பல்கலை. வேந்தர் முதல்வர்தான்! உயர்கல்வி அமைச்சர் குழப்பக் கூடாது! அன்புமணி
பல்கலைக்கழக வேந்தர் விவகாரம் குறித்து பாமக தலைவர் அன்புமணி கருத்து....
பல்கலைக்கழக வேந்தர் முதல்வர்தான் என்று உச்சநீதிமன்றமே உறுதி செய்த பின்னர் உயர்கல்வி அமைச்சர் குழப்பக் கூடாது என பாமக தலைவர் அன்புமணி கூறியுள்ளார்.
மதுரையில் இன்று செய்தியாளர்களுடன் பேசிய உயர்கல்வித் துறை அமைச்சர் விஸ்வநாதன், பல்கலைக்கழக வேந்தர் விவகாரம் குறித்து பதிலளிக்கையில், 'கடந்த அரசின் முறைகளைப் பின்பற்ற வேண்டிய கட்டாயம் எங்களுக்கு கிடையாது, இதுபற்றி முதல்வர் விஜய் முடிவெடுப்பார்' என்று கூறியிருந்தார். அமைச்சரின் இந்த கருத்துக்கு அரசியல் தலைவர்கள் பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இதுபற்றி அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
Advertisement
Advertisement
"தமிழ்நாட்டில் உள்ள பல்கலைக்கழகங்களின் வேந்தர்களாக முதலமைச்சர்தான் இருக்க வேண்டும் என்ற முந்தைய திமுக அரசின் நிலைப்பாட்டை இப்போதுள்ள த.வெ.க. அரசும் ஏற்க வேண்டும் என்று எந்தக் கட்டாயமும் இல்லை; இந்த விவகாரத்தில் முதலமைச்சர் இறுதி முடிவு எடுப்பார் என்று உயர்கல்வித்துறை அமைச்சர் விஸ்வநாதன் கூறியிருப்பது அதிர்ச்சியளிக்கிறது.
தமிழ்நாட்டில் உள்ள பல்கலைக்கழகங்களின் வேந்தராக முதலமைச்சரை நியமிக்கலாம் என்று தமிழக சட்டப்பேரவையில் முந்தைய திமுக ஆட்சியின் வெவ்வேறு காலகட்டங்களில் 10 சட்ட முன்வரைவுகள் நிறைவேற்றப்பட்டன. ஆனால், அந்த 10 சட்ட முன்வரைவுகளுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காமலும், குடியரசுத் தலைவருக்கு அனுப்பியும் தாமதப்படுத்தி வந்த நிலையில், அவற்றுக்கு ஒப்புதல் அளிக்கும்படி ஆளுநருக்கு ஆணையிடக் கோரி உச்சநீதிமன்றத்தில் திமுக அரசு வழக்குத் தொடர்ந்தது.
அதை விசாரித்த உச்சநீதிமன்றம் அரசியலமைப்புச் சட்டத்தின் 142-ஆம் பிரிவின்படி வழங்கப்பட்டுள்ள சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி, பல்கலைக்கழகங்களின் வேந்தர்களாக முதலமைச்சரை நியமிக்கும் சட்ட முன்வரைவுகளுக்கு ஒப்புதல் அளித்துவிட்டது. அதன்படி இன்றைய சூழலில் தமிழகத்தில் உள்ள அனைத்து பல்கலைக்கழகங்களின் வேந்தர் முதலமைச்சர்தான். இதில் எந்த ஐயமும் இல்லை.
அந்த சட்டங்களை செல்லாது என்று அறிவிக்கக் கோரி தொடரப்பட்ட வழக்கை முழுமையாக விசாரிக்காத சென்னை உயர்நீதிமன்றத்தின் விடுமுறைக்கால அமர்வு, அந்த சட்டங்களுக்கு இடைக்காலத் தடை விதித்தது. அதையும் செல்லாது என தீர்ப்பளித்து விட்ட உச்சநீதிமன்றம், அந்த வழக்கை 6 வாரங்களில் விசாரித்து தீர்ப்பளிக்கும்படி ஆணையிட்டுள்ளது. இத்தகைய சூழலில், தமிழக அரசு செய்ய வேண்டியதெல்லாம் உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கை விரைந்து முடித்து நடைமுறைக்கு கொண்டு வருவதுதான். அதன் மூலம்தான் பல்கலைக்கழகங்களுக்கு துணை வேந்தர்களை விரைவாக நியமிக்க முடியும்.
மாறாக, தமிழக அரசு சட்டங்களின் வாயிலாகவும், உச்சநீதிமன்றத் தீர்ப்பின் மூலமும் உறுதி செய்யப்பட்ட தமிழ்நாட்டு அரசு பல்கலைக்கழகங்களின் வேந்தர் முதலமைச்சர்தான் என்ற நிலைப்பாட்டை மாற்ற புதிய அரசு எந்த முயற்சியும் செய்யக் கூடாது. அவ்வாறு செய்தால் அது மாநில அரசின் உரிமைகளை தாரை வார்த்ததாக அமைந்து விடும்" என்று குறிப்பிட்டுள்ளார்.
CM is the University Chancellor: Higher Education Minister must not create confusion: Anbumani
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.