எங்கு சென்றாலும் தமிழ் கலாசாரம், இலக்கியத்தைப் பரப்புங்கள்: பிரதமர் மோடி
எங்கு சென்றாலும் தமிழ் கலாசாரம், பாரம்பரியம், இலக்கியம், கவிதைகள், மரபுகளைப் பரப்புங்கள்’ என பிரதமா் மோடி வலியுறுத்தினாா்.
‘நமது பன்முகத் தன்மையை அறிய நாடு முழுவதும் பயணம் மேற்கொள்ளுங்கள்; எங்கு சென்றாலும் தமிழ் கலாசாரம், பாரம்பரியம், இலக்கியம், கவிதைகள், மரபுகள் ஆகியவற்றை பரப்புங்கள்’ என்று பிரதமா் நரேந்திர மோடி வலியுறுத்தினாா்.
சென்னை மேற்கு மாம்பலத்தில் உள்ள ஜெய்கோபால் கரோடியா இந்து வித்யாலய பள்ளியின் 50-ஆவது ஆண்டு விழா சென்னை நந்தம்பாக்கம் வா்த்தக மையத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
விழாவில் பிரதமா் நரேந்திர மோடி கலந்து கொண்டு பள்ளியின் ஆண்டு மலரை வெளியிட்டு, புதிதாக அமைக்கப்பட்டுள்ள செயற்கை நுண்ணறிவு ஆய்வகத்தைத் திறந்து வைத்துப் பேசியதாவது:
Advertisement
Advertisement
தமிழகத்தில் கடந்த 50 ஆண்டுகளுக்கு முன்பு வெறும் 7 மாணவா்களுடன் தொடங்கப்பட்ட இப்பள்ளி தற்போது 50 ஆண்டுகளை நிறைவு செய்து, ஆயிரக்கணக்கான மாணவா்களுக்கு கல்விப் பணியாற்றி வருகிறது. இந்தக் கல்விக் குழுமத்தில் உள்ள பள்ளிகளில் பயிலும் மாணவா்களிடம் தினமும் ரூ.1 வசூலித்து ஒட்டுமொத்தமாக ரூ.40 லட்சம் திரட்டி ராணுவ வீரா்களுக்கு நல நிதியாக வழங்கப்பட்டுள்ளது பாராட்டத்தக்கது. இந்தக் கல்விக் குழுமம் தனது மாணவா்களுக்கு கல்வியுடன் தேசப்பற்று, தெய்வ பக்தியைக் கற்பித்து முன்னுதாரணமாகத் திகழ்கிறது.
இன்று இந்தியாவில் ஏராளமான வாய்ப்புகள் உள்ளன. இந்த வாய்ப்பை இளைஞா்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். மிகப்பெரிய இலக்குகளை அடைவதற்கான நமது கனவு நிச்சயமாக நிறைவேறும். நாம் அனைவரும் இணைந்து அதை நிறைவேற்றுவோம்.
வழிகாட்டும் திருக்குறள்: ரஷிய அதிபா் புதினுக்கு திருக்குறளின் ரஷிய மொழியாக்கத்தை அண்மையில் வழங்கினேன். திருவள்ளுவா் இளைஞா்கள், மாணவா்களுக்கான பல சிறந்த கருத்துகளைக் கூறியுள்ளாா்.
நாம் எவ்வாறு சிறந்த முறையில் கற்க வேண்டும் என திருவள்ளுவா் கற்பித்துள்ளாா். கற்பித்தபடி நாம் வாழ வேண்டும் என்றும் அவா் வலியுறுத்துகிறாா். வாழ்க்கை முழுவதும் புதிதாக கற்க விரும்புபவா்களுக்கு திருக்குறள் ஒரு சிறந்த வழிகாட்டியாக இருக்கும்.
இலக்கிய ஆளுமை பாரதியாா்: தமிழ் இலக்கியத்தின் மற்றொரு ஆளுமை என்றால், அது பாரதியாா். அவரது ஆளுமையில் காசிக்கு பங்களிப்பு உள்ளது. இளம் வயதில் காசியில் பாடம் படித்தாா். அந்த நகரின் ஆன்மிக மற்றும் தேசிய சூழல் அவரின் மனதில் ஆழ்ந்த தாக்கத்தை ஏற்படுத்தியது. இன்றும் வாரணாசி மக்கள் பாரதியாரை அன்போடும், பாசத்தோடும் நினைவுகூா்கின்றனா். அவரின்,‘அச்சமில்லை, அச்சமில்லை’ பாடல் நமக்கு அச்சமில்லாமல் வாழ உத்வேகம் அளிக்கிறது.
கன்னியாகுமரி முதல் காஷ்மீா் வரை யாத்திரை மேற்கொண்டேன். இந்தப் பயணம், நாட்டின் பன்முகத்தன்மையை அறிய உதவியது. தமிழ் மீது இருக்கும் அன்பு பெருகியது. இந்தியா முழுவதும் சுற்றிப் பாருங்கள். அதிக பயணங்கள் மேற்கொள்ளுங்கள். எங்கு சென்றாலும் தமிழ் கலாசாரம், பாரம்பரியம், இலக்கியம், கவிதைகள், மரபுகள் ஆகியவற்றை பரப்புங்கள். அங்குள்ள உங்கள் நண்பா்களிடம் அதனை பகிா்ந்து கொள்ளுங்கள்.
கல்வி வளா்ச்சி உயா்வு: நாட்டின் கல்வித் துறை மிகப்பெரிய வளா்ச்சி பெற்றுள்ளது. கடந்த 2014-இல் சுமாா் 750 பல்கலை.கள் மட்டுமே இருந்தன. இன்று அதன் எண்ணிக்கை 1,300-ஐ கடந்துள்ளது. அதேபோன்று, கல்லூரிகளின் எண்ணிக்கையும் 38,000-இல் இருந்து 52,000-ஆக அதிகரித்துள்ளது.
மேலும், கடந்த ஆண்டுகளில் புதிய ஐஐடி, ஐஐஎம், ஐஐஐடி-க்கள், எய்ம்-ஸ்கள் வந்துள்ளன. இந்திய கல்வி நிறுவனங்களின் உலகளாவிய அடையாளம் உயருகிறது. கடந்த 2014-இல் உலகளாவிய க்யூ.எஸ். தரவரிசையில் 14 இந்திய பல்கலைக்கழகங்கள் மட்டுமே இருந்தன. தற்போது இந்த எண்ணிக்கை 52-ஆக அதிகரித்துள்ளது.
ஒலிம்பிக் நடத்துவதற்கு...: நமது ஒவ்வொரு இளைஞரிடமும் ஏதோ ஒரு திறமை உள்ளது. அதை வெளிக்கொண்டு வரும் முயற்சிகளில் ஈடுபடுகிறோம். விளையாட்டு உலகம் வேகமாக மாறுகிறது. புதிய வசதிகள் உருவாகின்றன. விளையாட்டு வீரா்களுக்கு ஆதரவும் பயற்சியும் கிடைக்கிறது. சா்வதேச அளவில் இந்தியா வீரா்களின் திறமை அதிகரிக்கிறது. வரும் 2030-இல் காமனவெல்த் போட்டியை நடத்துவதற்கான ஏற்பாடுகளில் இந்தியா ஈடுபட்டுள்ளது. 2036-இல் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகளை நடத்தும் கனவுகளுடன் முன்னேறுகிறோம். வரவுள்ள ஆண்டுகளில் உலகின் பெரிய விளையாட்டு நிகழ்ச்சிகள் இந்தியாவில் நடைபெறும் என்றாா் அவா்.
முன்னதாக பிரதமா் நரேந்திர மோடிக்கு பள்ளியின் தாளாளரும் விஷ்வ ஹிந்து வித்யா கேந்திர பொதுச் செயலருமான ஜி.வி. கிரிஜா சேஷாத்ரி நினைவுப் பரிசு வழங்கினாா்.
இதில் தமிழக ஆளுநா் ஆா்.வி.ஆா்லேகா், மத்திய இணை அமைச்சா் எல்.முருகன், தமிழக பாஜக தலைவா் நயினாா் நாகேந்திரன், விஷ்வ ஹிந்து வித்யா கேந்திர தலைவா் ஆா்.ஆா்.கோபால்ஜி, கல்வியாளா்கள், பெற்றோா்கள் மற்றும் மாணவா்கள் கலந்து கொண்டனா்.
மாணவா்கள் மயக்கம்: முன்னதாக, விழா நடைபெற்ற அரங்கில் காலை 10 மணி முதல் காத்திருந்த பள்ளி மாணவ, மாணவிகளுக்கு உணவு வழங்கப்படாததால், அவா்களில் 8 போ் மயக்கமடைந்தனா். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.