கரப்பான் பூச்சி ஜனதா கட்சி எதிரொலி: வேலைவாய்ப்பு கோரி மதுரையில் 100-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் பேரணி
மதுரையில் கரப்பான் பூச்சி பேரணி என்ற பெயரில் இளைஞர்கள் வேலைவாய்ப்புகோரி பேரணி
மதுரையில் கரப்பான் பூச்சி பேரணி என்ற பெயரில் இளைஞர்கள் வேலைவாய்ப்புகோரி பேரணியில் ஈடுபட்டுள்ளனர்.
கரப்பான் பூச்சி ஜனதா கட்சி விவகாரம், தேசிய அளவில் சர்ச்சையாகி வரும் நிலையில், மதுரையில் படித்த படிப்புக்கு உரிய வேலைவாய்ப்பை வழங்கக்கோரி நூற்றுக்கணக்கான இளைஞர்கள் கரப்பான் பூச்சி பேரணியில் ஈடுபட்டுள்ளனர்.
படித்த இளைஞர்களுக்கு வேலைகோரி, அவர்களுக்கு உரிய வாழ்வாதாரமும் மரியாதையும் வேண்டும் என வலியுறுத்தி, இந்திய மாணவர் சங்கத்தினரும் (SFI), இந்திய ஜனநாயக இளைஞர்கள் சங்கத்தினரும் (DYFI) மற்றும் பல்வேறு பட்டதாரி இளைஞர்கள் என நூற்றுக்கணக்கானோர் சேர்ந்து, மதுரை காந்தி அருங்காட்சியகத்திலிருந்து தமுக்கம் தமிழன்னை சிலை வரையில் சுமார் ஒரு கி.மீ. தொலைவுக்கு பேரணியில் ஈடுபட்டனர்.
Advertisement
Advertisement
மேலும், இளைஞர்கள் நடத்தும் இப்பேரணிக்கு காவல்துறை தரப்பிலிருந்து பலத்த பாதுகாப்பும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
போலிச் சான்றிதழ்கள் தொடர்பான வழக்கு விசாரணையின்போது நாட்டில் வாழும் வேலையில்லாத இளைஞர்களை கரப்பான்பூச்சிகள் என்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்ய காந்த் குறிப்பிட்டிருந்ததாக செய்திகள் வெளியாகின.
இந்த கருத்துக்கு எதிர்வினையாற்றும் வகையில் ஆம் ஆத்மியின் சமூக ஊடகப் பிரிவில் பணியாற்றிய அபிஜித் தீப்கே, ’கரப்பான்பூச்சி மக்கள் கட்சி’ (சிஜேபி - Cockroach Janta Party) என்ற பெயரில் சமூக ஊடகப் பக்கங்களைத் தொடங்கினார்.
அரசியல் கட்சியாக பதிவு செய்யப்படாத நிலையில், வேலையில்லாமல், சோம்பேறியாக, ஆன்லைனில் எப்போதும் மூழ்கிக் கிடக்கும், ஆவேசமாக பேசும் திறன் கொண்ட இளைஞர்கள் இணையலாம் என்று அழைப்பு விடுக்கப்பட்டது.
ஜென் ஸி, இளைஞர்கள் மட்டுமின்றி எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் என அரசியல் தலைவர்களும் இந்த பக்கத்தை பின்தொடர்ந்து வருகின்றனர்.
சமூக ஊடகப் பக்கம் தொடங்கப்பட்ட ஒரு வாரத்துக்குள்ளாகவே 2 கோடிக்கும் அதிகமான பின்தொடர்பவர்களை கரப்பான் ஜனதா கட்சி ஈர்த்தது.
இந்த நிலையில், கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தை மத்திய அரசின் கோரிக்கையை ஏற்று எக்ஸ் தளம் முடக்கியுள்ளது.
Cockroach Janta Party: Over 100 Youths Rally in Madurai Demanding Employment
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.