சென்செக்ஸ், நிஃப்டி ஏற்றத்துடன் நிறைவு!!
சென்செக்ஸ் 3.11 புள்ளிகள் உயர்ந்து 77,540.83 ஆகவும், நிஃப்டி 20.15 புள்ளிகள் உயர்ந்து 24,252 ஆக நிலைபெற்றது.
மும்பை: அச்சம், நிச்சயமற்ற தன்மை, கச்சா எண்ணெய் விலை உயர்வு, அமெரிக்க பங்குச் சந்தையில் ஏற்பட்ட கடும் சரிவு ஆகியவற்றால், ஊள்ளூரில் முதலீட்டாளர்கள் எச்சரிக்கையாக இருந்ததையடுத்து, ஏற்ற - இறக்கங்களுக்கு மத்தியிலும், இந்திய பங்குச் சந்தைக் குறியீடுகளான சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி மீட்சியைப் பதிவு செய்து, சற்று உயர்ந்து நிறைவடைந்தன.
அமெரிக்க கருவூலப் பத்திரங்களின் வருவாய் விகிதங்கள் மீண்டும் உயர்ந்த நிலையிலும், கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து அதிகமாக இருந்ததால், முதலீட்டாளர்கள் சந்தை நிலைப்பாடுகளை எடுக்கத் தயங்கி, எச்சரிக்கையான அணுகுமுறையை கடைப்பிடித்தனர்.
நேற்று (வியாழக்கிழமை) ஏற்பட்ட மீட்சியை முதலீட்டாளர்கள் ஆதரித்தபோதிலும், பங்குச் சந்தை தீர்க்கமாக உயரும் என்ற நம்பிக்கை முதலீட்டாளர்களிடம் இல்லாததால், இந்தியப் பங்குச் சந்தை ஏற்ற-இறக்கமான நிலையை பெரும்பாலும் கடைபிடித்தன.
Advertisement
Advertisement
30 பங்குகளைக் கொண்ட சென்செக்ஸ் 3.11 புள்ளிகள் உயர்ந்து 77,540.83 ஆக நிறைவடைந்தன. சென்செக்ஸ் அதிகபட்சமாக 77,725.67 புள்ளிகளையும், குறைந்தபட்சமாக 77,445.86 புள்ளிகளையும் தொட்டு 279.81 புள்ளிகள் ஏற்ற இறக்கத்துடன் வர்த்தகமான நிலையில், 50 பங்குகளைக் கொண்ட நிஃப்டி 20.15 புள்ளிகள் உயர்ந்து 24,252 ஆக நிலைபெற்றது.
சென்செக்ஸில் பவர் கிரிட், பாரத் எலக்ட்ரானிக்ஸ், கோடக் மஹிந்திரா வங்கி, என்.டி.பி.சி, பஜாஜ் ஃபின்சர்வ் மற்றும் ஏசியன் பெயிண்ட்ஸ் உள்ளிட்ட பங்குகள் உயர்ந்தும் மறுபுறம் ட்ரென்ட், மாருதி, இன்டர்குளோப் ஏவியேஷன் மற்றும் எச்.சி.எல் டெக் ஆகிய பங்குகள் சரிந்தன.
அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே தொடரும் பதற்றம், எரிசக்தி சந்தையில் அபாய நிலையை உருவாக்கி உள்ள நிலையில், இந்தியா போன்ற இறக்குமதி சார்ந்த பொருளாதார சந்தைக்கு இது அசௌகரியமான நிலையை உருவாக்கி வருகிறது.
பங்குச் சந்தையின் தரவுகளின் அடிப்படையில், வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் நேற்று (வியாழக்கிழமை) ரூ. 583.36 கோடி மதிப்பிலான பங்குகளை விற்பனை செய்துள்ளனர்.
ஆசியச் சந்தையை பொறுத்தவரை, தென் கொரியாவின் கோஸ்பி, ஷாங்காயின் எஸ்எஸ்இ காம்போசிட் மற்றும் ஹாங்காங்கின் ஹாங் செங் குறியீடுகள் உயர்வுடன் வர்த்தகத்தை நிறைவு செய்தன. அதே வேளையில் ஜப்பானின் நிக்கி 225 குறியீடு சரிவுடன் நிறைவடைந்தன.
ஐரோப்பியச் சந்தைகள் சற்று உயர்வுடன் வர்த்தகமானது. அமெரிக்கச் சந்தை நேற்று (வியாழக்கிழமை) சரிவுடன் நிறைவடைந்தன.
உலகளாவிய 'பிரெண்ட்' கச்சா எண்ணெய் விலை 0.06 சதவீதம் உயர்ந்து, பீப்பாய் ஒன்றுக்கு 93.84 டாலராக உள்ளது.
Market benchmark indices Sensex and Nifty ended flat on Friday.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.