முகப்பு
தமிழ்நாடு

நீட் தேர்வால் மேலும் ஒரு மாணவி தற்கொலை! திமுகவுக்கு இபிஎஸ் கண்டனம்!

சென்னையில் நீட் தேர்வுக்கு தயாராகி வந்த மாணவி தற்கொலை

Updated On : 29 மார்ச் 2025, 12:21 pm IST
எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி - கோப்புப் படம்
பகிர்:

சென்னையில் நீட் தேர்வுக்கு தயாராகிக் கொண்டிருந்த மாணவி தற்கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

செங்கல்பட்டு, ஊரப்பாக்கத்தைச் சேர்ந்த மாணவி தேவதர்ஷினி, சென்னையில் தனியார் அகாதெமியில் படித்து நீட் தேர்வுக்கு தயாராகிக் கொண்டிருந்தார். இவர் 2021 ஆண்டுமுதல் இருமுறை நீட் தேர்வு எழுதியும், போதிய மதிப்பெண்கள் இல்லாததால், தேர்வில் குறிப்பிட்ட இலக்கை அடைய முடியவில்லை.

இந்த நிலையில், மே மாதம் நடைபெறவிருந்த நீட் தேர்வு குறித்த அச்சம் காரணமாக, வெள்ளிக்கிழமை மாலை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement

Advertisement

இதனிடையே, நீட் தேர்வினால் மாணவி தற்கொலை செய்ததற்கு திமுக அரசுதான் காரணம் என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.

இதுகுறித்து, அவர் தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்ததாவது, நீட் தேர்வு அச்சத்தால் சென்னையில் தர்ஷினி என்ற மாணவி, தன் இன்னுயிரை மாய்த்துக்கொண்ட செய்தி அதிர்ச்சியளிக்கிறது. நீட் தேர்வை நாட்டுக்கே அறிமுகப்படுத்தி, கூட்டணிக் கட்சியுடன் சேர்ந்து அதனை உச்சநீதிமன்றம்வரை சென்று வாதாடி, தமிழ்நாடு மாணவர்களின் மருத்துவக் கனவை சிதைத்திட அடித்தளம் இட்டதோடு அல்லாமல், ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வே தமிழ்நாட்டில் இருக்காது என்று பொய் சொல்லி ஏமாற்றிய திமுகவுக்கு, தொடரும் நீட் மரணங்கள் குறித்து மனசாட்சி உறுத்தவில்லையா?

இதுவரையில் நீட் தேர்வால் பலியான 19 மாணவர்களின் உயிர்களுக்கும் முதல்வர் ஸ்டாலினின் பதில் என்ன? துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினின் நீட் ஒழிப்பு ரகசியம் வெளிவர இன்னும் எத்தனை உயிர்கள் போக வேண்டும்? மாணவி தர்ஷினி மரணத்துக்கு திமுக அரசே முழு பொறுப்பு. எனவே, நீட் தேர்வு நாடகத்துக்கு ஒரு முற்றுப்புள்ளி வையுங்கள்.

மாணவர்களே, எதற்காகவும் உங்கள் இன்னுயிரை இழக்கத் துணியாதீர்கள். வாழ்க்கை பெரிது; உலகம் பெரிது. வாழ்ந்து சாதிக்க வேண்டுமே தவிர, செத்து வீழக் கூடாது. நாம் நிச்சயம் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கையோடு எப்போதும் முன் செல்லுங்கள். வெற்றி நிச்சயம் உங்களை வந்து கெஞ்சும் என்று பதிவிட்டுள்ளார்.

[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு  நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.