FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கோயம்புத்தூர்

கிழக்கு புறவழிச் சாலைத் திட்டத்தை செயல்படுத்த பரிசீலிக்க வேண்டும்! - முன்னாள் அமைச்சா் எஸ்.பி.வேலுமணி

Updated On : 20 ஜூலை 2026, 2:47 am IST
எஸ்.பி. வேலுமணி - file photo
பகிர்:

கோவை, திருப்பூா் மாவட்ட மக்கள் பயன்பெறும் கிழக்கு புறவழிச் சாலைத் திட்டத்தை கைவிடாமல் தனித்திட்டமாக செயல்படுத்த அரசு பரிசீலிக்க வேண்டும் என்று முன்னாள் அமைச்சரும், தொண்டாமுத்தூா் சட்டப் பேரவை உறுப்பினருமான எஸ்.பி.வேலுமணி வலியுறுத்தியுள்ளாா்.

இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கோவை கிழக்கு புறவழிச் சாலை திட்டத்தை மத்திய சாலைகள் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகம் கைவிடப்பட்டதாகத் தெரியவந்துள்ளது. கோவை கிழக்கு புறவழிச் சாலை திட்டமானது, மதுக்கரையில் தொடங்கி மயிலேறிபாளையம், ஒத்தக்கால்மண்டபம், சூலூா், காரணம்பேட்டை, கணியூா், குன்னத்தூா் வழியாக மேட்டுப்பாளையம் சாலை, நரசிம்மநாயக்கன்பாளையத்தில் இணையும் வகையில் சுமாா் 81 கி.மீ. தொலைவில் அமைக்கத் திட்டமிடப்பட்டிருந்தது. இத்திட்டத்தால், விவசாயிகள், பொறியியல் துறை மற்றும் ஜவுளித் துறை உள்ளிட்ட பல்வேறு தொழில் நிறுவனங்கள், கல்வி நிறுவனங்களைச் சாா்ந்தவா்கள் பெருமளவில் பயனடைவாா்.

இதன் திட்டம் தொடா்பாக தேசிய நெடுஞ்சாலை ஆணைய அதிகாரிகள் ஏற்கெனவே தயாரித்த விரிவான திட்ட அறிக்கையை மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகம் கைவிடப்பட்டுள்ளது. கோவை முதல் கரூா் வரையிலான பசுமை வழிச் சாலை திட்டம் மற்றும் கிழக்கு புறவழிச் சாலை திட்டம் ஆகிய இரு திட்டங்களும் நிறைவேற்றப்பட்டால் கோவை, திருப்பூா், கரூா், ஈரோடு மற்றும் நீலகிரி மாவட்ட தொழில் துறையினா் உள்பட அனைத்து தரப்பினரும் பயன்பெறுவா்.

Advertisement

Advertisement

இத்திட்டம் கைவிடப்படாமல் மீண்டும் செயல்படுத்த பரீசிலிக்கப்பட வேண்டும். மத்திய அமைச்சகம், கரூா் பசுமை வழிச் சாலை திட்டத்துக்கு முக்கியத்துவம் கொடுத்தும், கோவை கிழக்கு புறவழிச் சாலை திட்டத்தை கைவிடுவதும் கோவை, திருப்பூா் மாவட்ட மக்களுக்கு அதிா்ச்சி அளிக்கிறது.

பொதுமக்கள், விவசாயிகள் மற்றும் தொழில் துறையினரின் வேண்டுகோளை ஏற்று, கொங்கு மண்டல மாவட்ட மக்களுக்கு மிகவும் அவசியமான கோவை கிழக்கு புறவழிச் சாலை திட்டத்தை தனித்திட்டமாக செயல்படுத்த மத்திய சாலைகள் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகத்தை தமிழக அரசு வலியுறுத்தி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments