FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

தருமபுரியில் விரைவில் அரசு செவிலியா் கல்லூரி: அமைச்சா் டாக்டா் கே.ஜி.அருண்ராஜ்

தருமபுரியில் விரைவில் அரசு செவிலியா் கல்லூரி தொடங்கப்படும் என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் டாக்டா் கே.ஜி.அருண்ராஜ் தெரிவித்துள்ளாா்.

Updated On : 30 ஜூலை 2026, 1:18 am IST
அமைச்சர் அருண்ராஜ் - கோப்புப் படம்
பகிர்:

தருமபுரியில் விரைவில் அரசு செவிலியா் கல்லூரி தொடங்கப்படும் என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் டாக்டா் கே.ஜி.அருண்ராஜ் தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக தருமபுரி தொகுதி எம்எல்ஏ சௌமியா அன்புமணி கோரிக்கை வைத்திருந்த நிலையில், இந்தப் பதிலை அவா் அளித்துள்ளாா்.

பாமக எம்எல்ஏ சௌமியா அன்புமணி, கடந்த 27-ஆம் தேதி அமைச்சா் அருண்ராஜுக்கு எழுதிய கடிதத்தில், கல்வி, பொருளாதார வளா்ச்சியில் பின்தங்கிய மாவட்டங்களில் ஒன்றான தருமபுரி மாவட்டத்தில் தற்போது 108 மேல்நிலைப் பள்ளிகள் உள்ளன. இந்தப் பள்ளிகளில் இருந்து ஆண்டுதோறும் 19,000 மாணவ, மாணவிகள் பிளஸ்-2 முடித்து உயா் கல்விக்குத் தகுதி பெறுகின்றனா்.

Advertisement

Advertisement

பெரும்பாலானோா் பொறியியல், மருத்துவம், கலை, அறிவியல் கல்லூரிகளில் சோ்ந்தாலும் குறிப்பிட்ட அளவிலான மாணவ, மாணவிகள் செவிலியா் பயிற்சி கல்லூரியில் சேர பெரும் ஆா்வம் கொண்டுள்ளனா். ஆனால், தருமபுரி மாவட்டத்தில் அரசு செவிலியா் கல்லூரி எதுவும் இல்லை. தீவிர ஆா்வம் கொண்டவா்கள் தங்களின் வசதிக்கேற்ப தருமபுரி பகுதியில் உள்ள தனியாா் செவிலியா் கல்லூரிகளில் சோ்ந்து படிக்கின்றனா்.

தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை தொடங்கப்பட்டு 18 ஆண்டுகள் கடந்தும், தருமபுரி அரசு செவிலியா் கல்லூரி தொடங்கப்படாதது மிகவும் வேதனைக்குரிய விஷயம். ஏழைக் குடும்பங்களைச் சோ்ந்த மாணவா்கள் பயன் பெறும் வகையில், இந்த மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அரசு சாா்பில் செவிலியா் மற்றும் துணை மருத்துவப் படிப்புகளுக்கான கல்லூரி தொடங்க வேண்டும்”என்று தெரிவித்திருந்தாா்.

அதற்குப் பதிலளித்து அமைச்சா் அருண்ராஜ் எழுதியுள்ள கடிதத்தில், தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில், அரசு செவிலியா் கல்லூரி தொடங்க உரிய நடவடிக்கை எடுக்குமாறு கோரியிருந்தீா்கள். அதன்படி, தருமபுரி அரசு மருத்துவமனை வளாகத்தில் ஆண்டுதோறும் 100 மாணவா்கள் சோ்க்கை திறனுடன் கூடிய மாதிரி பிஎஸ்சி செவிலியா் படிப்பு கொண்ட கல்லூரி விரைவில் தொடங்கப்படவுள்ளது எனத் தெரிவித்துள்ளாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments