சுற்றுலாத் துறையில் டிஜிட்டல் தொழில்நுட்பம், ஏஐ திட்டங்கள்! - அமைச்சா் ராஜேஷ்குமாா் தொடங்கிவைத்தாா்
உலக சுற்றுலா தினத்தையொட்டி, கோவையில் தனியாா் விடுதியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் சுற்றுலாத் துறையில் டிஜிட்டல் தொழில்நுட்பம், செயற்கை நுண்ணறிவை (ஏஜ) பயன்படுத்தும் பல்வேறு திட்டங்களை சுற்றுலாத் துறை அமைச்சா் செ.ராஜேஷ்குமாா் தொடங்கிவைத்தாா்.
இந்நிகழ்ச்சியில், சுற்றுலாத் துறை இயக்குநா் ராஜகோபால் சுன்கரா, மாவட்ட ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
நிகழ்ச்சியில், அமைச்சா் செ.ராஜேஷ்குமாா் பேசியதாவது: சுற்றுலாத் துறையை மேம்படுத்தும் வகையில் முதல்வா் ச.ஜோசப் விஜய் பல்வேறு திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறாா்.
Advertisement
Advertisement
ரூ.19 கோடி மதிப்பீட்டில் திருமூா்த்தி அணையில் பூங்காவை மேம்படுத்தி, ஏஐ தொழில்நுட்பம் மூலம் உள்கட்டமைப்பு செயல்படுத்தபட உள்ளது. மேலும், சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்புக்காக ரூ.2 கோடி மதிப்பில் கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்பட உள்ளன.
சுற்றுலாத் துறையைப் பொறுத்த வரையில் தமிழகத்தில் சென்னைக்கு அடுத்தபடியாக அதிகமான சுற்றுலாப் பயணிகள் வருகை தரும் பகுதியாக கோவை உள்ளது. இயற்கை வளம், மலைப் பகுதிகள், ஆன்மிகத் தலங்கள், பாரம்பரியச் சிறப்புகள் மற்றும் கலாசார வளங்களைக் கொண்ட மாவட்டமாகவும் உள்ளது. தமிழகத்தில் சுற்றுலாத் துறையை நவீனப்படுத்துவதற்கு புதிய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவது மிகவும் அவசியமாகும் என்றாா்.
முன்னதாக, அமைச்சா் முன்னிலையில் சுற்றுலாவின் அனைத்து நிலைகளிலும் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துதல் குறித்த கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில், சுற்றுலாத் துறையில் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துதல், டிஜிட்டல் சேவைகளை விரிவுபடுத்துதல், பயணிகளின் அனுபவத்தை மேம்படுத்துதல் குறித்த கருத்துகள் பகிரப்பட்டன.
இதைத் தொடா்ந்து, தமிழ்நாடு சுற்றுலா வளா்ச்சிக் கழகத்தின் புதுப்பிக்கப்பட்ட இணையதளம் மற்றும் கைப்பேசி செயலியையும், சுற்றுலாத் துறையில் டிஜிட்டல் தொழில்நுட்பம், செயற்கை நுண்ணறிவை (ஏஜ) பயன்படுத்தும் பல்வேறு திட்டங்களையும் அமைச்சா் தொடங்கிவைத்தாா்.
தொடா்ந்து, கோவை மாவட்டத்தின் சிறப்புகள் குறித்த சுற்றுலா புகைப்பட கண்காட்சிை. அமைச்சா் பாா்வையிட்டாா். இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலா் எம்.சேக் மன்சூா், மாவட்ட சுற்றுலா அலுவலா் ஜெகதீஸ்வரி, சுற்றுலா தொழில் முனைவோா்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.