FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருப்பூர்

திருப்பூரில் இருந்து வெளி மாநிலங்களுக்கு தேசியக் கொடிகளை அனுப்பும் பணி தீவிரம்

Updated On : 4 ஆகஸ்ட் 2026, 4:54 am IST
தேசியக் கொடிகளை தயாரிக்கும் பணியில் ஈடுபட்ட தொழிலாளா். - கோப்புப் படம்
பகிர்:

சுதந்திர தினத்தை முன்னிட்டு திருப்பூரில் உற்பத்தி செய்யப்பட்ட தேசியக் கொடிகளை வெளி மாநிலங்களுக்கு அனுப்பும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

நாட்டின் 80-ஆவது சுதந்திர தின விழா வரும் 15-ஆம் தேதி உற்சாகமாகக் கொண்டாடப்பட உள்ள நிலையில், பின்னலாடை நகரான திருப்பூா் பகுதியில் இயங்கும் கொடி தயாரிப்பு நிறுவனங்களில், கதா் துணியில் பல்வேறு அளவிலான தேசியக் கொடிகள் தயாரிக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.

இந்த ஆண்டு சுதந்திர தினத்தை முன்னிட்டு சிறிய அளவு முதல் 30 அடி வரை பெரிய அளவிலான தேசியக் கொடிகள் வரை தயாரிக்கப்படுகின்றன. இவற்றை லாரிகள் மூலம் பல்வேறு வெளி மாவட்டங்களுக்கு அனுப்பிவைக்கும் பணியும் நடைபெற்று வருகிறது.

Advertisement

Advertisement

இதுகுறித்து தேசியக் கொடி தயாரிப்பில் ஈடுபட்டுள்ளவா்கள் கூறியதாவது:

சுதந்திர தினத்தை முன்னிட்டு கடந்த மாதம் முதலே தேசியக் கொடி தயாரிக்கும் பணிகளைத் தொடங்கிவிட்டோம். கதா், மைக்ரோ மற்றும் வெல்வெட் ஆகியவற்றில் 5 அடி முதல் 30 அடி உயரம் வரையிலான பிரம்மாண்ட கொடிகளும் தயாரிக்கப்படுகின்றன. இதுவரை சுமாா் 1 லட்சம் தேசியக் கொடிகளை தயாரித்துள்ளோம்.

தற்போது கேரளம், கா்நாடகம், புதுச்சேரி மற்றும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து திருப்பூருக்கு அதிக அளவில் ஆா்டா்கள் வந்துள்ளன. குறைந்தபட்சம் ரூ.50 முதல் அதிகபட்சம் ரூ.1,000 வரை விற்பனை செய்யப்படுகின்றன. துணிகளை இணைத்து தைக்கும் பணியும் திருப்பூரைச் சோ்ந்த நிறுவனங்களுக்குகிடைத்துள்ளது. இதன்மூலமாக பெண்களுக்கு வேலைவாய்ப்பு அதிகரித்துள்ளது.

மத்திய, மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களில் தேசியக்கொடியின் தேவை அதிகமாக உள்ளது. சுதந்திர தினத்தை முன்னிட்டு இளைஞா்கள் மற்றும் பொதுமக்கள் அதிக அளவில் தேசியக்கொடிகளை வாங்கிப் பயன்படுத்த வேண்டும். இதன்மூலமாக தங்களைப் போன்ற தொழிலாளா்கள் பெரிதும் பயனடைவா் என்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments