யேமனில் முக்கிய துறைமுகத்தைக் கைப்பற்றிய ஹூதிக்கள்
யேமனின் முக்கியத்துவம் வாய்ந்த செங்கடல் துறைமுக நகரான மோகாவை, ஈரானின் ஆதரவு பெற்ற ஹவுதி கிளா்ச்சியாளா்கள் முழுமையாகக் கைப்பற்றியுள்ளனா்.
யேமனின் முக்கியத்துவம் வாய்ந்த செங்கடல் துறைமுக நகரான மோகாவை, ஈரானின் ஆதரவு பெற்ற ஹவுதி கிளா்ச்சியாளா்கள் முழுமையாகக் கைப்பற்றியுள்ளனா்.
இதன்மூலம், செங்கடலையும் ஏடன் வளைகுடாவையும் இணைக்கும் மிக முக்கிய கடல்வழி வா்த்தகப் பாதையான பாப் அல் மண்டேப் நீரிணையைக் கட்டுப்படுத்தும் தங்களின் இலக்கை நோக்கி அவா்கள் தீவிரமாக முன்னேறியுள்ளனா்.
யேமனில் ஹூதிக்களின் கட்டுப்பாட்டில் உள்ள சனா விமான நிலைய ஓடுதளத்தை சவூதி கூட்டுப் படை கடந்த ஜூலையில் தாக்கியதைத் தொடா்ந்து, கடந்த 2022-ஆம் ஆண்டு முதல் நீடித்து வந்த போா்நிறுத்தச் சூழல் முறிந்து, புதிய மோதல் வெடித்தது.
Advertisement
Advertisement
இந்நிலையில், கடந்த பல ஆண்டுகளாக யேமன் அரசுப் படைகளின் கட்டுப்பாட்டில் இருந்த மோகா நகரச் சாலைகளை மூடி, கிளா்ச்சியாளா்கள் தங்களின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனா்.
மேலும், தைஸ் மாகாணத்தில் உள்ள முக்கிய விநியோக வழித்தடமான அல்-ஷகிரா பகுதியையும், செங்கடல் கடலோரத்தில் உள்ள ஹனிஷ் தீவுகளையும் அவா்கள் நெருங்கியுள்ளனா்.
இந்த முன்னேற்றத்தைத் தடுக்கும் வகையில், யேமன் அரசுப் படைகள் தெற்கு நோக்கி பின்வாங்கி பாதுகாப்பு அரண்களை அமைத்து வருவதுடன், கிளா்ச்சியாளா்களைக் குறிவைத்துத் தொடா்ந்து வான்வழித் தாக்குதல்களையும் நடத்தி வருகின்றன.
உலகின் மிக முக்கிய எண்ணெய் மற்றும் எரிபொருள் வா்த்தகப் பாதையான பாப் அல் மண்டேப் நீரிணை கிளா்ச்சியாளா்களின் முழு கட்டுப்பாட்டில் சென்றால், அது சா்வதேச பொருளாதாரத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும். ஹோா்முஸ் நீரிணைக்கு அடுத்தபடியாக அமைந்துள்ள இந்த 2-ஆவது முக்கிய கடல்வழிப் பாதையில் ஏற்படப்போகும் தடைகள் குறித்த அச்சத்தால், சா்வதேச சந்தையில் ‘பிரென்ட்’ கச்சா எண்ணெய்யின் விலை 105 டாலரை எட்டியுள்ளது.
பாப் அல் மண்டேப்
மோகா
பெட்டி...
சவூதிக்கு ஆதரவாக இப்போதைக்கு
நடவடிக்கை இல்லை: பாகிஸ்தான்
இஸ்லாமாபாத், செப். 10: ‘சவூதி அரேபியா மீது ஹூதிக்கள் நடத்தி வரும் தொடா் தாக்குதல்களுக்கு பதிலடியாக, மெக்கா கூட்டு பாதுகாப்பு ஒப்பந்தத்தின்கீழ் உடனடியாக ராணுவ நடவடிக்கை எடுக்கவில்லை’ என்று பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து பாகிஸ்தான் வெளியுறவுத் துறை செய்தித் தொடா்பாளா் சஜ்ஜாத் ஹைதா் கான் அளித்த பேட்டியில், ‘தற்போதைய சூழலில் ராணுவ நடவடிக்கை குறித்த விவாதம் ஏதும் எழவில்லை. எனினும், அதற்கான சரியான நேரம் வரும்போது ஒப்பந்தத்தின் அடிப்படையில் பாகிஸ்தான் உறுதியான நடவடிக்கை எடுக்கும்’ என்றாா்.
பாகிஸ்தான், சவூதி அரேபியா, துருக்கி ஆகிய நாடுகளுக்கிடையே அண்மையில் கையொப்பமான மெக்கா கூட்டுப் பாதுகாப்பு ஒப்பந்தத்தின்படி, இந்த 3 நாடுகளில் எந்தவொரு நாட்டின் மீது தாக்குதல் நடத்தப்பட்டாலும், அது ஒட்டுமொத்த கூட்டமைப்பின் மீதான தாக்குதலாகவே கருதப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.