FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
வணிகம்

வரலாறு காணாத சரிவில் பங்குச் சந்தை! ரூ. 20 லட்சம் கோடி இழப்பு!! காரணம் என்ன?

அமெரிக்காவின் வரிவிதிப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் பங்குச் சந்தைகள் வரலாறு காணாத கடும் சரிவு.

Updated On : 7 ஏப்ரல் 2025, 12:41 pm IST
கோப்புப் படம்
பகிர்:

வாரத்தின் முதல் நாளான இன்று(ஏப்ரல் 7) பங்குச்சந்தைகள் வரலாறு காணாத கடும் சரிவைச் சந்தித்து வருகின்றன.

கடந்த வார இறுதியில் சரிவுடன் முடிந்த பங்குச்சந்தை இன்று கடும் சரிவைச் சந்தித்து வருகிறது.

மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் இன்று காலை 71,449.94 என்ற புள்ளிகளில் தொடங்கிய நிலையில் காலையில் சுமார் 4,000 புள்ளிகள் சரிந்தது.

Advertisement

Advertisement

நண்பகல் 12.10 மணி நிலவரப்படி, சென்செக்ஸ் 3,014.98 புள்ளிகள் சரிந்து 72,349.70 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.

தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 971.60 புள்ளிகள் குறைந்து 21,932.85 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.

சென்செக்ஸ் இதுவரை இல்லாத அளவுக்கு 5% வரை குறைந்துள்ளது.

அனைத்துப் பங்குகளும் இன்று வரலாறு காணாத கடும் சரிவைச் சந்தித்து வருகின்றன. டாடா மோட்டார்ஸ் மற்றும் டாடா ஸ்டீல் நிறுவனங்களின் பங்குகள் அதிகபட்சமாக 10% வரை குறைந்துள்ளன.

எல் & டி, ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ், அதானி போர்ட்ஸ், டெக் மஹிந்திரா, இன்ஃபோசிஸ், டாடா கன்சல்டன்சி சர்வீசஸ், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், மஹிந்திரா & மஹிந்திரா ஆகிய நிறுவனங்களின் பங்குகள் விலை கடும் சரிவைச் சந்தித்துள்ளன.

தற்போதைய நிலவரப்படி 20.16 லட்சம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் முதலீட்டாளர்கள் கடும் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.

காரணங்கள் என்ன?

இந்தியா உள்பட பல்வேறு நாடுகளின் மீது அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் 10 முதல் 50% வரை வரிவிதிப்பு செய்தது, உலக அளவில் வர்த்தகப் போர் ஏற்படும் அச்சத்தை உருவாக்கியுள்ளது. மேலும், பொருளாதார மந்தநிலை ஏற்படும் பதற்றமும் உள்ளது.

இதன் காரணமாக இந்திய பங்குச்சந்தை மட்டுமின்றி உலக அளவில் பல நாடுகளின் பங்குச்சந்தைகள் கடும் சரிவைச் சந்தித்து வருகின்றன.

அதிகபட்சமாக சீனாவின் ஹாங்காங் பங்குச்சந்தை 11% சரிவைச் சந்தித்துள்ளது. ஜப்பான் டோக்கியோ (7%), சீனாவின் ஷாங்காய் (7%), தென் கொரியா(5%) சரிந்துள்ளன.

அமெரிக்க பங்குச்சந்தைகளும் கடந்த வெள்ளிக்கிழமை சரிவுடன்தான் முடிந்துள்ளன.

அமெரிக்க வரிவிதிப்பால் பங்குச்சந்தையின் இன்றைய வீழ்ச்சி தொடக்கம்தான் என்றும் இது எப்படி மாறும் எனத் தெரியவில்லை என்றும் பங்குச்சந்தை நிபுணர்கள் கூறுகின்றனர். இதனால் அமெரிக்க கருவூலம் போன்ற பாதுகாப்பான வர்த்தகத்தில் முதலீட்டாளர்கள் இறங்கியுள்ளனர்.

உலக அளவில் பொருள்களின் விலை குறைந்துள்ளது, கச்சா எண்ணெய் விலை(2.76%), தங்கம் மற்றும் வெள்ளி விலை குறைந்துள்ளதால் பொருளாதார மந்த நிலை ஏற்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.

இவற்றின் காரணமாக பங்குச்சந்தைகள் கடும் சரிவைச் சந்தித்து வருகின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments