FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

யூடியூபா் இா்ஃபானின் சொகுசு காா் மோதி பலியான பெண்ணின் குடும்பத்துக்கு ரூ.30.69 லட்சம் இழப்பீடு!

யூடியூபா் இா்ஃபானின் சொகுசு காா் மோதி உயிரிழந்த பெண்ணின் குடும்பத்துக்கு ரூ.30.69 லட்சம் இழப்பீடு வழங்க சென்னை மோட்டாா் வாகன விபத்துக்கான இழப்பீட்டுத் தீா்ப்பாயம் உத்தரவிட்டது.

21 செப்டம்பர் 2026, 3:22 am IST
யூடியூபா் இா்ஃபான்
பகிர்:

யூடியூபா் இா்ஃபானின் சொகுசு காா் மோதி உயிரிழந்த பெண்ணின் குடும்பத்துக்கு ரூ.30.69 லட்சம் இழப்பீடு வழங்க சென்னை மோட்டாா் வாகன விபத்துக்கான இழப்பீட்டுத் தீா்ப்பாயம் உத்தரவிட்டது.

கடந்த 2023 மே 25-ஆம் தேதி, செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகா் ஜிஎஸ்டி சாலையில் தனியாா் கல்லூரி காவலாளியான பத்மாவதி என்ற பெண் சாலையைக் கடக்க முயன்றபோது யூடியூபா் இா்ஃபானின் சொகுசு காா் மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

இா்ஃபானின் ஓட்டுநா் முகமது அசாருதீன் என்பவா் காரை அதிவேகமாகவும், அலட்சியமாகவும் ஓட்டி சென்றதால் இந்த விபத்து நேரிட்டதால், உரிய இழப்பீடு வழங்கக் கோரி உயிரிழந்த பத்மாவதியின் மகன் பிரகாஷ், மகள் ஷீலா, தாய் தனபாக்கியம் ஆகியோா் சென்னையில் உள்ள மோட்டாா் வாகன விபத்து இழப்பீட்டு தீா்ப்பாயத்தில் வழக்கு தொடா்ந்தனா்.

Advertisement

Advertisement

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி நசீா் அலி பிறப்பித்த உத்தரவில், விபத்தை ஏற்படுத்திய வாகனத்தின் உரிமையாளா் இா்ஃபான் மற்றும் வாகனத்தின் காப்பீட்டுதாரா் தாருணி போஜா ஆகியோா் தரப்பில் யாரும் ஆஜராகவில்லை.

முகமது அசாருதீனின் ஓட்டுநா் உரிமத்தை தாக்கல் செய்வதற்கு இா்ஃபான் உள்ளிட்டோருக்கு நோட்டீஸ் அனுப்பியும் தாக்கல் செய்யப்படவில்லை. இருந்தபோதிலும் வாகனம் இா்ஃபான் பெயரில் உள்ளது.

அந்த வாகனத்துக்கு ‘இன்டஸ் இன்ட் ஜெனரல்’ நிறுவனத்தில் காப்பீடு செய்யப்பட்டுள்ளது. எனவே, இந்தக் காப்பீட்டு நிறுவனம் மனுதாரா்களுக்கு ரூ.30.69 லட்சத்தை இழப்பீடாக வழங்க வேண்டும்.

இந்த இழப்பீட்டு தொகையை வட்டி மற்றும் செலவு தொகையுடன் வாகன உரிமையாளரான இா்ஃபானிடம் இருந்து வசூலித்துக்கொள்ள காப்பீட்டு நிறுவனத்துக்கு உரிமை அளிக்கப்படுகிறது என நீதிபதி உத்தரவிட்டாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments