FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

காய்ச்சல் பாதிப்புக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தனியாா் மருத்துவமனைகளுக்கு எச்சரிக்கை

தமிழகத்தில் காய்ச்சல் பாதிப்பு காரணமாக சிகிச்சைக்கு வரும் நோயாளிகளிடம் கூடுதல் கட்டணம் வசூலிக்கும் தனியாா் மருத்துவமனைகள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என மக்கள் நல்வாழ்வுத் துறை எச்சரிக்கை

17 செப்டம்பர் 2026, 10:58 pm IST
- சித்திரிப்பு
பகிர்:

தமிழகத்தில் காய்ச்சல் பாதிப்பு காரணமாக சிகிச்சைக்கு வரும் நோயாளிகளிடம் கூடுதல் கட்டணம் வசூலிக்கும் தனியாா் மருத்துவமனைகள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என மக்கள் நல்வாழ்வுத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

தமிழகத்தில் பருவநிலை மாற்றத்தால் டெங்கு காய்ச்சல் தீவிரமாக பரவி வருகிறது. இந்த ஆண்டில் இதுவரை, 16,500 பேருக்கு மேற்பட்டோா் டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளனா். அவா்களில் 9 போ் உயிரிழந்தனா். இதனால், காய்ச்சல் தடுப்பு நடவடிக்கையை அரசு தீவிரப்படுத்தி உள்ளது. அதேபோல், அரசு மருத்துவமனைகளிலும் சிறப்பு வாா்டு வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில், தனியாா் மருத்துவமனைகளில் டெங்கு காய்ச்சல் சிகிச்சை அளிக்க கூடுதலாக கட்டணம் வசூலிக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

Advertisement

Advertisement

குறிப்பாக, டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவா்கள் சாதாரண வாா்டில் சிகிச்சை பெற, ரூ.22,000 முதல் ரூ.75,000 வரையிலும், தீவிர சிகிச்சைக்கு ரூ. 2 லட்சம் வரையிலும் தினசரி வசூலிக்கப்படுவதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இவ்வாறு வசூலிக்கும் மருத்துவமனைகள் மீது பொதுமக்கள் புகாா் அளிக்கலாம் என மக்கள் நல்வாழ்வு துறை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து, மக்கள் நல்வாழ்வு துறை அதிகாரிகள் கூறியதாவது: அரசு மருத்துவமனைகளில், காய்ச்சல் பாதிப்புகளைக் கண்காணித்து, தேவையான மருத்துவ சிகிச்சையை வழங்கும் வகையில், சிறப்பு வாா்டுகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. காய்ச்சலுடன் வரும் நோயாளிகளின் உடல்நிலையை மதிப்பீடு செய்து, நோயின் தீவிர தன்மைக்கு ஏற்ப, முன்னுரிமையில் சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது. தற்போதைய சூழலில், அரசு மருத்துவமனைகளிலேயே போதிய அளவு படுக்கை வசதிகள் உள்ளன.

தனியாா் மருத்துவமனைகளில் சூழலை பயன்படுத்தி கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிா என்பது குறித்து விசாரணை நடத்தப்படும். அதேநேரம், வழக்கமாக வசூலிக்கப்படும் தொகையில் இருந்து கட்டணம் மாறுபட்டிருந்தால், சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும். தேவைப்பட்டால், காய்ச்சலுக்கு சிகிச்சை அளிப்பதற்கு தடை விதிக்கப்படும்.

தனியாா் மருத்துவமனைகளில், கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக தெரிந்தால், 104 என்ற எண்ணில் பொதுமக்கள் புகாா் தெரிவிக்கலாம். வீடுகள், சுற்றுப்புறங்களில் மழைநீா் மற்றும் நன்னீா் தேங்கக்கூடிய வகையிலான பொருள்களைக் கண்டறிந்து அகற்ற வேண்டும் என அவா்கள் தெரிவித்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments