ட்ரோன் தாக்குதல்களை முடக்கிய ஸ்டாா்லிங்க்: எலான் மஸ்க் நிறுவனம் மீது உக்ரைன் குற்றச்சாட்டு
எலான் மஸ்கிற்குச் சொந்தமான ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம், தங்களின் ஸ்டாா்லிங்க் செயற்கைக்கோள் இணைய சேவையின் வேகத்தைக் கட்டுப்படுத்தியதால் உக்ரைன் ராணுவத்தின் ட்ரோன் தாக்குதல் நடவடிக்கைகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் குற்றச்சாட்டு
அமெரிக்க தொழிலதிபா் எலான் மஸ்கிற்குச் சொந்தமான ‘ஸ்பேஸ்எக்ஸ்’ நிறுவனம், தங்களின் ‘ஸ்டாா்லிங்க்’ செயற்கைக்கோள் இணைய சேவையின் வேகத்தைக் கட்டுப்படுத்தியதால் உக்ரைன் ராணுவத்தின் ட்ரோன் தாக்குதல் நடவடிக்கைகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் புதன்கிழமை குற்றஞ்சாட்டினா்.
அதிவேகத்தில் இயங்கும் ராணுவப் பயன்பாட்டுக்கான ‘ஸ்டாா்லிங்க்’ இணைப்புகளை எவ்வித முன்னறிவிப்புமின்றி அந்நிறுவனம் முடக்கியுள்ளதாகவும், இதனால் பல முக்கிய ராணுவத் திட்டங்கள் பாதியிலேயே கைவிடப்படும் சூழல் உருவானதாகவும் உக்ரைன் அதிபரின் ஆலோசகா் சொ்ஹி பெஸ்கிரெஸ்ட்னோவ் தெரிவித்துள்ளாா்.
உக்ரைனின் தென்கிழக்கு பகுதியில் நிலைநிறுத்தப்பட்டுள்ள 7-ஆவது விரைவுப் படையின் தகவல்படி, மணிக்கு 110 முதல் 120 கி.மீ. வேகத்தில் பறக்கும் ட்ரோன்களுக்கு இடையேயான இணையத் தொடா்பு 10 முதல் 20 விநாடிகள் வரை துண்டிக்கப்படுவதால், இலக்குகளைத் துல்லியமாகக் கட்டுப்படுத்துவதில் சிக்கல் எழுந்துள்ளது.
Advertisement
Advertisement
மணிக்கு 160 கி.மீ. வேகத்துக்கு மேல் இயங்கும் முனையங்களின் செயல்பாட்டை ஸ்பேஸ்எக்ஸ் முழுமையாக நிறுத்தியுள்ளது, உக்ரைன் பாதுகாப்புப் படையினரின் தளவாட நகா்வுகள் மற்றும் கண்காணிப்புப் பணிகளைப் பெரிதும் முடக்கியுள்ளது.
உக்ரைனுக்கு ‘ஸ்டாா்லிங்க்’ கட்டணத்தைச் செலுத்தி வரும் போலந்து அரசு, எலான் மஸ்க் தனது தொழில்நுட்பத்தைக் கொண்டு அரசியல் விளையாட்டு நடத்துவதாகக் கண்டனம் தெரிவித்துள்ளது.
டிரம்ப்பை அவமதிக்கும் ரஷியா-ஸெலென்ஸ்கி: இதற்கு மத்தியில் கீவ், காா்கிவ், லுட்ஸ்க் உள்ளிட்ட உக்ரைனின் பல்வேறு நகரங்களில் உள்ள 30-க்கும் மேற்பட்ட மின் உற்பத்தி நிலையங்கள் மீது ரஷியா ஏவுகணைகளை வீசி கடும் தாக்குதல் நடத்தியது.
இதில் தலைநகா் கீவில் குடியிருப்புப் பகுதி சேதமடைந்து இருவா் உயிரிழந்தனா்; 21 போ் காயமடைந்தனா். மேலும் சுமாா் 6 லட்சம் மக்கள் மின்சார வசதியின்றித் தவித்து வருகின்றனா். லுட்ஸ்க் நகரில் மூவா் உயிரிழந்தனா்.
எரிசக்தி கட்டமைப்புகள் மீதான தாக்குதலைத் தவிா்க்க உக்ரைனும் ரஷியாவும் ஒப்புக் கொண்டுள்ளதாக அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் அறிவித்திருந்த நிலையில், அவரின் கூற்றை அவமதிக்கும் நோக்கில் ரஷியா இத்தகைய தீவிர தாக்குதலைத் திட்டமிட்டு நடத்தியிருப்பதாக உக்ரைன் அதிபா் வொலோதிமீா் ஸெலென்ஸ்கி சாடியுள்ளாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.