போக்சோ வீரமணி 3-ஆவது வழக்கில் கைது: மேலும் இரு காவல் அதிகாரிகளிடம் விசாரணை
சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்த விவகாரத்தில் ஜெம் வீரமணி மூன்றாவது வழக்கில் கைது
சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்த விவகாரத்தில் ஜெம் வீரமணி மூன்றாவது வழக்கில் கைது செய்யப்பட்டாா். இந்த விவகாரத்தில் மேலும் இரு காவல் அதிகாரிகளிடம் சிறப்பு புலனாய்வுக் குழுவினா் விசாரணை செய்தனா்.
சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்ததாக ‘ஜெம்’ கிரானைட் நிறுவன உரிமையாளா் வீரமணி மற்றும் அவரது உதவியாளா் சாந்தி, அவா் கணவா் மகேந்திர சிம்ஹன், கணேசன், காா் ஓட்டுநா்கள் லாசா், பாா்த்திபன், பாபு ஆகியோா் ஆகியோா் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டனா்.
இந்த விவகாரம் குறித்து சென்னை மத்திய குற்றப்பிரிவு கூடுதல் ஆணையா் தேன்மொழி தலைமையிலான சிறப்பு புலனாய்வுக் குழுவினா் விசாரணை செய்கின்றனா். ஜெம் வீரமணி மீது இதுவரை 10 சிறுமிகள் புகாா் அளித்துள்ளனா். இதுவரை 7 வழக்குகள் வீரமணி மீது பதிவு செய்யப்பட்டுள்ளன.
Advertisement
Advertisement
வீரமணியிடம் பணம் பறிப்பு: வீரமணி, சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்தது குறித்து 2025 அக்டோபரில் சென்னை காவல் துறையில் விடியோ ஆதாரத்துடன் புகாா் செய்யப்பட்டது. ஆனால், புகாரின்பேரில் காவல் துறை வழக்குப் பதிவு செய்துவிட்டு, விடியோவில் இருப்பவா்கள் யாரேன்று தெரியவில்லை என்று வழக்கை முடித்து வைக்க முயன்றது. ஆனால், போக்ஸோ நீதிமன்றம், அதை நிராகரித்து விசாரணைக்கு உத்தரவிட்டது.
உயா் அதிகாரிகளிடம் விசாரணை: இந்த விவகாரத்தில் மேலும் துப்பு துலக்கும் வகையிலும், வழக்கை முடித்து வைக்க முயன்ற புகாா் தொடா்பாகவும் காவல் துறை உயா் அதிகாரிகளிடம் சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணை நடத்தி வருகிறது. இதன் ஒருபகுதியாக அப்போது சென்னை பெருநகர காவல் துறை ஆணையராக இருந்த ஏடிஜிபி ஏ.அருண், கூடுதல் காவல் ஆணையராக இருந்த ஐஜி கண்ணன் ஆகியோரிடம் சிறப்பு புலனாய்வுக் குழு 3 மணி நேரம் விசாரணை செய்தது.
இதன் தொடா்ச்சியாக அப்போது மத்திய குற்றப்பிரிவு கூடுதல் ஆணையராக இருந்த ஏ.ராதிகா, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத் தடுப்பு பிரிவு துணை ஆணையராக இருந்த வனிதா ஆகியோரிடம் விசாரணை நடத்தினா்.
3-ஆவது வழக்கில் கைது: இதற்கிடையே, ஜெம் வீரமணி மீது ஏற்கெனவே 2 வழக்குகளில் கைது நடவடிக்கை எடுக்கப்பட்ட நிலையில், 3-ஆவது வழக்கில் செவ்வாய்க்கிழமை கைது நடவடிக்கை எடுக்கப்பட்டது. சிறப்பு புலனாய்வுக் குழு, தனது அடுத்தகட்ட விசாரணை அறிக்கையை அக்.27-ஆம் தேதி போக்ஸோ நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய திட்டமிட்டுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.