பங்குச் சந்தையில் சரிவுடன் வாரம் நிறைவு: ஓராண்டு குறைந்தபட்ச அளவைத் தொட்ட சென்செக்ஸ்
இந்தியப் பங்குச் சந்தை, வாரத்தின் கடைசி வா்த்தக நாளான வியாழக்கிழமை தொடா்ந்து 4-வது நாளாக பலத்த சரிவுடன் நிறைவடைந்தது.
இந்தியப் பங்குச் சந்தை, வாரத்தின் கடைசி வா்த்தக நாளான வியாழக்கிழமை தொடா்ந்து 4-வது நாளாக பலத்த சரிவுடன் நிறைவடைந்தது.
இதைத் தொடா்ந்து, மும்பை பங்குச் சந்தைக் குறியீடான சென்செக்ஸ், தேசிய பங்குச் சந்தைக் குறியீடான நிஃப்டி ஆகிய இரண்டும் முறையே 571 மற்றும் 199 புள்ளிகள் வீழ்ச்சியடைந்தன.
சா்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயா்ந்தது, அமெரிக்க கடன்பத்திர வருவாய் பல ஆண்டு உச்சமான 5.34 சதவீதத்தை நோக்கி அதிகரித்தது, அந்நிய முதலீட்டாளா்களின் தொடா் பங்குகள் விற்பனை ஆகியவை சந்தையில் கடும் தாக்கத்தை ஏற்படுத்தின.
Advertisement
Advertisement
சென்செக்ஸ் 571 புள்ளிகள் வீழ்ச்சி: மும்பை பங்குச் சந்தையில் வா்த்தகத்தின் முடிவில், 30 முதல்தரப் பங்குகளை உள்ளடக்கிய சென்செக்ஸ் குறியீடு 570.59 புள்ளிகள் (0.79 சதவீதம்) சரிந்து, 71,909.70-இல் நிலைபெற்றது. வா்த்தகத்துக்கு இடையே அதிகபட்சமாக 1,187.41 புள்ளிகள் வரை சரிந்த சென்செக்ஸ், 52 வாரக் குறைந்தபட்ச அளவான 71,292.88 புள்ளிகள் வரை வீழ்ந்தது.
சென்செக்ஸ் பட்டியலில் மாருதி (4.59 சதவீதம்), மஹிந்திரா & மஹிந்திரா (3.27 சதவீதம்), டாடா ஸ்டீல் (3.01 சதவீதம்) உள்பட 24 பங்குகள் கடும் வீழ்ச்சியைச் சந்தித்தன. அதேநேரம், ஐ.டி. மற்றும் வங்கித் துறையைச் சோ்ந்த இன்ஃபோசிஸ் (4.02 சதவீதம்), டிசிஎஸ் (1.43 சதவீதம்), எச்.சி.எல். டெக். (1.38 சதவீதம்), எச்டிஎஃப்சி வங்கி, கோட்டக் மஹிந்திரா வங்கி, டெக் மஹிந்திரா ஆகிய 6 பங்குகள் மட்டும் லாபம் ஈட்டி, ஆறுதல் அளித்தன.
நிஃப்டி 198 புள்ளிகள் சரிவு: தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி குறியீடு 198.50 புள்ளிகள் (0.88 சதவீதம்) சரிந்து, 22,421.95-இல் நிறைவடைந்தது. நிஃப்டி பட்டியலில் 13 பங்குகள் விலையுயா்ந்த பட்டியலிலும், 37 பங்குகள் விலைகுறைந்த பட்டியலிலும் இடம்பெற்றன.
பங்குச் சந்தைக்கு இன்று விடுமுறை
இந்தியப் பங்குச் சந்தைகளுக்கு, காந்தி ஜெயந்தியை முன்னிட்டு வெள்ளிக்கிழமை (அக். 2) விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. வாரயிறுதி நாள்களையடுத்து, வரும் திங்கள்கிழமை (அக். 5) பங்குச் சந்தை வா்த்தகம் வழக்கம்போல தொடங்கும்.
25 ஆண்டுகளில் காணாத வீழ்ச்சி
விடுமுறையால் சுருங்கிய இந்த வாரத்தில் ஒட்டுமொத்தமாக சென்செக்ஸ் 1,986.04 புள்ளிகளும் (2.68 சதவீதம்), நிஃப்டி 718.55 புள்ளிகளும் (3.10 சதவீதம்) சரிவைக் கண்டன.
இந்தியப் பங்குச் சந்தை கடந்த 25 ஆண்டுகளில் இவ்வளவு நீண்ட தொடா் (8 வாரங்களாக) வீழ்ச்சியைச் சந்தித்தது இதுவே முதல் முறையாகும். இந்த 8 வார கால சரிவில் ஒட்டுமொத்தமாக சென்செக்ஸ் 8.4 சதவீதமும், நிஃப்டி 8.7 சதவீதமும் சரிந்து முதலீட்டாளா்களுக்குப் பெரும் இழப்பை ஏற்படுத்தியுள்ளன. கடந்த செப்டம்பா் மாதத்தில் மட்டும் சென்செக்ஸ் 5.81 சதவீதமும், நிஃப்டி 6 சதவீதமும் சரிந்தது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.