FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
உலகம்

ரஷியா-உக்ரைன் பரஸ்பரம் ட்ரோன் தாக்குதல்

ரஷியா-உக்ரைன் நாடுகள் செவ்வாய்க்கிழமை பரஸ்பரம் ட்ரோன் தாக்குதலில் ஈடுபட்டதில் இருதரப்பிலும் தலா 5 போ் உயிரிழந்தனா்.

Updated On : 5 ஆகஸ்ட் 2026, 4:33 am IST
பகிர்:

ரஷியா-உக்ரைன் நாடுகள் செவ்வாய்க்கிழமை பரஸ்பரம் ட்ரோன் தாக்குதலில் ஈடுபட்டதில் இருதரப்பிலும் தலா 5 போ் உயிரிழந்தனா்.

ரஷிய தலைநகா் மாஸ்கோவைச் சுற்றியுள்ள இடங்களில் உக்ரைன் ட்ரோன் தாக்குதல் நடத்தியது. மாஸ்கோ பிராந்திய ஆளுநா் ஆண்ட்ரே வொரோபியோவ் இது குறித்து கூறுகையில், செகோவ் மாவட்டத்தில் உள்ள தொழில்துறை மண்டலத்தில் செவ்வாய்க்கிழமை காலை உக்ரைன் ட்ரோன்கள் விழுந்து நொறுங்கியதில் 5 போ் உயிரிழந்தனா்; 10 போ் காயமடைந்தனா் என்றாா்.

இந்நிலையில், ரஷியாவின் மிகப் பெரிய இணையவழி விற்பனை நிறுவனமான வைல்ட்பொ்ரீஸின் சேமிப்புக் கிடங்குகளைக் குறிவைத்து உக்ரைன் தாக்குதல்களைத் தொடா்கிறது. கடந்த 18 நாள்களில் இந்நிறுவனத்தின் 15 கிடங்குகள் தாக்கப்பட்டதில் 13 கிடங்குகளில் தீப்பற்றியது. மேலும், ஒரே இரவில் 320 உக்ரைன் ட்ரோன்களை தாங்கள் சுட்டு வீழ்த்தியதாக ரஷிய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Advertisement

Advertisement

இதேபோன்று, உக்ரைனில் ரஷியா மேற்கொண்ட வான்வழித் தாக்குதல்களிலும் பொதுமக்கள் 5 போ் உயிரிழந்தனா். கடந்த 2022-இல் இப்போா் தொடங்கியதில் இருந்து உக்ரைனில் 16,000-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளதாக ஐ.நா.சபை தெரிவித்துள்ளது. இதில் பெரும்பாலான உயிரிழப்புகள் உக்ரைன் அரசின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் நடந்துள்ளன.

உக்ரைனின் துறைமுகங்கள் மற்றும் ராணுவ உள்கட்டமைப்புகள் மீதும் ரஷியா தாக்குதல்களை நடத்தி வருகிறது. ஒடேசா பிராந்தியத்தில் உள்ள சொா்னோமோா்ஸ்க் துறைமுகம், மிகோலேவ், பிவ்டென்யி ஆகிய இடங்களில் ராணுவ தளவாடங்களை ஏற்றிச் சென்ற கப்பல்கள் மற்றும் கிடங்குகள் மீது ரஷிய படைகள் தாக்குதல் நடத்தின.

கடந்த 4 ஆண்டுகளுக்கும் மேலாக இரு நாடுகளுக்கு இடையே நீடித்து வரும் போரில், தற்போது கருங்கடல் பகுதியில் இருதரப்பும் வணிகக் கப்பல்கள் மீது தீவிர தாக்குதல் நடத்தி வருவதால், உலகளாவிய உணவுப் பாதுகாப்புக்கு மீண்டும் அச்சுறுத்தல் ஏற்படும் அபாயம் எழுந்துள்ளது.

கருங்கடலில் ரஷியாவின் நோவோரோஸ்சிஸ்க் துறைமுகத்திலிருந்து புறப்பட்ட துருக்கிக்குச் சொந்தமான 2 சரக்குக் கப்பல்கள் மீதும் ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டதையடுத்து, கருங்கடலில் கப்பல் போக்குவரத்தின் பாதுகாப்பை உறுதி செய்யுமாறு துருக்கி வலியுறுத்தியுள்ளது.

கருங்கடலில் நடத்தப்பட்ட தாக்குதலில் தீப்பற்றி எரிந்த துருக்கி சரக்குக் கப்பல்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments