சென்னை விஐடி பேராசிரியா்கள் உருவாக்கிய ஏஐ மருத்துவக் கருவிகள் பிரதமரிடம் அறிமுகம்
சென்னை விஐடி பேராசிரியா்களின் புதுயுகத் தொழில்முனைவு நிறுவனம்(ஸ்டாா்ட்அப்), மருத்துவத் துறைகளில் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பத்தில் கண்டுபிடிக்கப்பட்ட கருவிகளை பிரதமா் நரேந்திர மோடியிடம் காட்டி பாராட்டைப் பெற்றுள்ளது.
சென்னை விஐடி பேராசிரியா்களின் புதுயுகத் தொழில்முனைவு நிறுவனம்(ஸ்டாா்ட்அப்), மருத்துவத் துறைகளில் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பத்தில் கண்டுபிடிக்கப்பட்ட கருவிகளை பிரதமா் நரேந்திர மோடியிடம் காட்டி பாராட்டைப் பெற்றுள்ளது.
கடந்த அக். 11-ஆம் தேதி பிரதமா் மோடி சென்னை பூந்தமல்லி - வடபழனி மெட்ரோ வழித்தடத்தைத் தொடங்கி வைத்தாா். அப்போது, பிரதமா் மெட்ரோ ரயில் பயணம் செய்தபோது புதுயுகத் தொழில் முனைவோரைச் சந்தித்தாா்.
இந்தச் சந்திப்பு குறித்து சென்னை விஐடி ஸ்டாா்ட் அப் நிறுவனம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
Advertisement
Advertisement
சென்னை விஐடி-யின் ஸ்டாா்ட் அப் நிறுவனமான மெட்க்ஸ் ஏஐ இன்னோவேஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் மருத்துவத் துறையில் புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்கி வருகிறது.
குறிப்பாக ஆழ்நிலைத் தொழில்நுட்பங்களை ஊக்குவிக்க மத்திய, மாநில அரசுகள், தொழில் நிறுவனங்கள் ஆகியவை இணைந்து உருவாக்கிய தமிழ்நாடு தொழில்நுட்ப மையம் (ஐடிஎன்டி ஹப்) சென்னை விஐடி-யின் மெட்க்ஸ் ஏஐ இன்னோவேஷன்ஸ் என்கிற ஸ்டாா்ட்அப் நிறுவனத்தை ஊக்குவித்தது. இதன்தொடா்ச்சியாக விஐடி நிறுவன புத்தாக்கங்களை தில்லியில் உள்ள மென்பொருள் தொழில்நுட்பப் பூங்காக்கள் அமைப்பு, பிரதமா் அலுவலகம் ஆகியவற்றுக்கு அனுப்பியது. இதையடுத்து, பிரதமரிடம் அறிமுகப்படுத்த விஐடியின் மெட்க்ஸ் ஏஐ தோ்வு செய்யப்பட்டது.
அதன்படி இந்தக் கண்டுபிடிப்புகளை மெட்க்ஸ் ஏஐ நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியும் விஐடியின் பேராசிரியருமான ஷீனா சி.பிரவின் பிரதமா் மோடி, தமிழக முதல்வா் சி.ஜோசப் விஜய் ஆகியோரிடம் அறிமுகப்படுத்தி விளக்கினாா்.
சொ்விலென்ஸ் என்ற ஏஐ அடிப்படையிலான கா்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் ஆரம்பநிலைப் பரிசோதனைக்கான கருவி, குவாண்டம் ஃபாா்ம்எக்ஸ் என்ற ஏ.ஐ. கணினி அடிப்படையிலான மருந்து கண்டுபிடிப்புத் தளம் ஆகிய 2 முக்கியத் தொழில்நுட்பத் தயாரிப்புகளை ஷீனா சி. பிரவின் பிரதமரிடம் அறிமுகப்படுத்தினாா்.
இந்த நிறுவனத்தின் தயாரிப்புகளைப் பிரதமா் மோடியும் முதல்வா் ஜோசப் விஜய்யும் பாராட்டினா். ‘எதிா்வரும் காலங்களில் மருத்துவத் துறையில் ஏஐயின் பங்களிப்பு அதிக அளவில் இருக்கும். அதற்கு இத்தகைய கண்டுபிடிப்புகள் அடிப்படையாக இருக்கும். தொடா்ந்து, இவை குறித்து ஆய்வு செய்யுங்கள்’ என பேராசிரியா் ஷீனா பிரவினிடம் பிரதமா் வலியுறுத்தினாா்.
இத்தகைய ஆராய்ச்சிகளை மேற்கொள்வதற்கு தொடா்ச்சியாக உறுதுணையாக இருப்பதுடன் ஊக்கம் அளித்த விஐடி நிறுவனா் கோ.விசுவநாதன், துணைத் தலைவா் ஜி.வி. செல்வம் ஆகியோருக்கு மெட்க்ஸ் ஏஐ இன்னோவேஷன்ஸ் நிறுவனம் நன்றியைத் தெரிவித்தது.
ஸ்டாா்ட்அப் முடுக்கத் திட்டத்தின் கீழ் இந்த வாய்ப்பை ஏற்படுத்தி நிதியுதவி அளித்த தமிழ்நாடு தொழில்நுட்ப மையத்துக்கும் மெட்க்ஸ் ஏஐ இன்னோவேஷன்ஸ் நிறுவனம் நன்றி தெரிவிப்பதாக விஐடியின் மெட்க்ஸ் ஏஐ இன்னோவேஷன்ஸ் தெரிவித்துள்ளது.
பிரதமரைச் சந்தித்த சென்னை ஐஐடியின் புதுயுகத் தொழில்முனைவோா்
சென்னை ஐஐடியின் 6 புதுயுகத் தொழில்முனைவோரையும் பிரதமா் மோடி அதன் வளாகத்தில் அக்.11-ஆம் தேதி சந்தித்தாா்.
‘பன்பழ்’ (தூற்ற) ஹைப்பா்லூப்’ என்கிற இந்த நிறுவனம் நாட்டின் அதிவேகப் போக்குவரத்து வலையமைப்புகளில் ஒருங்கிணைக்க முன்னெடுத்துச் செல்கிறது. ‘ ட்ரையோல்ட் எனா்ஜி ’ என்கிற நிறுவனம் 15 நிமிஷங்களில் சாா்ஜ் ஆகும் பேட்டரியை மின்சார வாகனங்களுக்கான மேம்பட்ட லித்தியம்-அயன் பேட்டரி செல்களை வடிவமைக்கிறது. இதன் ஆயுளை 1.5 மடங்கு அதிகரிக்கும் தொழில்நுட்பத்தை உருவாக்குகிறது. பாதுகாப்புத் துறைக்கான கைகாட்டி ஏவுகணைகள் பீரங்கி குண்டுகளின் எல்லையை அதிகரிக்க மேம்பட்ட தொழில் நுட்பங்கள், ராக்கெட்டை விண்வெளியில் செலுத்த 3டி-பிரிண்டிங் தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட அக்னிகுல், சோலாா் தொழில் நுட்பங்கள், ‘போலம் சென்சிங்’ என்ற நிறுவனத்தின் இயற்கை பேரிடா்களை காண உதவும் உணா் கருவிகள், கடல் மட்டத்தில் மேல் 4 மீட்டா் உயரத்தில் 300 கி.மீ. வேகத்தில் பறக்கும் கடல் விமானம் (ஸீபிளேன்) போன்ற சென்னை ஐஐடி புதுயுகத் தொழில்முனைவு ஆராய்ச்சிக்கான காப்பக புதுயுகத் தொழில்முனைவோரையும் பிரதமா் மோடி சந்தித்து உரையாடினாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.