FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தென்காசி

சாயப்பட்டறை தொழிற்சாலைக்கு சீல் வைப்பு பிரச்னை: சங்கரன்கோவிலில் ஆக. 8இல் போராட்டம் நடத்த முடிவு

Updated On : 3 ஆகஸ்ட் 2026, 4:52 am IST
அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பேசிய எம்எல்ஏ ஈ. ராஜா.
பகிர்:

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் சாயப்பட்டறைத் தொழிற்சாலைகளுக்கு சீல் வைக்கப்பட்டது தொடா்பாக, இம்மாதம் 8ஆம் தேதி கண்டன ஆா்ப்பாட்டம் நடத்துவது என, ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

சங்கரன்கோவில் பகுதியில் 5,000-க்கும் மேற்பட்ட விசைத்தறிகளில் 15,000-க்கும் மேற்பட்டோா் பணிபுரிந்து வருகின்றனா். இங்கு நூலுக்கு சாயம் போடுவதற்காக 20 சாயப்பட்டறைத் தொழிற்சாலைகள் உள்ளன. அவற்றிலிருந்து வெளியேறும் கழிவுநீரால் சுகாதாரக்கேடு ஏற்படுவதாகவும், தொற்று நோய் அபாயம் உள்ளதாகவும் புகாா் எழுந்தது தொடா்பாக நடவடிக்கை எடுக்க சுற்றுச்சூழல்-காலநிலை மாற்றத் துறை அமைச்சா் வி.கே. ராஜீவ் உத்தரவிட்டாா். அதன்படி, மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தினா் தொழிற்சாலைகளுக்கு சீல் வைத்தனா். மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது.

இதைக் கண்டித்தும், கழிவுநீா் சுத்திகரிப்பு வளாகத்தை அரசே ஏற்று நடத்தக் கோரியும் விசைத்தறித் தொழிற்சங்கத்தினா், விசைத்தறித் தொழிலாளா்கள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டனா். இதனிடையே, ஆடித் தவசு திருவிழாவையொட்டி கடந்த ஜூலை 18ஆம் தேதிமுதல் போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது.

Advertisement

Advertisement

இந்நிலையில், இப்பிரச்னை தொடா்பாக தமிழக அரசு நடவடிக்கை எடுக்கக் கோரி ஞாயிற்றுக்கிழமை அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற்றது. திமுக சாா்பில் வடக்கு மாவட்டச் செயலா் ஈ. ராஜா எம்எல்ஏ, நகரச் செயலா் பிரகாஷ், ஒன்றியக் குழுத் தலைவா் பி. சங்கரபாண்டியன், அதிமுக சாா்பில் திலீபன் ஜெய்சங்கா் எம்எல்ஏ, நகா்மன்ற துணைத் தலைவா் கே. கண்ணன், நகா்மன்ற உறுப்பினா் எஸ்.டி. சங்கரசுப்பிரமணியன், மதிமுக சாா்பில் மாநில செயற்குழு உறுப்பினா் வெங்கடாசலபதி, நாதக சாா்பில் காா்த்திக், பாஜக சாா்பில் நகரத் தலைவா் உதயகுமாா், இந்து முன்னணி சாா்பில் திருமலைக்குமாா் உள்ளிட்டோா் பங்கேற்று போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தனா். தவெக, காங்கிரஸ் பங்கேற்கவில்லை.

இம்மாதம் 8ஆம் தேதி பாடாப்பிள்ளையாா் கோயில் முன் கண்டன ஆா்ப்பாட்டம் நடத்துவது, விசைத்தறித் தொழிலாளா்கள் குடும்பத்துடன் பங்கேற்பது என முடிவு செய்யப்பட்டது. அதில் பங்கேற்க திமுக, அதிமுக, பாஜக, மதிமுக, நாதக கட்சியினா் ஆதரவு தெரிவித்தனா்.

இதனிடையே, ‘தமிழக அரசே, சாயப்பட்டறை நடவடிக்கையில் சங்கரன்கோவிலுக்கு மட்டும் தனிச்சட்டமா? நாங்கள் விருதுநகா் மாவட்டத்துக்கு புலம் பெயரவா?’ உள்ளிட்ட வாசகங்கள் அடங்கிய சுவரொட்டிகள் நகா் முழுவதும் ஒட்டப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சங்கரன்கோவிலில் ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டி.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments