FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

அன்புமணியை மத்திய அமைச்சராக்கியது தவறு: ராமதாஸ் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள்!

அன்புமணி குறித்து ராமதாஸ் அடுக்கடுக்கான குற்றச்சாட்டு முன்வைத்திருப்பது பற்றி...

Updated On : 29 மே 2025, 11:14 am IST
பாமக நிறுவனர் ராமதாஸ் - கோப்புப் படம்
பகிர்:

பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ், அன்புமணி குறித்து அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை வியாழக்கிழமை முன்வைத்துள்ளார்.

பாமக இளைஞரணி தலைவராக முகுந்தன் நியமனத்தில் தொடங்கி, கட்சித் தலைவர் பதவியில் இருந்து அன்புமணியை நீக்கியது என பாமகவில் தொடர் உட்கட்சிப் பூசல் நிலவி வருகிறது.

இதனிடையே, நான் என்ன தவறு செய்தேன்? என்னை ஏன் பதவியிறக்கம் செய்தார்கள்? நான் மிகவும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளேன் என்று சமீபத்தில் அன்புமணி தெரிவித்திருந்தார்.

Advertisement

Advertisement

இந்த நிலையில், அன்புமணியின் கேள்விக்கு பதிலளிக்கும் விதமாக தைலாபுரத்தில் வியாழக்கிழமை காலை ராமதாஸ் செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார்.

அப்போது ராமதாஸ் பேசியதாவது:

”அன்புமணிதான் தவறு செய்தவர். தவறான ஆட்டத்தை ஆட துவங்கி முதலில் அடித்து ஆடியதும் அன்புமணிதான். நான் போகிற போக்கில் எதையும் சொல்லவில்லை ஆதாரப்பூர்வமாக தான் அனைத்தையும் சொல்கிறேன்.

புதுச்சேரி பொதுக்குழுவில் மேடை நாகரிகமும், சபை நாகரிகமும் இல்லாமல் எடுத்தேன் கவிழ்த்தேன் என நடந்து கொண்டது யார்?

வீட்டில் எனக்கு உதவியாகவும், கட்சியில் அன்புமணிக்கு உதவியாகவும் இளைஞர் அணி தலைவராக முகுந்தனை நியமித்து அறிவிப்பு வெளியிட்டேன். சுவரில் வீசிய பந்து போல, உடனே மேடையிலேயே எதிர்ப்பு தெரிவித்தது சரியான செயலா?

மேடை நாகரிகம் சிறிதுமின்றி அனைவரின் முன்பும் காலை ஆட்டிக் கொண்டிருந்ததும், மைக்கை தூக்கி என் தலையில் போடாத குறையாக டேபிளில் வீசியது சரியான செயலா?

பனையூரில் அலுவலகம் திறந்து இருக்கிறேன் என தொலைபேசி எண்ணை தந்து, நீங்கள் இனி என்னை அங்கு வந்து பார்க்கலாம் என அன்புமணி சொன்னது சரியான செயலா?

நான்கு சுவருக்குள் பேசி முடிக்க வேண்டியதை நடுவீதிக்கு கொண்டு வந்தது யார்? அழகான, ஆள் உயர கட்சியான பாமகவை ஒரு நொடியில் உடைத்தது யார்?

கடந்த 45 ஆண்டுகளாக இந்த இயக்கத்தை அண்ணா சொன்னது போல கடமை கண்ணியம் கட்டுப்பாட்டோடு நடத்தி வந்தேன். அதற்கு அன்புமணி கலங்கம் ஏற்படுத்தி விட்டார்.

வளர்த்த கடாவே மார்பில் வீறுகொண்டு பாய்ந்ததில் நான் நிலைகுலைந்து போய்விட்டேன். அன்புமணி தொடர்ந்து கட்சி வளர்ச்சிக்கு இடையூறாக இருந்து பல தவறுகளை செய்து வந்தார்.

பாமக கௌரவத் தலைவர் ஜி.கே.மணியின் மகன் தமிழ் குமரனை இயக்க வளர்ச்சிக்கு பயன்படுத்திக்கொள்ள சொன்னேன். தமிழ் குமரனுக்கு நியமன கடிதம் வழங்கினேன், அதை உடனே கிழித்து போட்டுவிட்டு, பதவியை ராஜிநாமா செய் என அன்புமணி தொலைபேசியில் கூறியுள்ளார்.

கட்சியின் பொதுக் குழுவில் பங்கேற்க மனைவி மற்றும் குழந்தைகளுடன் வந்த தமிழ் குமரனை, அந்த கூட்டத்தில் பங்கேற்க கூடாது என தொலைபேசியில் கூப்பிட்டு அன்புமணி பேசினார். இதை கேட்டு அந்த குடும்பம் எவ்வளவு கலங்கி அவமானப்பட்டு இருக்கும்?

மேடையில் அல்ல, எதிர் வரிசையில் ஒரு ஓரமாக தமிழ் குமரனை அமர வைக்ககூட அன்புமணி அனுமதிக்கவில்லை.

தமிழ் குமரனுக்கு நடந்த அதே செயல், முகுந்தனுக்கு பொதுக்குழு மேடையிலேயே நடந்தது.

அனைவரும் பெற்ற தாயை கடவுள் என்போம். இந்தாண்டு பொங்கல் சமயத்தில் குடும்பத்துடன் அனைவரும் வீட்டில் அமர்ந்து பேசிக் கொண்டிருக்கும்போது உனது இரண்டாவது மகளை இளைஞர் அணி தலைவராக்கி இருந்தால் நீ சும்மா தானே இருந்திருப்பாய்? என அன்புமணியின் தாயார் கேட்டபோது, அமர்ந்திருந்த இடத்தில் இருந்த பாட்டிலை தூக்கி பெற்ற தாயின் மீது வீசியவர் அன்புமணி. நல்ல வேலையாக அது அவரின் மேல் படாமல் சுவரில் பட்டது. இதெல்லாம் வெறும் சாம்பிள்தான்.

கட்சியின் நிர்வாகக் குழுவில் 19 பேர் உள்ளனர். அன்புமணி, அவர்களது கருத்தை கேட்பதும் இல்லை, கருத்தை வெளிப்படுத்தவும் அனுமதிப்பதில்லை.

2024 தேர்தலில் அதிமுக கூட்டணி வேண்டும் என்று விரும்பினேன். அன்புமணியும், எடப்பாடி பழனிசாமியிடம் பேசி கூட்டணியை உறுதி செய்திருந்தார். ஆனால், அன்புமணி மற்றும் சௌமியா இருவரும் திடீரென தைலாபுரம் வந்து பாஜக கூட்டணிதான் வேண்டும் என்று காலைப் பிடித்து அழுதனர்.

இருவரும் நீண்ட நேரம் அழுததால் என்னால் வேறு ஒன்றும் செய்ய இயலவில்லை.

அதிமுக-பாமக கூட்டணி என்பது இயல்பான கூட்டணி. இது அமைந்திருந்தால் பாமக 3, அதிமுக 7 இடங்களில் வென்றிருக்க கூடும்.

பாஜகவுடன் கூட்டணி வேண்டாம் என்றால் நீங்கள்தான் எனக்கு கொள்ளி போட வேண்டும் என்று அன்புமணி கூறினார்.

பாமக தலைவராக இருந்த ஜி.கே.மணியைகூட நீக்க வேண்டும் என்று சௌமியா அன்புமணி வந்து சொன்னார். இதை ஜி.கே.மணியிடம் சொன்னேன். பின்னர் ஒன்றரை மாதம் கழித்து அன்புமணிக்கு பட்டாபிஷேகம் நடத்தினேன்.

பாமக மூத்த நிர்வாகிகளை அன்புமணி மரியாதை குறைவாகவே நடத்தி வந்தார். குறிப்பாக மறைந்த காடுவெட்டி குருவைகூட அவர் உரிய மரியாதை உடன் நடத்தவில்லை” எனத் தெரிவித்தார்.

இந்த அறிக்கையை படித்துக் கொண்டிருக்கும்போதே ராமதாஸ் கண்கலங்கியது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments