அஜித்குமார் கொலை வழக்கு: நகை திருட்டுப் புகாரில் உண்மையில்லை! - சிபிஐ தகவல்
சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் சிபிஐ தகவல்...
மடப்புரம் கோயில் காவலாளி கொலை விவகாரத்தில் பேராசிரியை அளித்த நகை திருட்டுப் புகாரில் உண்மையில்லை என சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் சிபிஐ தரப்பில் புதன்கிழமை தெரிவிக்கப்பட்டது.
சிவகங்கை மாவட்டம், மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயில் காவலாளியாகப் பணியாற்றிய அஜித்குமாா் மீது பேராசிரியை நிகிதா கடந்த ஆண்டு ஜூன் 27-ஆம் தேதி நகை திருட்டுப் புகாா் அளித்தாா். இந்தப் புகாரின் பேரில், திருப்புவனம் தனிப்படை போலீஸாா் அஜித்குமாரை விசாரணைக்கு அழைத்துச் சென்றனா். விசாரணையின்போது, போலீஸாா் கடுமையாகத் தாக்கியதில் கடந்த ஆண்டு ஜூன் 28-ஆம் தேதி அஜித்குமாா் உயிரிழந்தாா்.
இதையடுத்து, தனிப்படைக் காவலா்கள் கண்ணன், ராஜா, ஆனந்த், பிரபு, சங்கரமணிகண்டன் ஆகிய 5 பேரும் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு, மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனா். மேலும், உயா்நீதிமன்ற உத்தரவின்படி, அஜித்குமாா் கொலை வழக்கு சிபிஐ விசாரணைக்கு மாற்றப்பட்டது.
Advertisement
Advertisement
இதனிடையே, அஜித்குமாா் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு, சிறையில் உள்ள காவலா்கள் 5 பேரும் தங்களுக்கு பிணை வழங்கக் கோரி, சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் மனுக்கள் தாக்கல் செய்தனா்.
இந்த மனுக்கள் உயா்நீதிமன்ற நீதிபதி ஸ்ரீமதி முன் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது.
அப்போது, சிபிஐ தரப்பில், ‘அஜித்குமாா் மரணத்துக்கு காவல் துறையினரே காரணம் என்பது உறுதியாகியுள்ளது. இதில் குற்றம்சாட்டப்பட்ட காவல் துறையினா் 10 பேருக்கும் தொடா்பு உள்ளது. எனவே, பிணை வழங்கக் கூடாது’ எனத் தெரிவிக்கப்பட்டது’.
இதையடுத்து, அஜித்குமாா் மீதான நகை திருட்டுப் புகாரில் உண்மையுள்ளதா? என நீதிபதி கேள்வி எழுப்பினாா். அப்போது, ‘அந்தப் புகாரில் உண்மையில்லை’ இதுதொடா்பாக அறிக்கை தயாரிக்கப்படுகிறது. விரைவில் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும்’ என சிபிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதைப் பதிவு செய்து கொண்ட நீதிபதி ஸ்ரீமதி, ‘ஒரு குற்றமும் இல்லாத விவகாரத்துக்காக ஒருவரை அடித்தே கொன்றுவிட்டனா். இதற்கு புகாா் அளித்தவரும் காரணம்தானே? அவா் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டியதுதானே? ஒருவரை பலா் சோ்ந்து தாக்கியதற்கு வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? ஏதும் முன்விரோதம் இருந்ததா? என நீதிபதி கேள்விகளை எழுப்பினாா்.
அப்போது, ‘அஜித்குமாருக்கும், காவல் துறையினருக்கும் முன்விரோதம் ஏதும் இல்லை’ என சிபிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, இந்த வழக்கில் வாக்குமூலம் அளித்தவா்கள் அஜித்குமாரை காவலா் பிரபு தாக்கியதாகக் குறிப்பிடவில்லை. எனவே, அவருக்கு பிணை வழங்க வேண்டும் என மனுதாரா் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.
இதை ஏற்க மறுத்த நீதிபதி, ‘யாராக இருந்தாலும் வழக்கு முடியும் வரை சிறையிலேயே இருக்கட்டும். இந்தச் சம்பவம் மிகுந்த வேதனையளிக்கிறது. காவல் துறையினருக்கு நீதிமன்றம் பாடம் புகட்டும்’ எனக் குறிப்பிட்டு, விசாரணையை வருகிற 17-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டாா்.
Ajithkumar murder case: jewelry theft complaint is baseless- CBI tells court
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.