தவெக வேட்பாளரையே விமர்சித்து பிரசாரம் செய்தாரா ஆதவ் அர்ஜூனா?
தவெக வேட்பாளர் மரகதம் குமரேவேலை விமர்சிக்கும் வகையில் பிரசாரம் செய்தாரா ஆதவ் அர்ஜூனா என்பது பற்றி..
அதிமுகவில் இருந்து, தவெகவுக்கு வந்த மரகதம் குமரவேலை ஆதரித்து மதுராந்தகத்தில் பிரசாரம் செய்த அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, கடந்த காலத்தில் நடந்த முறைகேடுகளைப் பட்டியலிட்டது குறித்து அதிமுக தொண்டர்கள் சுட்டிக்காட்டியிருக்கிறார்கள்.
மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகளில் இடைத்தேர்தல் பிரசாரம் சூடுபிடித்திருக்கும் நிலையில், மதுராந்தகம் தொகுதியில் போட்டியிடும் தவெக வேட்பாளர் மரகதம் குமரவேலுக்கு ஆதரவாக பிரசாரம் செய்த அமைச்சர் ஆதவ் அர்ஜூனா பேசிய தகவல் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.
மதுராந்தகம் தொகுதியில் தவெக சார்பில் போட்டியிடும் மரகதம் குமரவேலுக்கு ஆதரவாக அமைச்சர்கள் ஆதவ் அர்ஜுனா, ராஜ்மோகன் உள்ளிட்டோர் நேற்று பிரசாரம் செய்தனர்.
Advertisement
Advertisement
அப்போது ஆதவ் அர்ஜுனா பேசுகையில், தமிழகம் முழுவதும் தவெக வெற்றி பெற்றது. அப்போது மதுராந்தகம் தொகுதி மட்டும் தவறிவிட்டது.
அப்போது இரட்டை இலையில் போட்டியிட்ட, எம்ஜிஆர் அவர்களால் பெயர் சூட்டப்பட்ட மரகதம் அக்காவுக்குத்தான் நீங்கள் வாக்களித்திருக்கிறீர்கள்.
அக்காவின் முகத்துக்காகத்தான் அப்போது வாக்களித்தீர்கள், இப்போது, அதே அக்காவின் முகம், முதல்வர் விஜய் முகமாக உள்ளது. சொல்லவே வேண்டாம். 125000 வாக்குகள் வாங்கியே ஆக வேண்டும் என்று நிர்ணயிக்கிறோம். மரகதம் குமரவேலுக்கு அனைவரையும் வாக்களிக்க வைக்கிறோம்.
இரண்டே பேருக்குத்தான் போட்டி, ஒன்று திமுக, மற்றொன்று அதிமுக, இவர்களுக்குள்தான் போட்டியே அதுவும் இரண்டாவது இடம் யாருக்கு, மூன்றாவது இடம் யாருக்கு என்பதில்தான் மதுராந்தகத்தில் போட்டி உள்ளது என்று ஆதவ் கூறினார்.
50 ஆண்டுகளாக மாறி மாறி ஆட்சி செய்து வந்த திமுக, அதிமுகவால் இங்கு சாலை போட முடியவில்லை, தண்ணீர் கொண்டு வர முடியவில்லை. ஆனால் தவெக ஆட்சி இதனை செய்து கொடுக்கும் என்றார்.
மதுராந்தகத்தில் சாலை வசதியே இல்லை, ஆனால் இங்கு சாலை போடப்பட்டதாகக் கணக்கு இருக்கிறது, ஆனால் சாலைப் போடப்படவில்லை, மின்சார வசதியே இல்லை, ஆனால், மின்சார வசதி செய்து கொடுக்கப்பட்டதாக கணக்குக் காட்டப்பட்டுள்ளது. பாருங்கள் இங்கு குடிசை வீடு இருக்கிறது. இந்த நிலை மாற்றப்படும் என்று கூறியிருந்தார் ஆதவ் ஆர்ஜுனா.
இது குறித்து கருத்துக் கூறியிருக்கும் அதிமுகவினர், கடந்த ஐந்து ஆண்டு காலமாக, தவெக வேட்பாளர் மரகதம் குமரவேல்தான் மதுராந்தகம் எம்எல்ஏவாக இருந்தார். அது நினைவில் இல்லாமல், கடந்த ஐந்து ஆண்டு காலத்தில் முறைகேடு நடந்ததாக, மரகதம் குமரவேலை வைத்துக் கொண்டே பேசியிருக்கிறாரே என்று கூறியிருக்கிறார்கள். சமூக வலைத்தளத்திலும் இது குறித்து கருத்துகளை பதிவிட்டுள்ளனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.