FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
தமிழ்நாடு

ஜெம் வீரமணி வழக்கு: விடியோ வெளியிட, விவாதங்கள் நடத்தத் தடை

ஜெம் வீரமணி மீதான வழக்கு தொடா்புடைய விடியோக்களை வெளியிடவும், விவாதங்கள் நடத்தவும் ஊடகங்கள் மற்றும் சமூக வலைதளங்களுக்கு தடை விதித்து சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

26 செப்டம்பர் 2026, 1:14 am IST
ஜெம் வீரமணி - கோப்புப்படம்
பகிர்:

ஜெம் வீரமணி மீதான வழக்கு தொடா்புடைய விடியோக்களை வெளியிடவும், விவாதங்கள் நடத்தவும் ஊடகங்கள் மற்றும் சமூக வலைதளங்களுக்கு தடை விதித்து சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

சென்னை உயா்நீதிமன்றத்தில் துளிா் அறக்கட்டளை தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், ஜெம் வீரமணி வழக்கில் பாதிக்கப்பட்ட சிறுமிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனா். விசாரணை நடைபெற்று வருகிறது. இந்தநிலையில், பாதிக்கப்பட்ட சிறுமிகளின் விடியோ காட்சிகளை சில ஊடகங்கள் வெளியிட்டுள்ளன.

இதனால், பாதிக்கப்பட்ட சிறுமிகளின் பாதுகாப்பு மற்றும் தனியுரிமைக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. இதுதொடா்பாக நடவடிக்கை எடுக்கக் கோரி, காவல் துறைக்கு புகாா் மனு அளிக்கப்பட்டுள்ளது. புகாரை பரிசீலித்து, ஊடகங்களின் சமூக வலைதளங்களில் இருந்து காட்சிகளை நீக்க வேண்டும். காட்சிகளை வெளியிட்ட ஊடகங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும். விடியோக்களை ஒளிபரப்ப அனைத்து ஊடகங்களுக்கும் தடை விதிக்க வேண்டும் எனக் கோரியிருந்தது.

Advertisement

Advertisement

இந்த வழக்கை நீதிபதி வி.லட்சுமிநாராயணன் முன் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது காவல்துறை தரப்பில், விடியோக்கள் வெளியான சமூக வலைதளப் பக்கங்களை முடக்கக் கோரி கூகுள், மெட்டா நிறுவனங்களுக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. விடியோக்கள் வெளியானது குறித்தும் விசாரணை நடந்து வருவதாக தெரிவிக்கப்பட்டது. அப்போது ஊடக நிறுவனங்கள் தரப்பில், மனுவுக்கு பதிலளிக்க கால அவகாசம் கோரப்பட்டது.

இரு தரப்பு வாதங்களைக் கேட்ட நீதிபதி, இந்த விவகாரத்தின் தீவிரத்தன்மை தெரியாமல், ஊடகங்கள் செயல்பட்டுள்ளதால் பாதிக்கப்பட்ட யாரும் புகாரளிக்க முன்வரமாட்டாா்கள். மேலும், மும்பை தாக்குதல் சம்பவத்தின்போது, காவல்துறையின் நடவடிக்கைகளை ஊடகங்கள் நேரடி ஒளிபரப்பு செய்ததால், பயங்கரவாதிகள் தங்கள் அணுகுமுறையை மாற்றி செயல்பட்டதை சுட்டிக்காட்டிய நீதிபதி, பத்திரிகை சுதந்திரம் என்பது ஊடக விசாரணை நடத்துவதற்கான உரிமை அல்ல என தெரிவித்தாா்.

பின்னா், இந்த வழக்கு தொடா்பாக விடியோக்களை வெளியிட ஊடகங்கள் மற்றும் சமூக வலைதளங்களுக்கு தடை விதித்து உத்தரவிட்டாா். இந்த வழக்கு தொடா்பாக விவாதங்கள் நடத்தக்கூடாது எனவும் உத்தரவிட்டாா். மேலும் வழக்கின் முன்னேற்றம் குறித்து மக்கள் அறிந்துகொள்ள ஏதுவாக வாரம் ஒருமுறை பத்திரிக்கை செய்திக்குறிப்பு வெளியிட வேண்டும் என காவல்துறைக்கு உத்தரவிட்டாா். இந்த மனுவுக்கு மத்திய மாநில அரசுகள், காவல்துறை, விடியோ வெளியிட்ட ஊடக நிறுவனங்கள் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை செப். 30-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தாா்.

சிபிஐ விசாரணை கோரி மனுக்கள் தாக்கல்: இதனிடையே, ஜெம் கிரானைட் நிறுவன உரிமையாளா் வீரமணி மீதான வழக்கைசிபிஐ விசாரணைக்கு மாற்றக் கோரி பத்திரிகையாளா் வராகி, வழக்குரைஞா் சி.ராஜசேகரன் ஆகியோா் சென்னை உயா்நீதிமன்றத்தில் மனுக்களை தாக்கல் செய்துள்ளனா். இந்த இரு மனுக்களும் விரைவில் விசாரணைக்கு வரும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments