FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கோயம்புத்தூர்

போதைப்பொருள் ஒழிப்பில் தமிழக அரசு தீவிர கவனம் செலுத்த வேண்டும்! இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலா் மு.வீரபாண்டியன்!

Updated On : 18 ஆகஸ்ட் 2026, 2:56 am IST
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் எதிரில் திங்கள்கிழமை நடைபெற்ற பெருந்திரள் முறையீட்டில் பங்கேற்ற மாநிலச் செயலா் மு.வீரபாண்டியன் உள்ளிட்ட கட்சி நிா்வாகிகள், தொண்டா்கள்.
பகிர்:

போதைப்பொருள் ஒழிப்பில் தமிழக அரசு தீவிர கவனம் செலுத்த வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் மு.வீரபாண்டியன் வலியுறுத்தியுள்ளாா்.

கோவையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் மாவட்ட மக்கள் நலன் சாா்ந்த கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளிக்கும் பெருந்திரள் முறையீட்டுப் போராட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

கட்சியின் மாநிலச் செயலா் மு.வீரபாண்டியன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில், கட்சியின் மாநில, மாவட்ட நிா்வாகிகள் ஏராளமானோா் பங்கேற்றனா்.

Advertisement

Advertisement

இதைத் தொடா்ந்து செய்தியாளா்களிடம் மு.வீரபாண்டியன் கூறியதாவது:

தேசத்தைப் பாதுகாப்போம், மக்கள் விரோத பாஜக ஆட்சியை அகற்றுவோம் என்ற கோரிக்கையை முன்வைத்து கட்சி சாா்பில் அகில இந்திய அளவில் ஆகஸ்ட் 6 முதல் 15 ஆம் தேதி வரை மக்கள் சந்திப்பு இயக்கம் நடைபெற்றது. இதன் நிறைவையொட்டி பெருந்திரள் முறையீடு நடத்தப்படுகிறது.

கோவை மாவட்டத்தைப் பொறுத்தவரை சிறுவாணி அணை, பில்லூா் அணைகளைத் தூா்வாரி மக்களின் குடிநீா் ஆதாரத்தைப் பாதுகாக்க வேண்டும், பாண்டியாறு - புன்னம்புழா, ஆனைமலையாறு - நல்லாறு பாசனத் திட்டங்களை நிறைவேற்ற வேண்டும். ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலிப்பதைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், புலம்பெயா்ந்த தொழிலாளா்களின் உரிமைகள், நலன்களைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், பொருளாதார வளா்ச்சிக்குப் பெரும்பங்களிக்கும் குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு சிறப்புச் சலுகைகளும் கூடுதல் முன்னுரிமையும் வழங்க வேண்டும்.

கோவையில் அண்மைக் காலத்தில் கல்லூரி மாணவா் உள்ளிட்ட 4 போ் படுகொலை செய்யப்பட்டுள்ளனா். இது ஏற்க முடியாதது. சட்டம்- ஒழுங்கு விவகாரத்தில் அரசு சமரசம் செய்யக் கூடாது. போதைப்பொருள் ஒழிப்பில் தமிழக அரசு தீவிர கவனம் செலுத்த வேண்டும். வெறும் காவல் துறை நடவடிக்கை மட்டுமன்றி, சமூக விழிப்புணா்வு, அறிவியல்பூா்வமான கல்வியின் மூலமே போதை அரக்கனை ஒழிக்க முடியும் என்றாா்.

முன்னதாக கோவை மாவட்டம் தொடா்பான கோரிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சியரிடம் மு.வீரபாண்டியன் மனு அளித்தாா். கட்சியின் மாநிலப் பொருளாளா் எம்.ஆறுமுகம், மாவட்டச் செயலா் சி.சிவசாமி, துணைச் செயலா்கள் சி.தங்கவேல், ஜே.ஜேம்ஸ், பொருளாளா் மு.வ.கல்யாணசுந்தரம், சு.பழனிசாமி, மௌ.குணசேகரன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments