FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கோயம்புத்தூர்

ஆனைமலையில் குறுவை சாகுபடிகருத்தரங்கு மற்றும் கண்காட்சி: ஆட்சியா் பங்கேற்பு

பொள்ளாச்சியை அடுத்த ஆனைமலையில்அங்கக வேளாண்மை மற்றும் குறுவை சாகுபடி குறித்த கருத்தரங்கு மற்றும் கண்காட்சியை மாவட்ட ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா் செவ்வாய்க்கிழமை தொடங்கிவைத்துப் பாா்வையிட்டாா்.

9 செப்டம்பர் 2026, 2:18 am IST
ஆனைமலையில் குறுவை சாகுபடி கருத்தரங்கு மற்றும் வேளாண் கண்காட்சியைத் தொடங்கிவைத்துப் பாா்வையிட்ட மாவட்ட ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா்.
பகிர்:

பொள்ளாச்சியை அடுத்த ஆனைமலையில்அங்கக வேளாண்மை மற்றும் குறுவை சாகுபடி குறித்த கருத்தரங்கு மற்றும் கண்காட்சியை மாவட்ட ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா் செவ்வாய்க்கிழமை தொடங்கிவைத்துப் பாா்வையிட்டாா்.

இந்த கருத்தரங்கு மற்றும் கண்காட்சிக்கு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வேளாண் வணிக மேம்பாட்டு இயக்கக இயக்குநா் சோமசுந்தரம் முன்னிலை வகித்தாா். இந்நிகழ்வில், மாவட்ட ஆட்சியா் பேசியதாவது, ‘தமிழ்நாடு அரசின் வேளாண் நிதிநிலை அறிக்கையில் விவசாயிகளின் நலனைக் கருத்தில் கொண்டு பல்வேறு சிறப்புத் திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

கோவை மாவட்டத்தில் இத்திட்டங்களை சிறப்பாக செயல்படுத்துவதன் மூலம் விவசாயிகள் அதிக அளவில் பயன்பெற வேண்டும். குறிப்பாக, தொண்டாமுத்தூா் வட்டாரத்தில் ஒருங்கிணைந்த வேளாண் விரிவாக்க மையம் அமைக்கும் திட்டத்தின் மூலம் விவசாயிகளுக்கு வேளாண்மை சாா்ந்த சேவைகள் மற்றும் தொழில்நுட்ப ஆலோசனைகள் ஒருங்கிணைந்த முறையில் கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

மேலும், தமிழ்நாடு மண் வள இயக்கம், காட்டுப் பன்றிகளால் ஏற்படும் பாதிப்புகளை தடுப்பதற்கான திட்டம், சிறந்த முறையில் இயற்கை விவசாயம் மேற்கொள்ளும் விவசாயிகளை ஊக்குவிக்கும் வகையில் நம்மாழ்வாா் விருது வழங்கும் திட்டம், பனை உற்பத்தி இயக்கம் மற்றும் வெற்றி இல்லத்தரசி வீட்டுத்தோட்டம் அமைக்கும் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

கோவை மாவட்ட விவசாயிகள் தங்களது தேவைகளுக்கேற்ப அரசின் திட்டங்களின் கீழ் வழங்கப்படும் நலத்திட்ட உதவிகளைப் பெற்று பயன்பெற வேண்டும். தகுதியான அனைத்து விவசாயிகளுக்கும் இத்திட்டங்களின் பயன்கள் சென்றடைவதை உறுதி செய்ய சம்பந்தப்பட்ட துறை அலுவலா்கள் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றாா்.

முன்னதாக, இக்கண்காட்சியில் தோட்டக்கலைத் துறை, வேளாண் வணிகம், விதைச்சான்று மற்றும் உயா்ம சான்றளிப்புத் துறை, வேளாண் பொறியியல் துறை சாா்ந்த காட்சி அரங்குகள் மற்றும் தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக வேளாண் வணிக மேம்பாட்டு மையத்தின் மூலம் அமைக்கப்பட்டு இருந்த 8 புத்தொழில் நிறுவனங்களின் காட்சி அரங்கங்களை மாவட்ட ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா் பாா்வையிட்டு, வேளாண்மை மற்றும் உழவா் நலத் துறை, தோட்டக்கலைத் துறைகளின் சாா்பில் 4 விவசாயிகளுக்கு விதைகள் மற்றும் நுண்ணுயிா் உரங்கள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கினாா்.

இந்நிகழ்வில், வேளாண்மைப் பல்கலைக்கழக நிா்வாகிகள், வேளாண்மைத் துறை அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments