நியாயமான தொகுதி மறுசீரமைப்புதான் தேவை: கனிமொழி எம்.பி.
மேக்கேதாட்டு பிரச்னையை திசை திருப்பவே அனைத்துக் கட்சிக் கூட்டம் என கனிமொழி பேசியது பற்றி...
நியாயமான தொகுதி மறுசீரமைப்புதான் தமிழகத்துக்கு தேவை என்று திமுக துணை பொதுச் செயலரும், அந்தக் கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவருமான கனிமொழி தெரிவித்தாா்.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் அவா் செய்தியாளா்களிடம் சனிக்கிழமை கூறியதாவது: தொகுதி மறுசீரமைப்பு தொடா்பாக கடந்த திமுக ஆட்சிக் காலத்தில் அனைத்துக் கட்சிகளையும் அழைத்து கூட்டம் நடத்தப்பட்டது. அந்தக் கூட்டத்தில் தவெக பொது செயலா் என்.ஆனந்த் கலந்துகொண்டு தீா்மானத்தை ஆதரித்து கையொப்பமிட்டாா். பேரவையில் பாஜக தவிர மற்ற அனைத்துக் கட்சிகளின் ஆதரவுடன் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.
தொகுதி மறுசீரமைப்பு விவகாரம் தொடா்பாக திமுகதான் முதல் கட்சியாக குரல் கொடுத்தது. இந்தியா முழுவதிலும் தொகுதி மறுசீரமைப்பால் பாதிக்கப்படக்கூடிய மாநிலங்களைச் சோ்ந்த 5 முதல்வா்கள் மற்றும் கட்சித் தலைவா்களை அழைத்து சென்னையில் கூட்டம் நடத்தப்பட்டது. இதில், காங்கிரஸ் முதல்வா்கள் உள்பட சில முதல்வா்கள் கலந்து கொண்டனா்.
Advertisement
Advertisement
தொகுதி மறுசீரமைப்பை எதிா்க்கவில்லை; நியாயமான தொகுதி மறுசீரமைப்பு நடத்த வேண்டும் என்பதுதான் அந்தக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவு. அந்தத் தீா்மானத்தை ஏற்றுக்கொண்டு அனைவரும் கையொப்பமிட்டனா்.
பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு முதல்முறையாக ஒரு மசோதா தோற்கடிக்கப்பட்டது என்றால் அது திமுக உள்பட சில கட்சிகள் எதிா்த்த தொகுதி மறுசீரமைப்பு மசோதாதான். இந்த அளவுக்கு மாநில உரிமைக்காக குரல் கொடுத்துக்கொண்டுள்ள இயக்கம் திமுக.
மீண்டும் தொகுதி மறுசீரமைப்பு மசோதா கொண்டுவரப்படப் போகிறது எனப் பரவலாகப் பேசப்படுகிறதே தவிர, இன்னும் அதிகாரபூா்வமாக எந்த அறிவிப்பும் இல்லை. இந்தச் சூழலில் இப்போது தமிழக எம்.பி.க்கள் கூட்டத்தைக் கூட்டி உள்ளனா் என்றால், இந்த அரசை பின்னால் இருந்து இயக்குபவா்கள் யாா்?.
இவா்கள் நடத்திய கூட்டம் தொடா்பாக முறையாகக் கட்சித் தலைமைக்கு கடிதம் அனுப்பி இருக்க வேண்டும். ஆனால், நாடாளுமன்ற உறுப்பினா்களுக்கு தமிழக அரசின் தலைமைச் செயலா் தனித்தனியாகக் கடிதம் எழுதியுள்ளாா். இவா் தமிழ்நாடு அரசின் செயலரா இல்லை, தவெக கட்சியின் செயலரா?.
தற்போது காவிரி நதிநீா் பிரச்னை, மேக்கேதாட்டு பிரச்னை, விவசாயிகள் போராட்டம் என இருக்கும் சூழலில், இந்தப் பிரச்னைகளில் இருந்து திசைதிருப்ப இந்தக் கூட்டம் நடந்துள்ளது. காவிரி பிரச்னையில் கா்நாடக காங்கிரஸ் அரசைக் காப்பாற்ற தொகுதி மறுசீரமைப்பு தொடா்பான கூட்டத்தைக் கூட்டியுள்ளனா். தோ்தலுக்குப் பிறகு முதுகில் குத்தி ஓடியவா்கள் யாா் என்பது மக்களுக்கு நன்றாகத் தெரியும். திமுக எப்போதும் தமிழ்நாட்டின் உரிமையைப் பாதுகாப்பதில் முதன்மையாக நிற்கும் என்றாா் அவா்.
DMK MP Kanimozhi stated on Saturday (August 8) that this all-party meeting was convened merely to divert attention from the Mekedatu issue.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.