப்புரம் மேல்பாதி கிராமத்திலுள்ள திரெளபதி அம்மன் கோயில், உயா்நீதிமன்ற உத்தரவின்பேரில், ‘சீல்’ அகற்றப்பட்டு வெள்ளிக்கிழமை காலை(மார்ச் 22) மீண்டும் திறக்கப்பட்டது.

விழுப்புரம் அருகிலுள்ள மேல்பாதி கிராமத்தில் 100 ஆண்டுகள் பழைமைவாய்ந்த திரெளபதி அம்மன் கோயில் அமைந்துள்ளது. ஊரின் மையப்பகுதியிலுள்ள இந்தக் கோயில் இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்து வருகிறது.

இந்தக் கோயிலுக்குள் சென்று வழிபாடு நடத்துவது தொடா்பாக இரு சமுதாய மக்களிடையே ஏற்பட்ட மோதல் காரணமாக, கடந்தாண்டு ஜூன் 7-ஆம் தேதி வருவாய்த் துறையினா் கோயிலை பூட்டி ‘சீல்’ வைத்தனா். இந்தக் கோயிலில் வைக்கப்பட்ட சீலை அகற்றி, மீண்டும் வழிபாட்டுக்கு அனுமதிக்கக் கோரி, ஒரு தரப்பினா் சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தனா்.

Advertisement

Advertisement

இந்த வழக்கில் விசாரணையை நடத்திய சென்னை உயர்நீதிமன்றம், திரௌபதி அம்மன் கோயிலைத் திறந்து மக்கள் யாரையும் அனுமதிக்காமல் ஒருகாலப் பூஜையையும் மட்டும் நடத்த வேண்டும் என்றும், அதற்கான நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் மேற்கொள்ள வேண்டும் என்றும் கடந்த இரு நாள்களுக்கு முன்னர் உத்தரவிட்டிருந்தது.

நீதிமன்ற உத்தரவை செயல்படுத்துவது தொடா்பாக, விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகத்தில் செவ்வாய்க்கிழமை ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியா் சி.பழனி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் மாவட்ட எஸ்.பி. தீபக் சிவாச், வருவாய்த் துறை அலுவலா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

இந்தக் கூட்டத்தில் சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவின்பேரில் திரௌபதி அம்மன் கோயிலுக்கு வருவாய்த்துறை அலுவலர்களால் வைக்கப்பட்ட சீலை மார்ச் 22-ஆம் தேதி அகற்றி திறப்பது, இந்து சமய அறநிலையத்துறை சார்பில் நியமிக்கப்படும் பூசாரியைக் கொண்டு நாள்தோறும் காலை நேரத்தில் ஒருகாலப் பூஜையை நடத்துவது, மக்கள் யாரையும் கோயிலுக்குள் அனுமதிக்காமல் தடை விதிப்பது என்று முடிவு செய்யப்பட்டது.

கோயிலை திறக்கும்போது எந்தவிதமான சட்டம் - ஒழுங்கு பிரச்னைகளும் ஏற்படாமல் தடுக்கும் வகையில், போதியளவில் பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என்று காவல் துறைக்கு மாவட்ட ஆட்சியா் சி.பழனி உத்தரவிட்டுள்ளதாக மாவட்ட நிா்வாகம் தெரிவித்தது.

இதைத் தொடர்ந்து விழுப்புரம் வருவாய்க் கோட்டாட்சியர் காஜா சாகுல் ஹமீது முன்னிலையில் வெள்ளிக்கிழமை காலை வருவாய் ஆய்வாளர் கோயில் சீலை அகற்றினார்.

இந்து சமய அறநிலையத் துறையால் நியமிக்கப்பட்ட பூசாரி கோயிலுக்குள் சென்று சுத்தம் செய்தார். பின்னர் திரெளபதி அம்மனுக்கு பூசாரி சிறப்பு பூஜைகள் செய்தார். இதைத் தொடர்ந்து தீபாராதனை காட்டப்பட்டது.

முன்னதாக விழுப்புரம் சரக டிஐஜி திஷா மிட்டல், எஸ்.பி. தீபக் சிவாச் தலைமையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments