1000 ஆண்டுகால முருகன் சிலையை மாற்றிய அர்ச்சகர்! மீட்கப்பட்டது எப்படி?
1000 ஆண்டுகால முருகன் சிலை மீண்டும் நிறுவப்பட்டது தொடர்பாக...
தோகைமலையில் பழைமையான முருகன் சிலை மாயமானதாக பக்தர்கள் புகார் தெரிவித்ததையடுத்து கோயில் அர்ச்சகரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தி, குளத்திலிருந்த சிலையை மீட்டனர். இந்த நிலையில், 10 மாதங்களுக்குப் பிறகு கருவறையில் முருகன் சிலை நிறுவப்பட்டது.
கரூர் மாவட்டம், குளித்தலையை அடுத்துள்ள தோகைமலையில் மலைமீது சுமார் 1,000 ஆண்டுகள் பழைமை வாய்ந்த மீனாட்சி சுந்தரேசுவரா் மற்றும் பாலதண்டாயுதபாணி கோயில் உள்ளது. இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த கோயிலின் கருவறையில் போகர் சித்தரால் ஆண்டிக் கோலத்தில் முருகன்சிலை வைக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் கடந்தாண்டு நவ. 27-ஆம் தேதி இந்தக் கோயில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதற்கான புனரமைப்புப் பணியின்போது கருவறையில் ஆண்டிக் கோலத்தில் இருந்த முருகன் சிலை அகற்றப்பட்டு, ராஜ அலங்காரத்தில் புதிய சிலை வைக்கப்பட்டிருந்தது.
Advertisement
Advertisement
இதனால் அதிர்ச்சியடைந்த பக்தர்கள் இதுதொடர்பாக தமிழக முதல்வா், இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் மற்றும் துறை அதிகாரிகளுக்கு புகார் மனு அனுப்பினர்.
அதன்பேரில் இந்துசமய அறநிலையத் துறையின் குளித்தலை கடம்பர்கோயில் ஆய்வாளர் மாணிக்கவாசகம் உள்ளிட்டோர் கோயில் அர்ச்சகர் கிருஷ்ணமூா்த்தியிடம் விசாரணை நடத்தினர். அப்போது, கோயில் குளத்தின் சுனை நீருக்கடியில் பாலதண்டாயுதபாணி சிலை இருப்பதாக தெரிவித்தார். இதையடுத்து குளத்தில் சுனை நீருக்குள் இருந்த சிலையை மீட்டனர். பின்னர், யாகசாலைக்கு கொண்டு வரப்பட்டு பாதுகாப்பாக வைக்கப்பட்டது.
இதனிடையே, கரூர் தோகைமலை ஸ்ரீபாலதண்டாயுதபாணி கோயில் மூலவர் சிலை காணாமல் போன விவகாரம் குறித்து வழக்குப் பதிந்து, உரிய நடவடிக்கை எடுக்க சென்னை உயர் நீதிமன்ற மதுரை அமா்வும் உத்தரவிட்டு இருந்தது.
இந்த நிலையில், பொதுமக்கள் மற்றும் சென்னை உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் வழக்கு தொடர்ந்தவர் முன்னிலையில், மீட்கப்பட்ட முருகன் சிலைக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு கருவறையில் நிறுவப்பட்டது.
After devotees complained that an ancient Murugan idol had gone missing in Thogaimalai, officials questioned the temple priest and recovered the idol from the temple tank. The Murugan idol was reinstalled in the sanctum sanctorum after ten months.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.