FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

நீ என்றேன் நான்...

மூன்றாம் நந்திவர்மன் பெருவீரன். பல்லவ வேந்தருள் பார்புகழ அரியணையை அழகு செய்தவன்.

கோப்புப் படம்
பகிர்:

மூன்றாம் நந்திவர்மன் பெருவீரன். பல்லவ வேந்தருள் பார்புகழ அரியணையை அழகு செய்தவன். திருவண்ணாமலைக்கு அருகில் உள்ள தெள்ளாறு என்னும் இடத்தில் நடைபெற்ற போரில் பாண்டிய மன்னன் ஸ்ரீவல்லபனை வெற்றி பெற்றதால் இவன் தெள்ளாறு எறிந்த நந்திவர்மன்' எனப் போற்றப்பட்டான்.

மேலும், தமிழ்மொழியின் மீது தீரா பற்றுக் கொண்டு இருந்ததால் இவனை, தமிழை வளர்த்த தெள்ளாறு எறிந்த நந்தி' என இலக்கியங்கள் போற்றும்.

இவன் பேரில் எழுந்த கலம்பகம் நந்திக்கலம்பகம்' என்னும் நூலாகும். தமிழ் இலக்கிய வரலாற்றில் ஓர் அரசன் மீது பாடப்பட்ட முதல் கலம்பக நூல் இதுவே ஆகும். இதை இயற்றியவர் பெயர் அறியப்படவில்லை.

Advertisement

Advertisement

கலம்பகம் என்பது பல்வேறு அகம், புறம் சார்ந்த அடிக்கருத்துக்களை உள்ளடக்கிய ஒரு கலப்பு வகை சிற்றிலக்கியம். பல நிற மலர்களால் தொடுக்கப்பட்ட மாலையைக் கலம்பகம் என்பார் தொண்டரடிப் பொடியாழ்வார்.

களிவண்டு மிழற்றி கலம்பகம்

புனைந்த அலங்கலந் தொடையல்

அக்கலம்பகம் என்னும் சொல்லே வழக்கில் கதம்பம் என்று ஆயிற்று. நந்திக்கலம்பகம் என்று பெயர் பெற்றிருந்தாலும், இதில் கதைத் தலைவன் அகப்பொருட்கு உரியவனாகப் பெயர் கூறப்படான். ஆனால், நந்திவர்மனின் இந்நூலின் சார்த்து வகை தலைவன். நந்திவர்மன் புகழ், வீரம், கொடை, தமிழ்ப்பற்று, காதல் முதலிய பண்புகளை அகப்பொருளை ஓர் உத்தியாகக் கொண்டு பாடப்பட்டதே இந் நந்திக்கலம்பகமாகும்.

இதில் வரும் தலைவியைத் தலைவன் பிரிந்திருக்கின்றான். பின்பு அவளை நாடி வரும் காலத்தில் தலைவி தம்மோடு ஊடல் கொள்ளக்கூடும் என்று கருதி, தலைவியைச் சமாதானப்படுத்தத் தன் தோழனாகிய பாணன் ஒருவனை வாயிலாக அனுப்புகிறான்.

நந்தி மன்னனின் பாணன் தலைவியை வந்தடையும் முன்னிரவு முழுவதும், தலைவனுக்குரிய பரத்தையர் தம் இல்லத்தில் விடிகின்ற வரையில், தலைவனையும் பரத்தையரையும் இன்புறுத்த யாழை இசைத்துப் பாடிக்கொண்டிருந்தான். தலைவியும் பிரிவு வருத்தத்தால் இரவு முழுவதும் விழித்திருந்தவள், பாணனின் பாட்டைத் தன் வீட்டிலிருந்து கேட்டாள்.

மறுநாள் பாணன் தலைவியை வந்தடைந்து தலைவன் பெருமையைக் கூறத் தொடங்கும் போது, தலைவி அவனிடம், நந்தி மன்னனின் பாணனே! இந்த ஊரில் பக்கத்துத் தெருவில் எனக்குத் தங்கை முறையினர் பலர் இருப்பது உனக்குத் தெரியுமா? எனக் கேட்கிறாள்.

அதற்கு பாணன், தெரியும் அம்மா, நேற்று இரவு முழுவதும் நான்தான் அங்கிருந்து விடியும்வரை பாடிக் கொண்டிருந்தேன்' என்றான்.

அப்படியா! நீதான் பாடினாயா! என் அன்னை

யிடம் யாரோ பாடுகிறார்கள் என்றேன். அதற்கு

என் அன்னை இல்லையம்மா, அது பேயின் குரல். பேய்தான் காட்டில் அழுகிறது என்றாள்.

அன்னை இப்படிச் சொல்கிறாளே என்று மற்றவர்களைக் கேட்டேன். அவர்கள் நரி ஊளையிடுவதாகக் கூறினர். என் தோழியைக் கேட்ட போது, அவள் நாய் குரைப்பதாகக் கூறினாள். அவர்கள் எல்லோரிடமும் நீ என்றேன் நான்.

ஈட்டு புகழ் நந்தி பாண நீ எங்கையர்தம்

வீட்டிருந்து பாட விடிவளவும் காட்டில் அழும்

பேய்என்றாள் அன்னை பிறர் நரி என்றார் தோழி

நாய் என்றாள் நீ என்றேன் நான்

(நந்திக்கலம்பகம் : மிகைப்பாடல் 13)

பரத்தையர் வீட்டிலிருந்து பாடியதால், பாணன் குரல் பேயும், நரியும், நாயும் எழுப்பும் குரலாக இருந்ததாக நேராகக் கூறாமல், அன்னையும் பிறரும் தோழியும் கூறினர் என்று இகழ்ச்சி மிகக் கூறுவது நயமாக இருப்பதை அறியலாம்.

அன்னைக்கும் பிறருக்கும் தோழிக்கும் இது பாணன் குரல்தான் என்பது தெரிந்தும் அவ்வாறு கூறாது இவ்வாறு கூறியது தலைவி மேலும் துன்புறுவாளே என்பதற்கான ஆறுதலுக்கான உளவியல் உத்தியாகும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments