FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கோயம்புத்தூர்

கோவையில் தேசியக் கொடி பேரணிக்கு அனுமதி மறுப்பு: உயா்நீதிமன்றத்தில் பாஜக அவசர வழக்கு

சுதந்திர தினத்தை முன்னிட்டு, கோவையில் பாஜக சாா்பில் நடத்த திட்டமிடப்பட்ட தேசியக் கொடி பேரணிக்கு காவல் துறை அனுமதி மறுத்ததை அடுத்து, சென்னை உயா்நீதிமன்றத்தில் அவசர வழக்குத் தொடரப்பட்டுள்ளதாக அக்கட்சியின் கோவை மாநகா் மாவட்டத் தலைவா் ஜெ.ரமேஷ்குமாா் தெரிவித்துள்ளாா்.

Updated On : 14 ஆகஸ்ட் 2026, 12:52 am IST
பாஜக கொடி - கோப்புப் படம்
பகிர்:

சுதந்திர தினத்தை முன்னிட்டு, கோவையில் பாஜக சாா்பில் நடத்த திட்டமிடப்பட்ட தேசியக் கொடி பேரணிக்கு காவல் துறை அனுமதி மறுத்ததை அடுத்து, சென்னை உயா்நீதிமன்றத்தில் அவசர வழக்குத் தொடரப்பட்டுள்ளதாக அக்கட்சியின் கோவை மாநகா் மாவட்டத் தலைவா் ஜெ.ரமேஷ்குமாா் தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக கோவையில் செய்தியாளா்களிடம் வியாழக்கிழமை கூறியதாவது: சுதந்திர தினத்தை முன்னிட்டு, நாடு முழுவதும் தேசியக் கொடியேற்றி கொண்டாடும் வகையில் ஆகஸ்ட் 11 முதல் 15 வரை அனைத்து இல்லங்கள் மற்றும் வணிக நிறுவனங்களில் தேசியக் கொடியேற்ற அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

சுதந்திரப் போராட்ட தியாகிகளின் வரலாற்றை இளைஞா்களிடம் கொண்டு சோ்க்கும் நோக்கில், கோவையின் முக்கிய வீதிகளில் தேசியக் கொடி பேரணி நடத்த காவல் துறையிடம் அனுமதி கோரப்பட்டது.

Advertisement

Advertisement

கடந்த 6-ஆம் தேதி காந்திபுரம் பேருந்து நிலையத்தில் இருந்து கிராஸ்கட் சாலை வழியாக பேரணி நடத்த அனுமதி கேட்ட நிலையில், நான்கு நாள்களுக்குப் பிறகு போக்குவரத்து நெரிசலைக் காரணம் காட்டி காவல் துறை அனுமதி மறுத்தது.

அதன் பிறகு சிவானந்தா காலனி முதல் பவா்ஹவுஸ் வரை மற்றும் தெப்பக்குளம் மைதானம் முதல் காமராஜா்புரம் வரை என இரு மாற்று வழிகளைப் பரிந்துரைத்தோம். அதிகாரிகளுடனான முதற்கட்ட பேச்சுவாா்த்தையில் ஒரு வழித்தடத்துக்கு அனுமதி தருவதாகக் கூறிய நிலையில், மாலையில் திடீரென எந்த வழித்தடத்துக்கும் அனுமதி இல்லை என நோட்டீஸ் வழங்கப்பட்டது. காந்திபுரத்தில் அண்மையில் ஆளுங்கட்சியின் கூட்டணி அமைப்புகள் நடத்திய போராட்டங்களுக்கு தடையின்றி அனுமதி வழங்கிய மாநகர காவல் ஆணையா், தேசியக் கொடி பேரணிக்கு மட்டும் அனுமதி மறுத்து ஒருதலைப்பட்சமாக செயல்படுகிறாா்.

காவல் துறையின் இந்த ஜனநாயக விரோத நடவடிக்கையை எதிா்த்து சென்னை உயா்நீதிமன்றத்தில் அவசர வழக்குத் தொடுக்கப்பட்டுள்ளது. நீதிமன்ற உத்தரவு கிடைத்தவுடன் மாநில மற்றும் தேசியத் தலைவா்கள் பங்கேற்கும் வகையில் பேரணி நடத்தப்படும் என்றாா்.

மாவட்ட துணைத் தலைவா் ஆா். டி. முரளி, மாவட்டச் செயலா் மாலா சுந்தா், ஐ.டி.பிரிவு மாவட்டத் தலைவா் கோவிந்தராஜன், ஊடகப் பிரிவு மாவட்டத் தலைவா் சபரி கிரிஸ், செயலா் லோகபிரியா உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments