முதலில் மறுப்பு; பிறகு சம்மதம்... செங்கிப்பட்டி காவல் நிலையத்தில் உதயநிதியிடம் விசாரணை!
செங்கிப்பட்டி காவல் நிலையத்தில் உதயநிதியிடம் போலீசார் விசாரணையைத் தொடங்கியுள்ளது குறித்து...
தஞ்சாவூர் மாவட்டம் செங்கிப்பட்டி காவல் நிலையத்தில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதியிடம் போலீசார் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.
தஞ்சை தெற்கு நகர காவல் நிலையத்திற்கு முன்பு அழைத்துச் செல்லப்பட்ட நிலையில், அங்கு ஏராளமான திமுக தொண்டர்கள் குவிந்திருந்ததால், செங்கிப்பட்டி காவல் நிலையத்திற்கு உதயநிதியை அழைத்துச் சென்றனர்.
தஞ்சை தெற்கு காவல் நிலையத்தில் விசாரிக்க நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், வேறு காவல் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்த மறுப்பு தெரிவித்த உதயநிதி, மூத்த நிர்வாகிகள் பேச்சுவார்த்தைக்குப் பிறகு காவல் துறை விசாரணைக்கு சம்மதித்து வாகனத்தில் இருந்து இறங்கி செங்கிப்பட்டி காவல் நிலையத்திற்குள் சென்றார். அங்கு அவரிடம் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Advertisement
Advertisement
சென்னையில் காலை 10 மணிக்கு உதயநிதி கைது செய்யப்பட்ட நிலையில், மாலை 6.45 மணிக்கு காவல் துறையினர் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.
காவிரி விவகாரம் தொடர்பாக தவெக அரசைக் கண்டித்து தஞ்சாவூரில் திமுக சார்பில் நேற்று (ஆக. 3) நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் முதல்வர் விஜய் மற்றும் பெண்கள் குறித்து எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில் உதயநிதி மீது தவெக மகளிரணியினர், காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதனைத் தொடர்ந்து தஞ்சாவூர் காவல் நிலையத்தில் உதயநிதி ஸ்டாலின் மீது 6 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
பின்னர், சென்னை நீலாங்கரை இல்லத்திற்கு வந்த காவல் துறையினர் உதயநிதி ஸ்டாலினை, கைது செய்து தஞ்சாவூருக்கு அழைத்துச் சென்றனர்.
இன்றைக்குள் விடுவிக்க நீதிமன்றம் உத்தரவு
சென்னை உயர் நீதிமன்றத்தில் உதயநிதி ஸ்டாலினை கைது செய்யத் தடை விதிக்க கோரி அவசர மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை நீதிபதி ஜி.கே. இளந்திரையன் அமர்வில் இன்று பிற்பகலில் விசாரணைக்கு வந்தது.
உதயநிதி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், “முதல்வர் குறித்தோ எந்த திரைத்துறையினர் குறித்தோ அவதூறு கருத்துகளை தெரிவிக்கவில்லை. பெண்களின் கண்ணியத்தை குறைக்கும் வகையில் பேசவில்லை. அரசியல் காரணங்களுக்காக திருத்தி பிரசாரம் செய்யப்படுகிறது. நாளை சட்டப்பேரவை கூடும் நிலையில், திட்டமிட்டு எதிர்க்கட்சித் தலைவர் கைது செய்யப்பட்டுள்ளார்” எனத் தெரிவிக்கப்பட்டது.
தமிழக அரசுத் தரப்பு வழக்கறிஞர் விஜய் நாராயண், ”உதயநிதி ஸ்டாலினை காவலில் வைக்கும் எண்ணம் இல்லை. தஞ்சை அழைத்துச் செல்லப்படும் உதயநிதி ஸ்டாலினிடம் விசாரணை நடத்தப்பட்டு, காவல் நிலைய ஜாமீனில் விடுவிக்கப்படுவார்” என்று தெரிவித்தார்.
இதையடுத்து அரசுத் தரப்பு வாதத்தை ஏற்றுக்கொண்ட நீதிபதி ஜி.கே. இளந்திரையன், இன்று இரவுக்குள் விசாரணையை முடித்து, இன்றைக்குள் உதயநிதி ஸ்டாலினை விடுவிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.
செங்கிப்பட்டி காவல் நிலையம்
சென்னையில் இருந்து தஞ்சைக்கு உதயநிதி ஸ்டாலின் அழைத்துச் செல்லப்பட்ட நிலையில், ஏராளமான தொண்டர்கள் அங்கு குவிந்திருந்ததால், காவல் துறையினர் செங்கிப்பட்டிக்கு விசாரணை இடத்தை மாற்றினர்.
இந்த தகவல் அறிந்து தொண்டர்கள் பலர் செங்கிப்பட்டி காவல் நிலையம் நோக்கிப் படையெடுத்தனர். இதனால் செங்கிப்பட்டி காவல் நிலையத்தைச் சுற்றிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
நீதிமன்றம் உத்தரவிட்ட தஞ்சை தெற்கு காவல் நிலையத்துக்கு பதிலாக வேறு காவல் நிலையத்தில் விசாரணை நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து உதயநிதி ஸ்டாலின் வாகனத்தில் இருந்து இறங்க மறுப்பு தெரிவித்தார்.
இதனிடையே எ.வ. வேலு, கே.என். நேரு, எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள் மட்டும் செங்கிப்பட்டி காவல் நிலையத்திற்குள் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் உதயநிதியுடன் பேச்சுவார்த்தை நடத்திய பிறகு விசாரணைக்கு சம்மதம் தெரிவித்து காவல் நிலையத்திற்குள் சென்றார். காவல் துறையினர் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Initial refusal, then consent... DMK Udhayanidhi stalin questioned at Sengipatti police station
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.