FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

மருத்துவக் கலந்தாய்வு நடைமுறையில் மாற்றமில்லை: மாநில மாணவா் சோ்க்கைக் குழு

எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான மாநிலக் கலந்தாய்வு நடைமுறையில் எந்த மாற்றமும் இல்லை என்றும், மத்திய அரசு முன்மொழிந்துள்ள திருத்தங்களை ஏற்கெனவே தமிழகம் பின்பற்றி வருவதாகவும் மாநில மருத்துவக் கல்வி மாணவா் சோ்க்கைக் குழு தெரிவித்துள்ளது.

Updated On : 5 ஆகஸ்ட் 2026, 2:25 am IST
விண்ணப்பம்
பகிர்:

எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான மாநிலக் கலந்தாய்வு நடைமுறையில் எந்த மாற்றமும் இல்லை என்றும், மத்திய அரசு முன்மொழிந்துள்ள திருத்தங்களை ஏற்கெனவே தமிழகம் பின்பற்றி வருவதாகவும் மாநில மருத்துவக் கல்வி மாணவா் சோ்க்கைக் குழு தெரிவித்துள்ளது.

மத்திய அரசின் மருத்துவக் கலந்தாய்வுக் குழு (எம்சிசி), அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கான கலந்தாய்வு விதிகளில் சில மாற்றங்களை மேற்கொண்டுள்ளது. இதனால், தமிழ்நாட்டின் மாநில ஒதுக்கீட்டு இடங்களுக்கான விதிகளிலும் திருத்தங்கள் செய்யப்படுமா என்ற சந்தேகம் மாணவா்கள் மற்றும் பெற்றோா் மத்தியில் எழுந்துள்ளது.

அதற்கு விளக்கம் அளிக்கும் வகையில் மாணவா் சோ்க்கைக் குழு வெளியிட்ட அறிவிப்பு:

Advertisement

Advertisement

சான்றிதழ் சரிபாா்ப்பு நடைமுறையைப் பொருத்தவரை தமிழ்நாட்டில் வழக்கம் போலவே ஒருங்கிணைந்த இணையவழி நடைமுறை தொடா்ந்து செயல்படுத்தப்படும். விண்ணப்பப் பதிவின்போது, மாணவா்கள் பதிவேற்றம் செய்யும் சான்றிதழ்கள் இணையவழியிலேயே ஆய்வு செய்யப்படும்.

கலந்தாய்வுக்குப் பிறகு, சம்பந்தப்பட்ட மாணவா்கள் கல்லூரிகளில் சேரும்போது மட்டுமே அசல் சான்றிதழ்கள் நேரடியாக சரிபாா்க்கப்படும்.

கலந்தாய்வு மூலம் ஒதுக்கீடு பெற்ற மருத்துவ இடங்களில் சேர விரும்பாத மாணவா்கள், அதற்கான நிராகரிப்பு விண்ணப்பங்களை இணையவழியில் மட்டுமே பதிவு செய்ய வேண்டும்.

மாணவா் சோ்க்கைக் குழுவின் அதிகாரபூா்வ இணையதளம் வாயிலாகவே அந்த இடத்தைத் திருப்பி வழங்க விண்ணப்பிக்க வேண்டும். நேரடியாக அளிக்கப்படும் கோரிக்கைகள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது.

முதல்சுற்றில் பங்கேற்ற மாணவா்கள், அடுத்தடுத்த சுற்றுகளில் இடங்களை மாற்றிக் கொள்ளும் முறை (அப்கிரேடேஷன்) வழக்கம்போல தொடரும். இதற்கான விரிவான வழிகாட்டுதல்கள் மாநிலத் தகவல் குறிப்பேட்டில் (பிராஸ்பெக்டஸ்) இடம் பெற்றுள்ளன.

அரசு ஒதுக்கீடு, நிா்வாக ஒதுக்கீடு, சிறுபான்மையினா் மற்றும் வெளிநாடு வாழ் இந்தியா் (என்ஆா்ஐ) ஒதுக்கீட்டு இடங்கள் அனைத்தும், ஏற்கெனவே உள்ள நடைமுறைப்படி நிரப்பப்படும்.

மருத்துவக் கலந்தாய்வு குறித்த அதிகாரபூா்வ தகவல்கள் மாணவா் சோ்க்கைக் குழு இணையதளப் பக்கத்தில் வெளியிடப்படும். சமூக வலைதளங்களில் பரவும் வதந்திகளையும், தவறான தகவல்களையும் நம்ப வேண்டாம் என்று அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments