பாஜகவுடன் திமுக - அதிமுக கூட்டணி! 4 பேருக்கு மத்திய அமைச்சர் பதவி! - நிர்மல் குமார்
பாஜகவுடன் திமுக - அதிமுக கூட்டணி அமைப்பது குறித்து...
பாஜகவுடன் திமுகவும் அதிமுகவும் கூட்டணி அமைக்க முயற்சிகள் நடந்து வருவதாக அமைச்சர் நிர்மல் குமார் கூறியுள்ளார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்கள் சந்திப்பில் அமைச்சர் நிர்மல் குமார் பேசியதாவது, "திமுக, அதிமுக, பாஜக ஆகிய மூவரும் சேர்ந்து ஆட்சியமைக்க முயற்சித்து வருகின்றனர். இன்னும் சில ஆண்டுகளில் திமுகவும் அதிமுகவும் தங்கள் கட்சிகளை நடத்த முடியாமல், பாஜகவுடன் தங்கள் கட்சிகளை இணைத்து விடுவர். அத்துடன் மு.க. ஸ்டாலின் குடும்பத்தினருக்கு 2 மத்திய அமைச்சர் பதவிகளும், எடப்பாடி பழனிசாமியின் குடும்பத்தினருக்கு 2 மத்திய அமைச்சர் பதவிகளும் வழங்கப்படலாம்.
ஏனெனில், அவர்கள் கட்சியை நடத்தும் எண்ணமோ காப்பாற்றும் எண்ணமோ அவர்களுக்கு இல்லை.
Advertisement
Advertisement
எம்ஜிஆர், ஜெயலலிதா உருவாக்கிய கட்சியை மொத்தமாக அடமானம் வைத்துவிட்டு, என்ன செய்வதென்று தெரியாமல், அறிக்கைகள் மட்டும் வெளியிட்டுக்கொண்டே ஒரு கட்சியைக் காப்பாற்றி விடலாம் என்ற நிலைமைக்கு எடப்பாடி பழனிசாமி வந்துவிட்டார்.
திமுகவில் என்ன செய்ய வேண்டும்? அதனை யாரிடம் நம்பி ஒப்படைக்க வேண்டும்? என்பது எதுவுமே தெரியாமல் மு.க. ஸ்டாலின் நின்று கொண்டிருக்கிறார்.
இந்த 5 ஆண்டுகளுக்கு காலத்தை ஓட்டுவதற்கு ஓர் இடம் தேவை. அதற்காகவே அவர்கள் பாஜகவுடன் கூட்டணிக்குச் செல்லவிருக்கின்றனர். இந்த முயற்சிகளுக்காகவே அவர்கள் 50 கடந்த நாள்களாக தவெக எம்எல்ஏ-க்களை விலைக்கு வாங்கும் முயற்சியில் ஈடுபடுகின்றனர். எங்கள் எம்எல்ஏ-க்களிடம் ரூ. 50 கோடிவரையில் பேரம் பேசியுள்ளனர்.
இவ்வளவு பணம் கொடுத்து விலைக்கு வாங்கும் முயற்சி இன்னும் நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கிறது.
இந்த அரசை எப்படியேனும் நிறுத்த வேண்டும் என்பதற்காக குறுக்கு வழியில் ஈடுபடும் மு.க. ஸ்டாலினும் எடப்பாடி பழனிசாமியும் கடைசியாக இப்போது பாஜகவுடன் கூட்டணி அமைக்க முயற்சிக்கிறார்கள்" என்று தெரிவித்தார்.
DMK and AIADMK tried to form an alliance with the BJP, says Minister Nirmal Kumar
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.