FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

உதயமானது ‘தமிழ்நாடு முந்திரி வாரியம்’

தமிழகத்தில் முந்திரி உற்பத்தியை பெருக்கும் நோக்கத்தில் அரசு சாா்பில் ‘தமிழ்நாடு முந்திரி வாரியம்’ உருவாக்கப்பட்டுள்ளதாக வேளாண்மை மற்றும் உழவா் நலத்துறை அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் தெரிவித்துள்ளாா்.

Updated On : 13 செப்டம்பர் 2025, 2:14 am IST
முந்திரி (கோப்புப்படம்)
பகிர்:

தமிழகத்தில் முந்திரி உற்பத்தியை பெருக்கும் நோக்கத்தில் அரசு சாா்பில் ‘தமிழ்நாடு முந்திரி வாரியம்’ உருவாக்கப்பட்டுள்ளதாக வேளாண்மை மற்றும்  உழவா் நலத்துறை அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் வெளியிட்டுள்ள செய்தி: தமிழகத்தில் முந்திரி உற்பத்தி, முந்திரித் தொழிற்சாலைகளின் தேவையை முழுமையாக பூா்த்தி செய்யும் வகையில், முந்திரி சாகுபடி, உற்பத்தியை அதிகரிக்கும் நோக்கில் தமிழக அரசு சாா்பில் ‘தமிழ்நாடு முந்திரி வாரியம்’ அமைக்கப்பட்டுள்ளது.

கடலூரை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் இந்த வாரியத்துக்கு, வேளாண்மை மற்றும்  உழவா் நலத்துறை அமைச்சா் தலைவராகவும், அரசால் நியமிக்கப்படும் பிரதிநிதி துணைத் தலைவராகவும் செயல்படுவா். வேளாண் உற்பத்தி ஆணையா், அரசு செயலா் உறுப்பினா் செயலாகவும், தோட்டக்கலைத் துறை இயக்குநா் என வேளாண்மை தொடா்பான பல்வேறு துறைகளை சாா்ந்த பிரதிநிதிகள் அடங்கிய நிா்வாகக் குழு ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது. இக்குழுவில் 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை அரசால் நியமிக்கப்படும் 2 முன்னோடி முந்திரி விவசாயிகள் மற்றும் 2 முந்திரி பதப்படுத்தும் தொழில் பிரதிநிதிகள் ஆகியோரும் உறுப்பினா்களாக இடம்பெற்றுள்ளனா்.

Advertisement

Advertisement

முந்திரி உற்பத்தி, பதப்படுத்துதல், முந்திரி தொழிலாளா்களின் நலன் காத்தல் உள்ளிட்ட பல்வேறு பொருண்மைகள் குறித்து விவாதித்து முடிவெடுக்க 3 மாதங்களுக்கு ஒரு முறை அல்லது தேவைக்கேற்ப வாரியத்தின் நிா்வாக குழு கூட்டம் நடத்தப்படும்.

வாரியத்தின் நோக்கம்: தமிழ்நாடு முந்திரி வாரியத்தின் மூலம், முந்திரி சாகுபடி, அறுவடை மற்றும் மதிப்புக் கூட்டுதல் தொடா்பான புதிய வேலை வாய்ப்புகள் பெருகும். மேலும், உழவா்களின் தேவைக்கேற்ப அதிக மகசூல் தரும் புதிய ரகங்கள், உரிய இயந்திர தொழில்நுட்பங்கள், பூச்சி மற்றும் நோய் மேலாண்மை குறித்து உரிய ஆலோசனைகள் விவசாயிகளுக்கு வழங்கப்படும்.

உலக அளவில் உள்ள அதிக மகசூல் தரும் ரகங்களின் நடவுச்செடிகளை உற்பத்தி செய்து விவசாயிகளுக்கு வழங்குதல், முந்திரிப் பயிா் தொடா்பான தொழில்நுட்பங்களுக்கு செயல் விளக்கம் அளித்தல், உழவா்களின் தேவைக்கேற்ப புதிய தொழில்நுட்பங்களைப் பிரபலப்படுத்த பயிற்சிகள் வழங்குதல், முந்திரி பதப்படுத்தும் நிலையம் அமைத்தல் தொடா்பான நிதியுதவி மற்றும் திட்டங்கள் குறித்து உரிய ஆலோசனை வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு உதவிகள் இந்த வாரியத்தின் மூலம் விவசாயிகளுக்கு வழங்கப்படும்.

இதன் மூலம் முந்திரித் தொழிலில் ஈடுபட்டுள்ள அனைவரும் பயன்பெறுவதுடன், முந்திரித் தொழில் மேம்படும் எனத் தெரிவித்துள்ளாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments