கிராம நத்தம் பட்டா சிறப்புத் திட்டம், நில வரி முறை ரத்து! செங்கோட்டையன் அறிவிப்பு
நத்தம் நிலத்தில் குடியிருக்கும் அனைவருக்கும் பட்டா வழங்கப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்துள்ளார்.
தமிழ்நாடு முழுவதும் நத்தம் நிலப்பரப்பில் பிரச்னையில்லா இடங்களில் வாழும் அனைவருக்கும் பட்டா வழங்கும் திட்டம் முதல்வர் விஜய் தலைமையில் செயல்படுத்தப்படும் என்று வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மைத் துறை அமைச்சா் செங்கோட்டையன் அறிவித்துள்ளார்.
நடப்பாண்டில் நில வரி முறை ரத்து செய்யப்படுவதாகவும் அமைச்சர் அறிவித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவையில் இன்று, வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மைத் துறை அமைச்சா் செங்கோட்டையன் மானியக் கோரிக்கை மீது, பதிலளித்துப் பேசினார்.
Advertisement
Advertisement
அவர் பேசுகையில், எளிய முறையில் பட்டா பெயர் மாற்றம் செய்யப்பட வேண்டும், பத்திரப்பதிவு செய்யப்பட வேண்டும் என்று மக்கள் வேண்டுகோள் வைத்து வருகிறார்கள்.
பத்திரப்பதிவு செய்ததும் தானாக பட்டா மாறும்முறை கொண்டு வர வேண்டும் என்ற திட்டத்தில், கடந்த ஆட்சிக் காலத்தில் 45 சதவிகிதம் அதுபோல மாற்றப்பட்டுள்ளது.
இன்று பத்திரப்பதிவு செய்து ஆன்லைன் மூலம் வெளியிட்டதும் பட்டா வழங்குவதும் கொண்டு வரப்பட்டுள்ளது. இதற்கு முக்கியத்துவம் கொடுத்து பத்திரப்பதிவு, தகவல் தொழில்நுட்பத் துறை ஒன்றிணைந்து பத்திரப்பதிவு முடிந்ததும் பட்டா வழங்கும் முறை தமிழ்நாட்டில் கொண்டு வரப்பட்டுள்ளது. இதன் மூலம் 85 சதவிகிதம் பேர் பயன்பெறுவார்கள் என்று அறிவித்தார்.
தொடர்ந்து, தமிழ்நாட்டில் நத்தத்தில் குடியிருக்கும் மக்களுக்கு பட்டாக்கள் வழங்கப்பட வேண்டும் என்று கோரிக்கை வந்துள்ளது. அதற்கான சிறப்புத் திட்டம் செயல்படுத்தப்படவிருக்கிறது. தமிழ்நாட்டில் நத்தம் நிலத்தில் பிரச்னையில்லா இடங்களில் வாழும் அனைவருக்குமே பட்டா வழங்கும் திட்டம் விரைவில் முதல்வர் விஜய் அவர்களால் செயல்படுத்தப்படும் என்று அறிவித்துள்ளார் செங்கோட்டையன்.
மேலும் சில திட்டங்களையும் செங்கோட்டையன் அறிவித்தார்..
வருவாய்த் துறை மூலம் வழங்கப்படும் அனைத்து சான்றிதழ்களும் விரைவாக வழங்குவதற்கு 3 அலுவலர் படிநிலை உருவாக்கப்படும்.
மக்கள் வசிக்கும் இடத்திலேயே அரசு சேவைகளைப் பெறும் வகையில் வட்ட அலுவலகங்கள் ஏற்படுத்தப்படும். முதற்கட்டமாக சென்னையில் 12 சிறு வட்ட அலுவலகங்கள் அமைக்கப்படும்.
விவசாயிகள், நில உரிமையாளர்கள் பயன்பெறும் வகையில், ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் கொண்டுவரப்பட்ட நில வரி வசூல் 1436-ஆம் ஆண்டு பசலி முறை நடப்பாண்டு முதல் ரத்து செய்யப்படுகிறது. இனி நிலத்துக்கு வரி வசூலிக்கும் முறை இருக்காது என்று தெரிவித்துள்ளார்.
Patta for everyone residing on Natham land! Sengottaiyan's announcement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.