தமிழ்நாடு பட்ஜெட் 2026: தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்! - அமைச்சர் முக்கிய தகவல்
பட்ஜெட் உரையில் தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம் பற்றி அமைச்சர் மரியவில்சன் தகவல்...
தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம் வருகிற செப். 15 ஆம் தேதி பயன்பாட்டுக்கு வரவுள்ளதாக நிதியமைச்சர் மரியவில்சன் தெரிவித்தார்.
தமிழ்நாட்டில் புதிதாக அமைந்துள்ள முதல்வர் விஜய் தலைமையிலான தவெக அரசு, இன்று 2026- 27 ஆம் நிதியாண்டுக்கான முதல் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்கிறது. நிதியமைச்சர் மரியவில்சன் பட்ஜெட்டை தாக்கல் செய்து உரையாற்றி வருகிறார்.
அப்போது அவர் பேசுகையில், தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம் வருகிற செப். 15 ஆம் தேதி அண்ணா பிறந்தநாளில் பயன்பாட்டுக்கு வரவுள்ளதாகத் தெரிவித்தார்.
Advertisement
Advertisement
மேலும் இதற்காக ரூ. 560 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் பேரவையில் அவர் தகவல் தெரிவித்தார்.
தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்
'தாய்மாமன் தங்க மோதிரம் திட்ட'த்தின்படி அரசு மருத்துவமனைகளில் பிரசவிக்கும் ஒவ்வொரு குழந்தையையும், மற்றும் பிரசவித்த தாயையும் கௌரவிக்கும் விதமாக தாய்மாமன் சீர் என்ற முறையில் குழந்தைக்கு ஒரு கிராம் தங்க மோதிரம் வழங்கப்படும்.
அரசு மருத்துவமனைகளில் பிரசவிக்கும், தமிழ்நாட்டில் நிரந்தரமாக வசிக்கும் குடும்பங்களைச் சேர்ந்த தாய்மார்களின் குழந்தைகளுக்கு மட்டுமே இந்த திட்டத்தின் கீழ் ஒரு கிராம் தங்க மோதிரம் வழங்கப்படும்.
தமிழ்நாடு அரசின் சுகாதாரச் சேவைகளில் மக்களின் நம்பிக்கையை வலுப்படுத்தும் நோக்கிலும், அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தையின் பிறப்பை நினைவு கூறும் வகையிலும், தாய்மையின் மகிழ்ச்சி மற்றும் முக்கியத்துவத்தை கொண்டாடும் வகையிலும் இந்த தாய்மாமன் தங்க மோதிரத் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
இத்திட்டத்தை மாநிலத்தில் செயல்படுத்துவதற்காக தமிழ்நாடு அரசு ஒப்புதல் வழங்கியதுடன் ஆண்டுதோறும் ரூ. 755.83 கோடி நிதியை ஒதுக்கீடு செய்யவுள்ளது. இத்திட்டற்கான ஒப்பந்த புள்ளிகள் உடனடியாக கோருவதற்கு முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
இத்திட்டத்தின் கீழ், 2026 ஜூன் 22 (விஜய் பிறந்த நாள்) முதல் அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகள் பயன் பெறுவார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tamil Nadu Budget 2026: Thai Maman Gold Ring Scheme: Minister
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.